சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் இல் திரவ நிலையில் நீர் இருப்பதை சென்ற வருடத்தில் கசினி விண்கலம் கண்டறிந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  தற்போது கசினி விண்கலம் அனுப்பியுள்ள தகவலைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், என்சிலாடஸ் முழுவதும், மேட்பரபிற்குக் கீழ் பாரிய சமுத்திரம் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வாளர்கள் இந்தத் துணைக்கோள் சனியைச் சுற்றிவரும்போது அது அசையும் விதத்தைக் கணக்கிட்டு, என்சிலாடசின் மேற்பரப்பில் உள்ள பனிப்பாறை அதற்குக்கீழே உள்ள நீரில் மிதந்துகொண்டு இருக்கவேண்டும் என்று கண்டறிந்துள்ளனர்.

என்சிலாடசின் தெற்குத் துருவப்பகுதியில் கடந்த வருடத்தில் கசினி கண்டறிந்த நீராவி ஊற்றுக்கான நீர், இந்த மறைந்த சமுத்திர நீரில் இருந்துதான் வந்திருக்கவேண்டும். ஆரம்பத்தில் தெற்குப் பகுதியில் மட்டுமே, குழிவான வடிவில் நீர் திரவநிலையில் இருக்கலாம் என்று கசினி அனுப்பிய தகவலைக்கொண்டு ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் கசினி விண்கலம் என்சிலாடஸ்ஸின் அருகில் பல முறை சென்று அதன் ஈர்ப்பு விசை பற்றி சேகரித்த தகவலைக் கொண்டு பார்க்கும் போது என்சிலாடஸ்சில் தென் துருவத்தில் மட்டுமில்லாமல், முழுக்கோள் அளவிலும் ஒரு பாரிய சமுத்திரம் இருக்கவேண்டும் என்பதாகும்.

pia19656_labeled
நன்றி: NASA/JPL-Caltech

ஆனாலும் இதனைக் கண்டறிவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. பல வருட ஆய்வில் கிடைக்கப்பெற்ற தகவல்களை, பல்வேறு விஞ்ஞான மற்றும் கணிதவியல் கணக்கீட்டுகளில் பொருத்தி இந்த இறுதி முடிவைப் பெற்றுள்ளதாக கசினி விண்கலம் அனுப்பும் தகவலை ஆய்வு செய்யும் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கசினி விஞ்ஞானிகள் அண்ணளவாக ஏழு வருடமாக கசினி சேகரித்த தகவலைக்கொண்டு இந்த முடிவைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கசினி விண்கலம் 2004 இல் இருந்து சனியைச் சுற்றிவருகிறது. அப்போது அது என்சிலாடஸ் துணைக்கோள் சனியைச் சுற்றிவரும் போது அதன் தள்ளாட்டம் (wobble) பற்றிய தகவலைச்சேகரித்துக்கொண்டது.

இந்தத் தள்ளாட்டம் உருவாகும் காரணம் பற்றி ஆய்வு செய்ய, கசினி விஞ்ஞானிகள் குழு பல்வேறுபட்ட மாதிரிகளை உருவாக்கியது. ஒன்று என்சிலாடஸ் மேற்பரப்பில் இருந்து அதன் அகப்புறம் முழுவதும் உறைந்த நிலையில் இருக்கும் படியான ஒரு மாதிரி, மற்றயது மேட்பரப்பிற்குக் கீழே திரவநிலையில் சமுத்திரம், இப்படி இன்னும் சில மாதிரிகள்.

அதன் பின்னர் உண்மையிலேயே என்சிலாடஸ்சில் அவதானிக்கப்பட்ட தள்ளாட்டம், எந்த மாதிரிக்குப் பொருந்துகிறது என்று இவர்கள் ஆய்வு செய்தனர். உதாரணமாக மேற்பரப்பில் இருந்து மையப்பகுதிவரை முழுவதும் உறைந்த நிலையில் திண்மமாக இருக்கும் நிலையில், என்சிலாடஸ்ஸின் தள்ளாட்டம் அவதானிக்கப்பட்ட அளவு இருக்கமுடியாது! ஆகவே நிச்சயம் மேட்பரபிற்குக் கீழே பூரணமான திரவம் இருக்கவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் முடிவு.

ஆனால் எப்படி மேட்பரபிற்குக்கீழே திரவ நிலையில் அதிகளவான நீர் இருக்கமுடியும்? அதகான காரணம் என்ன என்பது இன்னமும் விடை காணப்படாத கேள்விக்குறியாகவே இருக்கிறது. சில ஆய்வாளர்கள், சனியின் ஈர்ப்புவிசையால் என்சிலாடஸ்சில் உருவாகும் உராய்வுவிசை ஏற்கனவே கணக்கிட்டதை விட அதிகளவாக வெப்பத்தை உருவாக்கவேண்டும் என்கின்றனர்.

கசினி விண்கலம் அக்டோபர் 28 இல் என்சிலாடஸ்சிற்கு மிக அருகில் செல்லும், அதாவது என்சிலாடஸ்ஸின் மேட்பரபிற்கு வெறும் 49 கிமீ உயரத்தில் கசினி விண்கலம் பறக்கும்! அப்போது மேலும் புதிய தரவுகள் பதிவுசெய்யப்படும்.

கசினி விண்கலம் மற்றும் திட்டம் NASA, ESA மற்றும் இத்தாலிய விண்வெளிக் கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.

கசினி திட்டத்தைப் பற்றி மேலும் அறிய (ஆங்கிலத்தில்) http://www.nasa.gov/cassini

Previous articleமீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்
Next articleசெவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்