எழுதியது: சிறி சரவணா
ஏபோலா எதிர்ப்பு வெற்றி 100%
சென்ற வருடத்தில் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியது இந்த ஏபோலா வைரஸ். ஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின. பல்வேறு பட்ட ஆய்வாளர்கள் குழு ஏபோலா வைரஸிற்கு தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஆய்வில் இறங்கி. தற்போது வெற்றியும் அடைந்துள்ளனர்.
ஏபோலா வைரசிற்கான புதிய தடுப்பூசி 100% வெற்றியளித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இதனை 4000 இற்கும் மேற்பட்ட கினி மக்களிடம் பரிசோதனை செய்துள்ளனர். கினியில் மட்டும் 28000 மக்கள் ஏபோலா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மற்றைய ஆபிரிக்க நாடுகளுடன் சேர்த்து இதுவரை 11000 பேர் இறந்துள்ளதும் குறிபிடத்தக்கது.
இந்த VSV-ZEBOV என்ற தடுப்பூசி ஆபத்பாண்டவராகவந்து மக்களை காப்பாற்றட்டும்.
நாசாவின் புறவிண்மீன் கோள்கள் கண்டுபிடிப்புக்கள்
பூமியைத்தான் எல்லாம் சுற்றிவருகின்றன என்று தொடங்கி, பின்னர் சூரியன், அதனைத் தொடர்ந்து கோள்கள் இப்படியெல்லாம் போய், தற்போது நாம், வேறு விண்மீன்களை சுற்றி வரும் கோள்களை கண்டறியத்தொடங்கிவிட்டோம். அதில் தற்போதைய புதிய செய்தி, பூமியைப் போலவே ஒரு கோளை நாசா கண்டறிந்துள்ளது.
இங்கிருந்து 1400 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீனை இந்தக் கோள் சுற்றிவருகிறதாம். இதில் என்ன ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்றால், இந்த கோள் நம் பூமி சூரியனுக்கு எவ்வளவு தொலைவில் சுற்றுகிறதோ, அதேபோல அதனது விண்மீனை சரியான தொலைவில் சுற்றுகிறது. ஆக இங்கு நீர் திரவநிலையில் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இதைப் பற்றி விரிவான கட்டுரை இதோ நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு
வால்வெள்ளியில் சேதன மூலக்கூறுகள்
கடந்த நவம்பர் மாதத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகத்தின் ரொசெட்டா என்ற திட்டத்தின் கீழ், பிலி (philae) என்ற தரையிறங்கி Comet 67P/Churyumov-Gerasimenko என்ற வால்வெள்ளியில் தரையிறங்கியது. வெற்றிகரமாக தரையிரங்கினாலும் அதனால் தொடர்ந்து இணைப்பில் இருக்கமுடியவில்லை.
ஆனால் அது தரையிறங்கிய முதல் 60 மணிநேரத்தில் செய்த ஆய்வுகளின் முடிவுகள் தற்போது ஆய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் மிக முக்கியமானது, இந்த வால்வெள்ளியில் கறுப்புநிற மணல் போன்ற சேதனப்பொருள் காணப்படுவதை பிலி கண்டறிந்துள்ளது. இந்த மணல் போன்ற அமைப்பு ஒளியை உருஞ்சும் தன்மையைக் கொண்டிருக்கிறதாம்.
சேதன மூலக்கூறுகள் தானே உயிரின் அடிப்படிக் கட்டமைப்பு! பிலி மீண்டும் உயிர்த்தெழுந்தால் நமக்கு இன்னும் பல ரகசியங்கள் தெரியவரும்!
இண்டேல்லின் 1000 மடங்கு வேகம்கொண்ட நினைவக சிப்கள்
இன்டெல் புதிதாக நினைவகசிப் ஒன்றை உருவாக்கியுள்ளது. 3D XPoint எனப்படும் இந்த நினைவகம், தற்போதுள்ள நினைவகங்களை விட 1000 மடங்கு வேகமாக செயற்படும்.
தற்போது நாம் பயன்படுத்திவரும் NAND வகை நினைவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மூன்று தசாப்தங்கள் ஆகின்றன. இன்டேல்லின் புதிய 3D XPoint வகை நினைவகமே அதற்குப் பின் உருவாக்கப்பட்ட புதியவகை நினைவகமாகும். அதுமட்டுமல்லாது, NAND வகை நினைவகங்களை விட இந்த நினைவகங்கள் அடர்த்தி கூடியவயாகையால், நினைவகங்களின் அளவு எதிர்காலத்தில் இன்னும் சிறிதாகலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
விண்டோஸ் 10 : கணனிகளின் வரலாற்றில் ஒரு புதிய மாற்றம்
கடந்த மாதம் 29 ஆம் திகதி, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 வெளியானது. வெளியானதில் இருந்து பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்தும் நேர்மறையான கருத்துக்களே வருகின்றன, நல்ல விடயம்.
விண்டோஸ் 8 இல் மைக்ரோசாப்ட் விட்ட தவறுகளை இதில் திருத்தியிருகின்றனர். மற்றும் தொடர்ந்து புதிய வசதிகளை சேர்த்துக்கொண்டே இருப்போம் என்று விண்டோஸ் குழு அறிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் பெரிய அடுத்த அப்டேட் வருகிறது, பார்ப்போம்.
விண்டோஸ் 10, ஏற்கனவே விண்டோஸ் 7, 8, 8.1 வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகக் கிடைப்பதும் ஒரு கூடுதல் மகிழ்ச்சி. இதுவரை 67 மில்லியனுக்கும் மேற்பட்ட கணனிகளில் விண்டோஸ் 10 நிருவப்பட்டுள்ளதாம்.
விண்டோஸ் 10 இல் இருக்கும் புதிய வசதிகளைப் பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கலாம் – விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை
கதைசொல்லும் படம்
படத்தில் நீங்கள் பார்ப்பது நம் நிலவுதான். ஆனால் சற்று கவனித்துப் பாருங்கள்! நிலவின் நடுப்பகுதியில் கறுப்பாக ஒரு புள்ளி தெரிகிறதா? அதுதான் சர்வதேச விண்வெளி நிலையம்.
சர்வதேச விண்வெளி நிலையம் (international space station) நிலவைக் குறுக்கறுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
நிலவு எவ்வளவு அற்புதமாக மற்றும் பிரமாண்டமாக இருக்கிறது பார்த்தீர்களா?