48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய கற்பமான குதிரை எலும்பு கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் 48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குதிரை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியவிடயம் இந்தக் குதிரை கற்பமாக இருந்துள்ளதுடன், அதன் குட்டியின் திசுக்கள் மற்றும் எலும்புகள் சில அப்படியே பாதுகாப்பாகவும் இருகின்றது.

கடந்த வருடத்தில் முள்ளந்தண்டுள்ள தொல்லுயிரியல் கழகத்தின் கூட்டத்தில் இந்தக் குதிரையின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டாலும், புதிய ஆய்வு முடிவுகள், தாய்க்குதிரையின் கருப்பை சார்ந்த பகுதிகளில் இருக்கும் சிதையாத திசுக்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான உயிரினங்களில் மிகப்பழைய படிமமாகும் எனக் கூறுகின்றது.

மற்றும் தாய்க் குதிரையின் வயிற்றில் இருக்கும் குட்டிக்குதிரையே இதுவரை கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் மிகப்பழைய குட்டிக்குதிரைப் படிமமாகும். அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி (scanning electron microscope) மூலம் இந்தப் படிமத்தை ஆய்வாளர்கள் ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்ததில், அண்ணளவாக 5 இன்ச் நீளமுள்ள குதிரைக்குட்டி அப்படியே ஏதாவொரு பாதிப்பும் இன்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதன் தலைப் பகுதியில் மட்டுமே சிறிதாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி: FRANZEN ET AL./SENCKENBERG FORSCHUNGSINSTITUT FRANKFURT, SVEN TRÄNKNER
நன்றி: FRANZEN ET AL./SENCKENBERG FORSCHUNGSINSTITUT FRANKFURT, SVEN TRÄNKNER

Eurohippus messelensis எனப்படும் இனத்தைச் சேர்ந்த தாய்க் குதிரை, பிரசவத்திற்கு சற்று முன்னர்தான் இறந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் பிரசவ வலியினால் தாய்க்குதிரை இறக்கவில்லை; அதற்கான காரணம் சரியாகப் புலப்படவில்லை.

எப்படியிருப்பினும் அந்தப் பிரதேசத்தில் குறித்த காலத்தில் பல்வேறுபட்ட உயிரினங்கள் மூச்சுத்தினரலினால் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேசல் ஏரிப்பகுதியில், அதாவது இந்தக் குதிரையின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில், இந்தக் குதிரை வாழ்ந்த காலத்தில் எரிமலை வெடிப்பின் காரணமாக அடிக்கடி நச்சுத்தன்மையான காபனீர்ஆக்ஸைடு வாயு அதிகளவாக வெளிவிடப்பட்டுள்ளது. இந்த அளவுக்கதிகமான காபனீர்ஆக்ஸைடு வாயு தாய்க் குதிரையைக் கொன்றிருக்கலாம்.

Eurohippus messelensis எனப்படும் இனம் தற்போது முற்றாக அழிந்துவிட்டது. தற்போதைய குதிரைகளைவிட இவை அளவில் சிறியவை.

ஆனாலும் இவற்றின் கருப்பப்பை மற்றும் குட்டிக்குதிரையின் அமைப்பு என்பன, பேலியோசீன் காலத்திலேயே (60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்) தற்கால குதிரைகளுக்கு இருக்கும் இனப்பெருக்கத் தொகுதிபோல விருத்தியடைந்து இருந்தது என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

தகவல்: discovery news