செவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்

எழுதியது: சிறி சரவணா

செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை நீண்டகாலமாக நாம் அறிவோம், ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாயின் மேற்பரப்பில் நீர் திரவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

நாசாவின் Mars Reconnaissance Orbiter (MRO) என்ற விண்கலத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை நாசா வெளியிட்டுள்ளது.

MRO இல் உள்ள புகைப்பட நிறமாலைமானி மூலம் செவ்வாயின் மேற்பரப்பை அவதானித்தபோது அங்குள்ள கனிமங்களில் நீர் சேர்ந்திருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. இந்த கனிமங்கள் இருக்கும் சரிவான மலைப்பகுதிகளில் நீளமான மர்மக்கோடுகள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த கருமைநிற கோடுகள், காலப்போக்கில் சிறிதாகிப் பெரிதாக மாற்றம் அடைவதையும் ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். செவ்வாயில் வெப்பமான பருவகாலப் பகுதிகளில் இந்தக்கோடுகள் போன்ற அமைப்பு மேலும் கறுப்பாகி, மலைச்சரிவின் மேலிருந்து கீழ்நோக்கி செல்வது தெரிகிறது. அதேபோல குளிரான பருவகாலப் பகுதிகளில் இந்தக் கோடுகள் உறைந்து விடுகின்றன.

செவ்வாயின் வெப்பநிலை -23பாகை செல்சியஸ் (minus 23 degree Celsius) இற்கும் அதிகமாக இருக்கும்போது பல்வேறு பகுதிகளிலும் இப்படியாக கோடுகள் தென்படும் அதேவேளை, வெப்பநிலை குறையும் பொது இவை மறைந்துவிடுகின்றன.

15-195_perspective_2

விண்வெளி வீரரும், நாசாநிர்வாகியுமான ஜான் க்ரன்ஸ்பீல்ட், “இந்தப் பிரபஞ்சத்தில் உயிரைத் தேடித் பயணிக்கும்போது எமது முக்கிய இலக்கு நீர் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்வதே, செவ்வாயிலும் அதனையே நாம் பின்பற்றினோம், தற்போது எமக்கு அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது” என்றார்.

தற்போதும் செவ்வாயில் நீர் அதன் மேற்பரப்பில் திரவமாக இருப்பது என்பது அறிவியல் பார்வையில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

செவ்வாய் ஆய்வாளர்களுக்கு இந்த சரிவான மலைகளும் அதம் மேலே உள்ள கருப்பான அமைப்புகளும் பல காலமாகவே பரிட்சியமாக இருந்துள்ளது. இதனை இவர்கள் recurring slope lineae (RSL) என அழைக்கின்றனர். அதேபோல இந்த பருவகாலதிற்கு ஏற்ப மாறுபடும் அமைப்புக்களுக்கும் நீரிற்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்பது இவர்களின் கருத்தாக இருந்துவந்துள்ளது. ஆனாலும் புதிய கண்டுபிடிப்பே இந்தச் சரிவுகளில் இருக்கும் உப்புக்களில் நீர் இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மற்றும் இந்த உப்புக்களுக்கும் கருப்புநிற கோடுகளுக்கும் உள்ள தொடர்பும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் சேர்ந்த உப்புக்கள், உப்புநீரின் உறைநிலையை குறைத்துள்ளது. நீங்கள் பாடசாலையில் உப்புநீரின் உறைநிலை வெப்பநிலை சாதாரண நீரின் வெப்பநிலையை விடக்குறைவு எனப் படித்திருப்பீர்கள். அதேபோல பரிசோதனைகளும் செய்திருப்பீர்கள். செவ்வாயிலும் அதுபோலவே நடைபெறுகிறது.

இந்த உறைநிலை குறைந்த உப்புநீர் செவ்வாயின் சரிவான மேற்பரப்பில் வழிந்தோடும் போது, அது அவ்விடத்தை ஈரப்படுத்துவதால் அவ்விடம் பார்க்க கருமையாகத் தெரிகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த நீர் கலந்த உப்பிற்கு நீர் எப்படி வந்தது என்று பார்க்கும் போது, இந்த நீர் கலந்த உப்பு, பரவலான பருவகால மாற்றத்தின் போது மட்டுமே ஏற்படுவதால், இந்த கருப்புநிற கோடுகள் அல்லது அதனை உருவாக்கும் செயன்முறையே இந்த நீரிற்குக் காரணமாக இருக்கமுடியும். எப்படியிருப்பினும், இந்தக் கோடுகளில் நீர் இருப்பது, இந்தக் கோடுகளின் அமைப்புக்களை உருவாக்குவதில் பாரிய செல்வாக்குச் செலுத்தியுள்ளது எனலாம்.

