மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா

எழுதியது: சிறி சரவணா

இதுவரை மேற்கு அரைக்கோளத்தில் உருவாகிய ஹரிக்கன்/ சூராவளிகளிலே மிகப்பெரியது கடந்த வெள்ளிக்கிழமை மெக்ஸிகோவின் பசுபிக் கரையோரத்தை தாக்கிய பற்றிசியா என்கிற சூறாவளியாகும்.

வெப்பமண்டல புயலில் இருந்து ஐந்தாம் வகை சூறாவளியாக வெறும் 24 மணிநேரங்களில் மாறியது! சபீர்-சிம்சன் அளவுத்திட்டத்தில் ஐந்தாம் வகை சூறாவளியே மிகப்பெரியது! இதுவரை உருவாகிய சூராவளிகளிலேயே இவளவு வேகமாக எதுவுமே வளர்ச்சியடைந்தது இல்லை.

மெக்ஸிகோவை பற்றிசியா தாக்கும் போது அதன் வேகம் மணிக்கு 265 கிமீ ஆகும்.

ஹரிக்கேன் பற்றிசியாவின் அகச்சிவப்புப் புகைப்படம் நன்றி: PHOTOGRAPH BY NASA, UW/CIMSS/WILLIAM STRAKA III
ஹரிக்கேன் பற்றிசியாவின் அகச்சிவப்புப் புகைப்படம்
நன்றி: PHOTOGRAPH BY NASA, UW/CIMSS/WILLIAM STRAKA III

இந்த சூறாவளி எப்படி இவ்வளவு வேகமாக  வளர்ந்தது என்று ஆய்வாளர்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடுகின்றனர். MIT ஐ சேர்ந்த வளிமண்டல விஞ்ஞானி கேரி, மெக்ஸிகோவின் மேற்குக் கடற்பகுதியில் உள்ள ஆழமான நீரும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

சூறாவளி உருவாக்கி பெரிதாகும் போது, அதற்குக் கீழே இருக்கும் சமுத்திர நீரை கிளரும். இப்படியாக அது கீழே சென்றுகொண்டே இருக்கும். இது சமுத்திரத்தின் ஆழத்தில் உள்ள குளிர்ந்த நீரை மேற்பரப்புக்குக் கொண்டுவரும். வெப்பமண்டல சூறாவளிகள், வெப்பமான நீரில் தங்கியிருப்பதால், மேபரப்புக்கு வரும் குளிர்ந்த நீர் ஒரு தடுப்புப்போல செயற்பட்டு சூறாவளியின் வீரியத்தை மட்டுப்படுத்துகிறது.

ஆனால் பற்றிசியாவின் நிலைமை வேறு; பற்றிசியா உருவாகிய சமுத்திரப்பரப்பில் வெப்பமான நீர் கிட்டத்தட்ட 61 மீட்டார் ஆழம்வரை செல்கிறது. இது குளிர்ந்த நீரை மேபரப்புக்கு கொண்டுவருவதை தடுப்பதால் பற்றிசியாவின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் காரணி செயலிழந்துவிட்டது எனலாம்.

இந்த ஆழமான சூடான நீருக்குக் காரணம் இந்த வருடத்தின் எல்நினோ எனப்படும் காலநிலை அமைப்பு ஆகும். இது பசுபிக் சமுத்திரத்தில் வழமையான வெப்பநிலை கொண்ட நீரை விட அதிகமான வெப்பநிலை கொண்ட நீர் காணப்படும் நிலையைக் குறிக்கும்.

இதுவெறும் ஆரம்பம்தான் இனி நாம் இதம்னைவிட மிகப்பெரிய சூறாவளிகளை சந்திக்கப்போகிறோம் என்கிறார் மற்றொரு வளிமண்டல விஞ்ஞானி ஹெரன்டான். நமது சூறாவளி மற்றும் காலநிலை பற்றிய புரிதல் முழுமையாக இல்லை. ஆகவே எம்மால் எல்லாவற்றையும்  முன்கூட்டியே கணித்துவிடமுடியவில்லை.

ஹரிக்கேன் வகைகளிலேயே மிக உக்கிரமான ஹரிக்கேனாக பற்றிசியா இருப்பினும், இதுவரை வந்த சூறாவளிகளில் இது பெரியது அல்ல. 1979 அக்டோபர் மாதத்தில் ஜப்பானைத் தாக்கிய சுப்பர் டைபூன் டிப், இதுவரை வந்த வெப்பமண்டல சூரவளிகளியே வளிமண்டல அழுத்தத்தின் அடிப்படையில் மிகப்பெரியது. (டைபூன், ஹரிக்கேன், சைக்கிலோன் ஆகியவை வேறுபட்ட பிராந்தியப் பெயர்களாகும்)

வளிமண்டல அழுத்தமே சூறாவளியின் வீரியத்தை அளக்கப்பயன்படுகிறது. சூறாவளியின் மையத்தில் இருக்கும் அழுத்தத்தைப் பொறுத்து சூறாவளியின் வீரியம் மாறுபடும். அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் குறைய இருக்கிறதோ அந்தளவிற்கு சூறாவளியின் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.

சாதரணமாக வளிமண்டல அழுத்தம் 1000 மில்லிபார் ஆக இருக்கும். டைபூன் டிப் 870 மில்லிபார் அழுத்தத்தைக் கொண்டிருந்தது. பற்றிசியா 879 மில்லிபார் அழுத்தத்தைக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டைபூன் டிப்பின் காற்றுவேகம் மணிக்கு 306கிமீ வரை சென்றது. அதேபோல 2013 இல் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய சுப்பர் டைபூன் ஹையான்னின் அழுத்தம் 895 மில்லிபார் ஆக இருந்ததுடன் அதன் வேகம் மணிக்கு 315 கிமீ ஆக இருந்தது. அமெரிக்காவைத் தாக்கிய ஹரிக்கேன் கத்ரீனா 902 மில்லிபார் அழுததுடன் மணிக்கு 282 கிமீ வேகத்தில் வந்தது.

ஆனால் வெறும் வளிமண்டல அழுத்தத்தை மட்டுமே வைத்து சூறாவளிகளை அளப்பது என்பது சரியான முறை அல்ல; காரணம் கிழக்கு பசுபிக் சமுத்திர வளிமண்டல அழுத்தம் விட மேற்கு பசுபிக் சமுத்திர வளிமண்டல அழுத்தம் சற்றுக்குறைவாகும். ஆகவே சரியாக ஒரு சூறாவளியின் வீரியத்தை அளக்க அதனது மைய்யத்தில் இருக்கும் அழுத்தத்தையும் சுற்றுப்புற அழுத்தத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்கிறார் ஹெரன்டான்.

அப்படிப் பார்த்தல் ஹரிக்கேன் பற்றிசியா, சுப்பர் டைபூன் டிப் போலவே உக்கிரமான ஒன்றுதான்.

நன்றி: national geographic


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam