இதுவரை பூமியில் ஐந்து உயிரினப் பேரழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலாவது, அண்ணளவாக 540 மில்லியன் வருடங்களுக்கு முன்பு எடியகரன் காலம் (Ediacaran period) முடிவுக்கு வந்த காலமாகும். பல மில்லியன் வருடங்களாக எந்தவொரு அழிவையும் சந்திக்காத முதலாவது பலகல அங்கிகள் பாரிய உயிரினப் பேரழிவை சந்தித்தது.
[பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்]
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள், இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.
புதிய விலங்குகள் மற்றும் உயிரினங்களின் மூலம் சூழலில் ஏற்பட்ட தாக்கம், இந்த எடியகரன் காலம் முடிவுக்கு வருவதற்கு காரணகர்த்தா ஆகியது.
சூழல் காரணிகளை மாற்றியமைத்து பாரிய உயிரினப் பேரழிவை உருவாகக்கூடிய சக்தி உயிரினங்களுக்கு உண்டு என்று எமக்குத் தெரிந்துகொள்ள பல காலம் எடுத்துள்ளது என சைமன் தராக் என்னும் உயிரியல் பேராசிரியர் கூறுகிறார். சிக்கலான பொறிமுறைகளைக் கொண்ட உயிரினங்கின் உருவாக்கம், சூலில் மாற்றங்களை ஏற்படுத்தி எடியகரன் எனப்படும் உலகின் முதலாவது பலகல அங்கியை முழுதாக இனவழிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இப்படியான உயிரினங்களை ecosystem engineers அதாவது சூழலியற் பொறியாளர்கள் என அழைக்கலாம் என்கிறார் சைமன்.
அண்ணளவாக 600 மில்லயன் வருடங்களுக்கு முன்பு, நுண்ணுயிர்களில் இருந்து எடியகரன் பரிமாண வளர்ச்சியடைந்தது. இவை அளவில் பெரிய, அதிகம் இடம்பெயராத கடல்வாழ் உயிரினங்களாகும். வேறுபட்ட வடிவங்களில் காணப்பட்ட இந்த உயிரினங்களின் படிமங்களை நாம் இப்போது பார்க்கிறோம்.

இவை கோது அல்லது ஷெல் போன்ற கடினமான புற அமைப்பை உருவாக்காததால், மண் மற்றும் தூசுகளில் படிந்துள்ள இவற்றின் படிமங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மட்டுமே எமக்குத் தற்போது உண்டு.
தெற்கு நமிபியா பகுதிகளில் கிடைக்கபெற்ற எடியகரன் படிமங்களை வைத்து ஆய்வு செய்த போது அவை அழிவுக்குக் காரணமான ஆதி மிருகங்களின் தாக்கம் பற்றிய குறிப்பு கிடைத்துள்ளது. கேம்பிரியன் வெடிப்பு (Cambrian explosion) எனப்படும் காலப்பகுதியைச் சேர்ந்த விலங்கினங்களே இதற்குக் காரணமாகும். இந்த ஆதிகால விலங்கினங்களே இன்றைய முதுகெலும்பு உடையவை, மெல்லுடலிகள், ஊர்வன, மற்றும் ஜெல்லி மீன்கள் போன்றவற்றிக்கு மூதாதேயர்கள் ஆகும்.
நமிபியா பகுதிகளில் காணப்பட்ட எடியகரன் உயிரினங்களில் பல்வகைமை என்பது மற்றைய காலப்பகுதிகளைச் சேர்ந்த உயிரினங்களை விட குறைவாகவே காணப்படுகிறது. இது எமக்கு அக்காலத்தில் காணப்பட்ட சூழலியல் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்ககூடும் என்று காட்டுகிறது. புதிதாக வந்த விலங்குகள் சூழலை அவை வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கத் தொடங்கியவுடன், இந்த எடியகரன் உயிரினங்களால் தொடர்ந்து அங்கே வாழ முடியவில்லை என்பதே இதன் பொருளாகும்.
எப்படியிருப்பினும் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு ஆய்வாளர்கள் உருவாக்கிய யூகமே இதுவாகும்!ஆனால் மேற்படி ஆய்வின் போது மேலும் தகவல்கள் இதற்கு சான்று தரும் எனில், ஒரு உயிரினத்தின்தோற்றம் மற்றைய ஒரு உயிரினத்தின் அழிவிற்கு காரணமாக இருந்துள்ளது என்பது எமக்குத் தெரிந்துவிடும்.
இதிலிருக்கும் மிகப்பெரிய படிப்பினை என்னவென்றால், உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்கும் இன்று நடைபெறும் நிகழ்விற்கும் பாரிய தொடர்பு உண்டு. இதுவரை பூமி கண்ட உயிரினங்களிலேயே மிகச் சக்திவாந்த சூழலியல் பொறியாளர்கள் மனிதர்களே! இவர்களுது நடத்தை பூமியின் மொத்த சூழலிலும் மாற்றத்தை நிரந்தரமாகக் கொண்டுவரலாம் என்கிறார் சைமன் தராக்.
நன்றி: sciencealert
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.