இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்காத விண்மீன் பேரடைகளைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு விண்மீன் பேரடையும் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ளது. பிரபஞ்சம் உருவாகி அதன் பின்னர் அது குளிர்வடைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் ஒன்று சேர்ந்து விண்மீன்கள் உருவாகின.
எப்போதுமே எமக்கு இருக்கும் கேள்வி, இந்தப் பிரபஞ்சம் உருவாகி எவ்வளவு காலத்தில் முதலாவது விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் உருவாகின என்பதுதான்.
பூமிக்கு மேலே சுற்றிவரும் ஹபிள் விண்ணியல் தொலைநோக்கி நம் பிரபஞ்சத்தின் மிகத் தொலைவுவரை பார்த்துள்ளது. நாம் வானத்தில் தொலைவில் உள்ள ப்ரோ பொருளைப் பார்க்கும் போது இறந்த காலத்தை நோக்கிச் செல்கிறோம் என்பதே உண்மை. ஆகவே ஹபிள் இந்தப் பிரபஞ்சம் தோன்றி சில மில்லியன் வருடங்கள் இருக்கும் போது எப்படி இருந்தது என்று பார்த்துள்ளது எனலாம்.
அப்படிப்பட்ட விண்மீன்கள் அற்ற ஆரம்பக்காலப் பகுதியில், விண்மீன்கள் உருவாகும் ஒரு பிரதேசத்தை ஹபிள் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் உள்ள விண்மீன்கள், பிரபஞ்சம் தோன்றி வெறும் 500 மில்லியன் வருடங்களுக்குள் உருவாகி இருக்கவேண்டும் என்று விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆதிகால விண்மீன்களில் இருந்துவரும் ஒளி அண்ணளவாக பிரபஞ்சம் தோன்றி 250 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு அதில் இருந்த வெப்பமான அயனாக்கப்பட்ட வாயுக்கள், பல நூறாயிரம் வருடங்களாக குளிர்வடைந்து ஒடுங்கி பாரிய ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் வாயு மேகங்களாக உருவாகி இவற்றில் இருந்து இந்த ஆதிகால விண்மீன்கள் தோன்றி அவற்றில் இருந்து வந்தன.
இப்படி ஆதிகால விண்மீன்களில் இருந்துவரும் ஒளியைக் கண்டறிவது மிக மிகக் கடினமாக ஒரு காரியமாகும். இதற்குக் காரணம் இந்தப் பிரபபஞ்சதில் அதற்குப் பின்னர் உருவாகிய விண்மீன்களும் இருப்பதால், இந்தப் பழைய விண்மீன்களில் இருந்து வரும் ஒளியை அவற்றின் ஒளி மறைக்ககூடும்.
Cosmic Assembly Near-Infrared Deep Extragalactic Legacy Survey (CANDELS) மற்றும் Great Observatories Origins Deep Survey (GOODS) ஆகிய ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கவனமாகப் பழைய விண்மீன்களில் இருந்துவரும் ஒளியைப் பிரித்து எடுத்துள்ளனர்.
தற்போது ஹபிள் எடுத்த புகைப்படத்தில் இருக்கும் விண்மீன்களில் இருந்துவரும் ஒளியே இதுவரை நாம் அவதானித்த மிகப்பழைய விண்மீன்களின் ஒளியாகும்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹபில் தொலைநோக்கி 2002 தொடக்கம் 2012 வரை எடுத்த புகைப்படங்களை தெளிவாக ஆராய்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்களில், வெறுமையான பகுதியைத் தெரிவுசெய்து அந்தப் பிரதேசத்தில் எதாவது ஒளிப்புள்ளிகள் தெரிகிறதா என கணக்கிட்டுள்ளனர். அதன் பின்னர், நமது பால்வீதியில் இருக்கும் விண்மீன்களால் உருவான வெளிச்சத்தை அதிலிருந்து கழித்து, பின்னர் அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் வெளிச்சத்தையும் அதில் இருந்து கழித்து, மேலும் துல்லியத் தன்மையை அதிகரிக்க, விண்மீன் பேரடைகளில் இல்லாத தனியான விண்மீன்களில் இருந்துவரும் ஒளியையும் கழித்து இறுதியில் ஆதிகால விண்மீன்களில் இருந்துவந்த ஒளி மட்டும் இருக்கும் வரை இந்த செயன்முறையைச் செய்துள்ளனர்.
இவர்களது இந்த முறை ஒரு புதிய முயற்சி மட்டுமன்றி, மிக மிகக் கடினமான ஒன்று என மற்றைய ஆய்வாளர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த மாணவர்கள் சிரமப்பட்டு இதனைச் செய்துள்ளனர்.
இந்த ஆதிகால விண்மீன்களைப் பற்றிப் பார்க்கும் போது இவை வெறுமனே ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களால் மட்டுமே ஆக்கப்பட்டிருந்தன. மற்றும் நமது சூரியனைப் போல ஆயிரக்கணக்கான மடங்கு திணிவுடையதாக இருந்ததுடன், மிகப்பிரகாசமாக, வேகமாக எரிந்து தனது வாழ்க்கைக்காலத்தை முடித்துக்கொண்டன. இவை உருவாகும் போது ஒரு பாரிய ஒளிக்கீற்றுடன் உருவாகியதாகவும், இந்தப் பழைய ஒளியை மேலும் பிரித்து ஆய்வுசெய்தால் இந்தப் பிரகாசமான ஒளிக்கீற்றை கண்டறியலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன்களைப் பற்றி நாம் அறிவது இந்தப் பிரபஞ்சம் எப்படி வளர்ந்து வந்தது என்பதனை தெளிவாகப் படிக்க உதவும். நமக்கு ஏற்கனவே ஆதிகால விண்மீன்கள் பிரபஞ்சம் உருவாக்கி 500 மில்லியன் வருடங்களுக்குள் உருவாகியிருக்க வேண்டும் என்று தெரியும். தற்போது கண்டறியப்பட்ட முடிவுகள் அதனை உறுதிப்படுத்தினாலும், இன்னும் துல்லியமாக இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதனை கணக்கிடவேண்டும்.
ஆதிகால விண்மீன்கள் அவை வெளியிட்ட புறவூதாக் கதிர்கள் மூலம் அதன் சுற்றுப்புறத்தைச் சூடாக்கி, அங்கிருந்த ஹைட்ரோஜன் வாயுக்களை மீண்டும் அயன்களாக மாற்றின. அதாவது பிரபஞ்சம் உருவாகியபோது எப்படி வாயுக்கள் அயன்களாக இருந்ததோ அதேபோல. ஆகவே பெரும்பாலான விண்ணியலாளர்கள் இந்தப் பழைய விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகளே வாயுக்களை மீண்டும் அயன்களாக மாற்றியதில் பாரிய செல்வாக்குச் செலுத்தின எனக் கருதுகின்றனர்.
ஆனாலும் சில ஆய்வாளர்கள், இந்த விண்மீன் பேரடைகளைவிடவும் வேறு சில செயன்முறைகள் மீள் அயனாக்கலில் செல்வாக்குச் செலுத்தி இருக்கவேண்டும் எனக் கருதுகின்றனர்.
2018 இல் நாசா ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பும். இது ஹபிள் தொலைநோக்கியைவிடப் பெரியது. ஆகவே இது நமக்கு மேலதிக தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பிரபஞ்சத்தின் ஆரம்பக்கால முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் நேரம் வெகுதொலைவில் இல்லை.
தகவல்: scientificamerican
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam