சாத்தியமற்ற ஏலியன்ஸ் படையெடுப்பு

விண்ணியல் துறையில் நாம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்றுவரை நாம் வேறு ஒரு வேற்றுலக நாகரீகத்தோடு (alien civilization) தொடர்பை ஏற்படுத்தவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஏலியன்ஸ் இருகிறார்களா இல்லையா என்றே எமக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை. எப்படியிருப்பினும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் எமது நாகரீகத்தைப் பற்றியும் நாம் அறிந்தவரையில் இப்படியான வேற்றுலக நாகரீகங்கள் எப்படியிருக்கலாம் என்று எம்மால் யூகிக்க முடியும்.

1960களில் விஞ்ஞானி ஒருவர், எம்மைவிடத் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த வேற்றுலக நாகரீகங்கள் இருக்கின்றார்களா என்று சிந்திக்கத்தொடங்கினார். இந்த நாகரீகங்கள் பயன்படுத்தும் சக்தியின் அளவைக்கொண்டு அவர்களை வகைப்படுத்தக்கூடிய ஒரு அளவுத்திட்டத்தையும் அவர் உருவாக்கினார்.

நன்றி: Chris Cold
நன்றி: Chris Cold

இவரது அளவுத்திட்டத்தில் 1 இல் இருந்து 3 வரை வேறுபட்ட நாகரீகங்கள் உண்டு. முதலாவது வகை (Type 1) நாகரீகங்கள் பூமியில் உள்ள மனிதர்களது தொழில்நுட்பத்திற்கு அருகில் இருக்கக்கூடிய நாகரீகங்கள் ஆகும். இந்த நாகரீகங்கள், தங்கள் கோளில் இருந்தே அவர்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்வார்கள். உதாரணமாக காலநிலை, பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்றவற்றில் இருந்து சக்தியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருப்பர். மற்றும் கோளில் உள்ள ஒவ்வொரு இன்ச் நிலப்பரப்பையும் பயன்படுத்துவர். அதாவது கடலிலும், சமுத்திரங்களிலும் நகரங்களைக் கட்டுவர்.

அடுத்த வகை நாகரீகம் (Type 2) தனது கோளையும் தாண்டி, அதனது சூரியனில் இருந்து வரும் அனைத்து சக்தியையும் பெற்றுக்கொள்வார்கள். இப்படியான அளவுக்கதிகமான சக்தியைப் பயன்படுத்தி மிகச் சக்திவாய்ந்த சூப்பர்கணனிகள் மற்றும் விண்வெளிப் பயணம் என்பவற்றை இவர்களால் இலகுவாகச் செய்யமுடியும்.

இப்படியே படிப்படியாக வளர்ந்து அடுத்ததாக மூன்றாம் வகை (Type 3) நாகரீகமாக மாறும் – இதனை சூப்பர் நாகரீகம் என்று கூறலாம். இந்த நாகரீகங்கள் மிக மிகச் சக்திவாய்ந்தவை. இவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப்பாரிய தொலைவு சென்றுவிட்டவர்கள். தங்களது சூரியனை மட்டும் பயன்படுத்தாமல், மொத்த விண்மீன் பேரடையில் இருக்கும் அனைத்த் விண்மீன்களில் இருந்தும் சக்தியைப் பெற்றுக் கொள்வார்கள். பெரும்பாலும் குறிப்பிட்ட விண்மீன் பேரடையில் உள்ள அனைத்து விண்மீன் தொகுதிகளிலும் இவர்கள் குடியமர்ந்து விடுவார்கள்;  பில்லியன் கணக்கான விண்மீன்களில் இருந்து சக்தியைப் பெறுவார்கள்.

எம்மைப்போன்ற ஒரு வெளிப்பார்வையாளருக்கு இந்த மூன்றாம் வகை நாகரீகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட விண்மீன் பேரடை பார்வைக்கு புலப்படாததாகவே இருக்கும். எம்மால் அவதானிக்கக்கூடியது வெறும் வெப்பத்தை மட்டுமே.

புதிய ஆய்வு முடிவுகளின் படி, எமது பால்வீதிக்கு அருகில் மூன்றாம் வகை நாகரீகங்கள் இல்லை, ஏனென்றால் எம்மால் எமக்கு அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் இருக்கும் விண்மீன்களைத் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் முதலாம் மற்றும் இரண்டாம் வகை வேற்றுலக நாகரீகங்கள் இருக்கலாம்…

மேலதிக தகவல்

நாம் இந்த அளவுத்திட்டதில் பூஜ்ஜிய வகையில் இருக்கிறோம். நாம் பூமியில் உள்ள கனிம எண்ணையில் இருந்தே சக்தியைப் பெறுகிறோம்; உதாரணமாக பெட்ரோல். மேலும் நீர், காற்று போன்றவற்றில் இருந்து சக்தியைப் பெற்றாலும் நாம் பூரணமாக அவற்றைப் பயன்படுத்துவதில்லை. எமது தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சனத்தொகை என்பவற்றைக் கருத்தில் கொண்டால், இன்னும் சில நூறு வருடங்களில் நாம் முதலாம் வகை நாகரீகமாக மாறிவிடுவோம்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://unawe.org/kids/unawe1543/