முதன்முதலில் 2010 இல் தான் இந்த சரிவான பகுதிகளில் கருப்புநிறக் கோடுகள் கடுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் MRO வின் Compact Reconnaissance Imaging Spectrometer for Mars (CRISM) என்னும் கருவியைப் பயன்படுத்தி அங்குள்ள உப்புக்களை படமிட்டுள்ளனர்.

இந்த நிறமாலைமானியின் மூலம் பெறப்பட்ட தகவல்களில் பல்வேறுபட்ட RSL பகுதிகளில் நீர் சேர்ந்த உப்புக்கள் காணப்படுவது தெரிகிறது. ஆனால் அகலமான கறுப்புக் கோடுகள் போன்ற அமைப்புக் காணப்படும் பகுதிகளில் மட்டுமே இப்படியான நீர் சேர்ந்த உப்புக்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அகலமான கருப்புநிறக்கோடுகள் போன்ற அமைப்புக்கள் காணப்படாத பகுதிகளை ஆய்வுசெயதபோது நீர் சேர்ந்த உப்புக்கள் அங்கு தென்படவில்லை.

இந்த உப்புக்களை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் இதனை ‘பரக்குளோரைட்டு’ (perchlorates) என வகைப்படுத்தியுள்ளனர். இந்த நீர் சேர்ந்த உப்புக்கள் பெரும்பாலும் மக்னீசியம் பரகுளோரைட்டு, மக்னீசியம் குளோரைட்டு மற்றும் சோடியம் பரகுளோரைட்டு ஆகியவற்றின் கலவையாக இருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

சில பரகுளோரைட்டுக்கள் -70 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலும் நீரை திரவமாக வைத்திருக்கக்கூடிய பண்பைக்கொண்டுள்ளன. பூமியில் இயற்கையாக உருவாகியிருக்கும் பரகுளோரைட்டுக்கள் பாலைவனங்களில் செறிவாகக் காணப்படுகின்றன.

பரகுளோரைட்டுக்கள் ஏற்கனவே செவ்வாயில் நாசாவின் பீனிக்ஸ் தரையிறங்கி, மற்றும் கியுரியோசிட்டி தளவுளவி ஆகியவற்றால் கண்டறியப்பட்டுள்ளது. சில நாசா விஞ்ஞானிகள், 1970 களில் அனுப்பிய வைக்கிங் விண்கலங்கள் இந்த உப்புக்களை அப்போதேயே அளவிட்டிருந்தது என்று கருதுகின்றனர். ஆனால் எப்படியிருப்பினும், தற்போது கண்டறியப்பட்ட நீர் சேர்ந்த உப்புக்கள் இருக்கும் RSL பகுதி இதற்கு முன்னர் எந்தவொரு தளவுளவி மற்றும் தரையிறங்கி மூலம் பரிசோதிக்கப்படாத செவ்வாயின் பகுதியாகும். மேலும் செவ்வாயை சுற்றிவரும் விண்கலம் ஒன்றில் இருந்து பரகுளோரைட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

MRO செவ்வாயை 2006 இல் இருந்து ஆய்வு செய்துவருகிறது. இது 6 விஞ்ஞானக்கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக “செவ்வாயில் நீர்” என்பதனைப்பற்றிப் பேசும்போது, முன்பொரு காலத்தில் இருந்த நீர் அல்லது உறைந்த நிலையில் இருக்கும் நீர் என்பதனைப் பற்றியே இதுவரை நாம் பேசியுள்ளோம், ஆனால் இன்று செவ்வாயில் திரவநிலையில் நீர் இருப்பது என்பது புதிய தகவல் மட்டுமின்றி செவ்வாயைப்பற்றிய எமது அறிவை மாற்றப்போகும் விடயமாகவும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

தகவல், படங்கள்: நாசா