வால்வெள்ளியில் மதுசாரம்!

என்னடா தலைப்பே ஒரு மாதிரி இருக்கே என்று நீங்கள் கருதலாம், ஆனால் அதுதான் உண்மை. விஞ்ஞானிகள் லவ்ஜாய் (Lovjoy) என்கிற வால்வெள்ளி, எதில் அல்கஹோல் (ethyl alcohol) எனப்படும் மதுசாரத்தை வெளியிடுவத்தை அவதானித்துள்ளனர். பூமியில் மதுபானங்களில் பாவிக்கப்படும் மதுசாரமும் அதுதான்! அது மட்டுமல்லாது, glycolaldehyde எனப்படும் ஒரு வகையான சர்க்கரை மற்றும் 19 விதமான சேதன (organic) மூலப்பொருட்களையும் வெளியிடுகிறது இந்த வால்வெள்ளி.

இது பூமிக்கு வால்வெள்ளிகள் மூலமே சேதனப்பொருகள் வந்திருக்கக்கூடும் என்கிற கருத்தை வலுப்பெறச் செய்கிறது என்பதில் ஐயம் இல்லை.

இந்த லவ்ஜாய் என்கிற வால்வெள்ளியின் செயல்திறன் அதிகரிக்கும் போது ஒவ்வொரு செக்கனும் 500 மதுபான போத்தல்கள் அளவுள்ள மதுவை வெளியிடுகிறது என்று நிகோலாஸ் பீவர் என்னும் ஆய்வாளர் கூறுகிறார்.

லவ்ஜாய் வால்வெள்ளி. நன்றி: Gerald Rhemann
லவ்ஜாய் வால்வெள்ளி. நன்றி: Gerald Rhemann

கடந்த 2014 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட லவ்ஜாய் வால்வெள்ளி இந்த வருடம் ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு மிக அண்மையில் வந்தது. அப்போது உருவாகிய அதிகூடிய வெப்பநிலை காரணமாக அண்ணளவாக 15 தொன் அளவுள்ள நீர் மூலக்கூறுகளை ஒவ்வொரு செக்கனும் வெளியிட்டது. அதுமட்டுமல்லாது, பல்வேறு பட்ட வாயுக்கள் மற்றும் மூலக்கூறுகள் இந்தச் செயற்பாட்டின்போது வெளிவந்தது. அதனை ஸ்பெயினில் உள்ள வெளிட்டா ரேடியோ தொலைநோக்கி மூலம் நிகோலாஸ் பிவெர் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

ஒரு வால்வெள்ளி சூரியனுக்கு மிக அண்மையில் வரும் போது அதன் வெப்பநிலை அதிகரிப்பதால், வால்வெள்ளியின் மேற்பரப்பு வெப்பமடைந்து அதன் பாகங்கள் ஆவியாகத் தொடங்குகின்றன. வால்வெள்ளிகள் பெரும்பாலும் பனியால் ஆகப்படுள்ளதால் இந்த பனி உருகி நீராவியாக மாறுகின்றது. அதுவே வால்வெள்ளியின் வாலாக எமக்குத் தெரிகின்றது.

லவ்ஜாய் வால்வெள்ளியைப் பொறுத்தவரை அதனை சூடாக்குவதோடு மட்டும் சூரியனின் வேலை முடிந்துவிடவில்லை, மாறாக சூடாகியதால் வெளிவந்த மூலக்கூறுகள், சூரியனின் ஒளியில் பளபளக்கும். எப்படியென்றால், ஒவ்வொரு மூலக்கூறுகளும் வேறுபட்ட நுண்ணலை அதிர்வலைகளில் ஒளிரும், இதனைக் கொண்டு அந்த வால்வெள்ளியில் என்னென்ன மூலக்கூறுகள் இருக்கின்றன என்று எம்மால் அறிந்துகொள்ள முடியும்.

சூரியத் தொகுதி உருவாகிய காலத்திலேயே தோன்றிய வால்வெள்ளிகள் எமக்கு பல்வேறு அறிய தகவல்களை சொல்லுகின்றன. உதாரணமாக 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சூரியத் தொகுதி உருவாகிய காலப்பகுதிகளில் எப்படியான மூலக்கூறுகள் காணப்பட்டன மற்றும் கோள்களில் எப்படியான மூலபொருட்கள் இருந்தன என்று இவை நமக்கு சொல்லக்கூடும்.

பூமி உருவாகிய பின்னர் பல வால்வெள்ளிகள் பூமியில் மோதியிருக்கவேண்டும் என்று பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர், மேலும் இப்படியான வால்வெள்ளிகள் மூலமே பூமிக்குச் சேதன மூலபொருட்கள் மற்றும் நீர் வந்திருக்கவேண்டும் என்பதும் இவர்கள் கருத்து.

அதுமட்டுமல்லாது, உயிரின் அடிப்படை ஆரம்பக்காலமான DNA தோன்றிய போது இப்படியான வால்வெள்ளிகளில் இருந்து வந்த சிக்கலான மூலக்கூறுகள் அதற்கு உதவியிருக்கவேண்டும். பூமியில் காணப்பட்ட வெறும் நீர், கார்பன்மோனோ அக்ஸ்சைடு மற்றும் நைட்ரோஜன் போன்றவை மட்டுமே போதுமானதாக இருந்திருக்க முடியாது; மாறாக இந்த சிக்கலான சர்க்கரை மற்றும் புரத அடிப்படியான அமினோ அமிலங்கள் வால்வெள்ளிகளில் இருந்துவந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி இலகுவாக ஊருவாகியிருக்கலாம்.

இதனை மேற்கொண்டு ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் தயாராகின்றனர். இவர்களது அடுத்த நோக்கம், லவ்ஜாய் வால்வெள்ளியில் இருக்கும் மது, சர்க்கரை மற்றும் சேதன மூலபொருட்கள் சூரியத் தொகுதி உருவாகக் காரணமாக இருந்த ஆதி வாயுத் தொகுதியில் இருந்து வந்ததா அல்லது சூரியத் தொகுதி உருவாகிய பின்னர் வேறு எதாவது மூலத்தில் இருந்து இந்த வால்வெள்ளிகளுக்கு கிடைக்கப்பெற்றதா என்பதாகும்.

உபரித் தகவல்

சென்றவருடம் 67P/C-G என்கிறவால்வெள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய பீலி விண்கலம், அந்த வால்வெள்ளியில் 16 விதமான சேதன மூலபொருட்கள் இருப்பதை கண்டறிந்தது.

நன்றி: sciencealert


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam