நாம் தினமும் பயன்படுத்தும் தொழில்நுட்பமான இணையம் எப்படி தொழிற்படுகிறது என்பது பற்றிய ஒரு விளக்கம்.
இன்டர்நெட்! இணையம்!! இன்று எங்குபார்த்தாலும் பேஸ்புக், டுவிட்டர் என்று எல்லோருமே தங்கள் ஸ்மார்ட்போனில் ஓடுறது, பாயிறது, பறக்கிறது, பதுங்கிறது என்று எல்லாவற்றையும் ‘ஷேர்’ செய்துகொண்டு இருகின்றனர். பெரும்பாலான சாதாரணப் பாவனையாளருக்கு இணையம் எவ்வளவு பெரியது என்றோ அல்லது எப்படி இணையம் இயங்குகின்றது என்றோ தெரிவதில்லை. தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை; ஆனால் விருப்பமிருந்தால், உங்கள் செல்போனில் எப்படி யூடியுப் வீடியோ வருகிறது என்று தெரியவேண்டும் என்று ஆர்வமிருந்தால், மேற்கொண்டு வாசிக்கலாம்!
இணையம் என்பது பல்வேறுபட்ட இலத்திரனியல் கருவிகளை வலைப்பின்னல் மூலம் இணைக்கும் ஒரு கட்டமைப்பு என்று எளிதில் விளங்கும்படிக் கூறலாம். நீங்கள் பார்க்கும் கூகிள், பேஸ்புக் என்பன உண்மையில் இணையம் அல்ல! அவற்றை நாம் உலகளாவிய வலை (world wide web, or the web) என்று அழைக்கிறோம். இது உண்மையிலே இணையத்தின் மூலம் செயற்படும் ஒரு பெரிய சாப்ட்வேர் என்று கருதலாம். உலகளாவிய வலை போல, ஈமெயில், இணையத் தொலைபேசித் திட்டம், கோப்புப் பரிமாறல் போன்ற பல்வேறு பட்ட வித்தியாசமான தொழில்நுட்பங்கள் இணையத்தைப் பயன்படுத்தி வேலை செய்கின்றன.
குழப்பிக்கொள்ள வேண்டாம், ஒன்றொன்றாகத் தெளிவாகப் பார்க்கலாம். முதலில் இணையம் என்றால் என்ன, அதன் வரலாறு பற்றிப் பார்க்கலாம்.
இணையம் – வரலாறு
இணையம் தொழிற்படுவதன் அடிப்படை அம்சம் 1960 களில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. Packet switching (பக்கட் நிலைமாற்றல்) எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த circuit switching (சுற்று நிலைமாற்றல்) தொழில்நுட்பத்தை விட மேம்படுத்தப் பட்டதாக இருந்தது. முதலில் சுற்று நிலைமாற்றல் மற்றும் பக்கட் நிலைமாற்றல் என்றால் என்னவென்று விளக்கிவிடுகிறேன்.
சுற்று நிலைமாற்றல்
அந்தக் காலத்தில், அதாவது பழைய அனலாக் தொலைபேசி முறையில், நீங்கள் யாரையாவது தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் தொலைபேசிக் இணைப்பகத்திற்கு அழைக்கவேண்டும், அப்படி அழைத்து, நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கத்தையோ அல்லது முகவரியையோ கூறினால், இணைப்பகத்தில் இருப்பவர், உங்கள் தொலைபேசியின் சுற்றை, நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியவரின் சுற்றோடு இணைத்துவிடுவார்.
இது எப்படி இருக்கும் என்று சிந்திக்கவேண்டும் என்றால், உங்கள் வீட்டில் இருந்து நீங்கள் தொடர்புகொள்ளும் நண்பர் வீட்டிற்கு நேரடித் தொடர்பு, அதாவது நீளமான மின்கம்பி உங்கள் இருவரை மட்டும் இணைப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் பேசிமுடிக்கும் வரை அந்த இணைப்பை, தொலைபேசி இணைப்பகத்தில் இருப்பவர் இணைத்து வைத்திருப்பார்.
பொதுவாக நீங்கள் தொடர்புகொள்ளும் போது, குறித்த இணைப்பு வேறு ஒரு பாவனையில் இருந்தால், நீங்கள் அழைப்பை முன்பதிவு செய்யவேண்டும், மற்றைய இணைப்பு பாவனையில் இருந்து முடிந்தவுடன், உங்களுக்கு, இணைப்பகத்தில் இருந்து அழைப்பு வரும், அதன் பின்னர் நீங்கள் நண்பருடன் பேசலாம்!
இதில் இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு, ஒரு நேரத்தில் ஒரு இணைப்பு மட்டுமே குறித்த சுற்றில் பயன்படுத்தப்பட முடியும். இப்படியான முறையை நீங்கள் பழைய திரைப்படங்களில் பார்த்திருக்கமுடியும்.
பக்கட் நிலைமாற்றல்
இது டிஜிட்டல் நிலைமாற்றல் தொழில்நுட்பமாகும். ஒரு சுற்றில் பயணிக்கும் தகவல்களை சிறு சிறு துண்டுகளாக உடைத்து, அவற்றை குழுவாக்கி (இந்தக் குழுக்களுக்கு பக்கட் என்று பெயர்), அவற்றை குறித்த சுற்றில் அனுப்புதல். இங்கு ஒரே நேரத்தில் பல்வேறுபட்ட இணைப்புக்களை ஒரே சுற்றில் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக, பல குடும்பங்கள் வசிக்கும் தொகுதிக்குடியிருப்பில் ஒரு கடதாசிப் பெட்டி (post box) இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரே கடதாசிப் பெட்டியை பல்வேறு நபர்கள் பயன்படுத்தலாம் அல்லவா. அப்படிப் பயன்படுத்த ஒவ்வொரு கடிதத்திலும் முகவரி குறிப்பிடப் பட்டிருந்தால், குழப்பமின்றி அதனைப் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களது கடிதத்தை எடுக்காமல் தங்கள் கடிதத்தை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.
அதேபோலத்தான் இங்கும், ஒரே இணைப்பை ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தினாலும், பக்கட்டில் இருக்கும் முகவரியை வைத்துக் கொண்டு, சரியான இடத்திற்கு குறித்த பக்கட் போய்ச் சேர்ந்துவிடும்.
இன்று நாம் பயன்படுத்தும் இணையத்தின் அடிப்படியே இந்த பக்கட் நிலைமாற்றல் தொழில்நுட்பம்தான். சரி கொஞ்சம் வரலாற்றைப் பார்க்கலாம்.
ARPANET வரலாறு
கணணிகளுக்கு இடையிலான பொதுத் தொடர்பாடல் முறை பற்றிய முதலாவது எண்ணக்கரு 1960களில் கணனி விஞ்ஞானியாகிய J.C.R. Licklider என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் Licklider அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி அமைப்பான ARPA (Advanced Research Projects Agency) இல் நடத்தை அறிவியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குனராக இருந்தார், அந்தக் காலத்தில் ARPA ஏன் கணணிகளுக்கு இடையிலான வலைப்பின்னலை உருவாக்கவேண்டும் என்ற அவசியத்தை எடுத்துக்கூறினார்.
இதனால் ARPA, கணணிகளுக்கு இடையிலான தொடர்பாடல் முறையைப் பற்றிய ஆய்வை நடத்த உதவியது. ARPAவின் பண உதவியுடன், பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கணனிகள் நிறுவப்பட்டு, வலைப்பின்னல் உருவாக்கத்திற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. 1968 இல் ARPA இந்த வலைப்பின்னலை முழுமைப்படுத்தி நிறுவ பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் quotation கேட்டது, ஆனால் பலர் இந்த வலைபின்னல் முயற்சி சாத்தியமற்றது என்று பின்வாங்கிவிட, BBN Technologies எனப்படும் நிருவனந்திற்கு இறுதியாக ARPA இந்தத் திட்டத்தை செய்ய ஒப்புதல் அளித்தது.
ARPANET எனப்படும் உலகின் முதலாவது செயற்படு கணணிகளுக்கு இடையிலான வலைப்பின்னல் முயற்சி ஆரம்பமானது.
இந்த வலைப்பின்னல் “செய்திச் செயலி இடைமுகம்” (IMP) எனப்படும் சிறு கணனிகளால் இணைக்கப்பட்ட அமைப்பாகும். இந்தச் செய்திச் செயலி இடைமுகங்களை நீங்கள் தற்போது பயன்படுத்தும் ரவுட்டர்களுக்கு ஈடாகச் சொல்லலாம்.
நீண்ட தூரத் தகவல் பரிமாற்றத்திற்காக முதலில் இருந்து தனியாக மின்கம்பிகளைப் பயன்படுத்தாமல், ஏற்கனவே இருக்கும், தொலைபேசிக் கம்பிகளை பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆகவே தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து இந்தக் கம்பி இணைப்புக்கள் லீசில் எடுக்கப்பட்டன.
பக்கட் நிலைமாற்றலை இந்த வலைப்பின்னல் பயன்படுத்துவதால், ஏற்கனவே உள்ள தொலைபேசி இணைப்பு பாதிக்கப்படாது. மற்றும் முதன் முதலில் ஒரு செக்கனுக்கு 56 கிலோபிட்கள் என்கிற வேகத்தில் தகவலை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. மொத்தமாக 9 மாதங்களில் இவை எல்லாம் செய்யப்பட்டு நிறுவப்பட்டது. இது ARPANET என அழைக்கப்பட்டது.
முதலாவது ஆர்ப்பாநெட் நான்கு IMPs எனப்படும் இடைமுகங்களைக் கொண்டிருந்தது. ஒன்று லொஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், இன்னொன்று Augmentation Research Center இலும், மற்றயது சண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், இறுதியாக உட்டா பல்கலைக்கழகத்திலும் நிறுவப்பட்டது.
ஆர்ப்பாநெட்டின் மூலமான முதலாவது தகவல் பரிமாற்றம், அக்டோபர் மாதம் 1969 இல் இடம்பெற்றது. முதலாவது செய்தி “login” என்னும் வாசகத்தை காவிச் சென்றது, ஆனால் “l” மற்றும் “o” ஆகிய எழுத்துக்கள் மட்டுமே பரிமாறப்பட்டது, அதன் பின்னர் ஆர்ப்பாநெட் செயலிழந்தது. பின்னர் ப்ரோக்ராமில் இருந்த பிழைகளை நீக்கி மீண்டும் அதே சொல், “login” என்னும் சொல் அனுப்பட்டு, சரியாக எந்தவித குளறுபடியும் இல்லாமல் சென்றடைந்தது.
இதன் பின்னர் நவம்பர் 21, 1969 இல் நிலையான ஆர்ப்பாநெட் இணைப்பு, லாஸ் ஏஞ்சலிஸ்ஸில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கும், ஸ்டாண்ட்போர்ட் ஆராய்ச்சி நிலையத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் அடுத்துவந்த வருடங்களில் பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆர்ப்பாநெட்டில் இணைந்துகொண்டன. 1975 இல் 57 IMPs ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்டு இருந்தன. அதுவே 1981 இல் 231 ஆக அதிகரித்து இருந்தது, மேலும், இருபது நாட்களுக்கு ஒரு புதிய IMP என்னும் வீதத்தில் ஆர்ப்பாநெட் வளர்ந்துகொண்டே வந்தது.
1975 இல் முதன்முதலாக, நோர்வே நாட்டில் இருக்கும் Norwegian Seismic Array என்னும் அமைப்புக்கு செய்மதிமூலம் ஆர்ப்பாநெட் இணைப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆர்ப்பாநெட்டில் இணைந்த முதலாவது வேற்றுநாடு நோர்வே ஆகும்.
ஆர்ப்பாநெட், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒரு திட்டம் என்பதனால், 1957 இல் அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பாடல் நிறுவனம் ஆர்ப்பாநெட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மேலும் 1984 இல் அமெரிக்க ராணுவப் படையின் தேவைக்கு ஏற்றவாறு ஆர்ப்பாநெட்டின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு தனியான MILNET எனப்படும் வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த MILNET, ஆர்ப்பாநெட்டுடன் இணைக்கப்பட்டு இரண்டும் சேர்த்து Defense Data Network என அழைக்கப்பட்டது.
தொடரும்…
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.