பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

நீங்கள் பென்டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கேள்விப் பட்டிருக்கும் விடயம், பைல் சிஸ்டம்! அண்ட்ராய்டு போன்களில் SD கார்ட்களைப் பயன்படுத்தும் போதும் இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சில வேலைகளில் பெரிய பைல்களை கணனியில் இருந்து USB பிளாஷ் டிரைவ்களுக்கு இடம்மாற்றும் போது, சில சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கியிருக்கலாம்.

முக்கியமாக போர்மட் செய்யும் போது, பைல் சிஸ்டம் என்கிற இடத்தில் இருக்கும் தெரிவில் எதனைத் தெரிவு செய்யவேண்டும் என்றும் குழப்பம் வரலாம். அதற்காகவேதான் இந்தப் பதிவு.

பல்வேறுபட்ட வித்தியாசமான பைல் சிஸ்டங்கள் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்.

பொதுவாக விண்டோஸ் இயங்கு முறையில் மூன்றுவிதமான பைல் சிஸ்டங்கள் உண்டு.

  1. FAT32
  2. exFAT
  3. NTFS

லினக்ஸ் இயங்கு முறைமை தனக்கென்று வேறுபட்ட பைல் சிஸ்டங்களைக் கொண்டுள்ளது. பெருவாரியாக கணனிகள், மற்றும் USB கருவிகளில் பயன்படுத்தும் பைல் சிஸ்டங்கள் விண்டோஸ் இயங்கு முறைமை சார்ந்ததால், அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

FAT32 பைல் சிஸ்டம்

அதிகளவான கணனிகள் மற்றும் இலத்திரனியல் கருவிகள், அண்ட்ராய்டு, லினக்ஸ் என்று பெருமளவான முறைமைகளால் ஆதரிக்கப்படும் ஒரு பைல் சிஸ்டம். இதனால் இது மிகவும் பிரபல்யமான ஒரு பைல் சிஸ்டம்.

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 95 இயங்கு முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம் இதுவாகும், ஆகவே இது மிகவும் பழைய பைல் சிஸ்டம். இதனால் இது அதிகளவான கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக நீங்கள் புதிதாக வாங்கும் USB பிளாஷ் டிரைவ்களில் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. மேலும் SD கார்டுகள், மைக்ரோ SD கார்டுகள் என்பனவற்றிலும் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. (தேவையென்றால் நீங்கள் போர்மட் செய்து மாற்றிக்கொள்ள முடியும்).

இப்படி வருவதற்குக் காரணம், விண்டோஸ், லினக்ஸ், மக்ஒஸ், அண்ட்ராய்டு மற்றும் புகைப்படக் கருவிகள், ஸ்மார்ட் TV, விளையாட்டுக் கருவிகள் என்று எல்லாமே இந்த FAT32 ஐ ஆதரிக்கின்றன.

பைல் சிஸ்டம் என்கிற பரப்பில் இதுவொரு நியமமாக ஆகிவிட்டது என்றே கூறலாம்.

எப்படியிருப்பினும், தற்போதைய விண்டோஸ் இயங்கு முறைமை FAT32 பைல் சிஸ்டத்தை பயன்படுத்துவதில்லை. காரணம் பின்வருவன.

  1. FAT32 இல் ஒரு தனி பைல் 4GB அளவைவிட அதிகமாக இருக்க முடியாது. பெரும்பாலும் இது பல பைல்களுக்குப் பிரச்சினை இல்லை என்றாலும், தற்போதைய திரைப்படங்கள், கணணி விளையாட்டுக்கள், மற்றும் சில மென்பொருட்களின் பைல் அளவுகள், பல GBக்களை தாண்டுகின்றன, இதனால் இந்த பைல்களை FAT32 முறையில் இருக்கும் ஒரு சேமிப்பகத்தில் சேமிக்க முடியாது.
  2. தபோதைய விண்டோஸ் இயங்கு முறைமைகள் பயன்படுத்தும் பைல் சிஸ்டமாகிய NTFS பல்வேறுபட்ட பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மூலம், பல்வேறுபட்ட தாக்குதல்களில் இருந்து NTFS பைல் சிஸ்டம் பைல்களை பாதுகாப்பதுடன், பைல்கள் பாதிப்படைவதையும் குறைக்கின்றது.
  3. மேலும் FAT23 முறையில் இருக்கும் ஒரு ஹார்ட்டிஸ்க் பார்டிசன் 8TB ஐ விட அதிகமாக இருக்க முடியாது.

இப்படியான குறைபாடுகளால் FAT32 புதிய விண்டோஸ் இயங்கு முறைமைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் போர்டபல் கருவிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

NTFS பைல் சிஸ்டம்

விண்டோஸ் இயங்கு முறைமை தற்போது பயன்படுத்தும் பைல் சிஸ்டம் இதுவாகும். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் விண்டோஸ் இயங்கு முறைமையை நிறுவினால், அந்த சேமிப்பகத்தை விண்டோஸ் NTFS பைல் சிஸ்டமாக போர்மட் செய்துவிடும்.

முதன் முதலாக விண்டோஸ் NT 3.1 இல் (1993) அறிமுகப்படுத்தப்பட்டாலும், விண்டோஸ் xp இல் இது பொதுவான பயன்பாட்டிற்கு வந்தது எனலாம்.

FAT32 இல் உள்ள உச்சக்கட்ட வரம்பு போன்றவை NTFS இற்கு இருப்பினும், அது மிகப்பெரியது என்பதால் அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உதாரணமாக NTFS இல் சேமிக்கக்கூடிய ஒரு பைலின் அளவு 16EB ஆகும். EB என்பது Exabyte ஆகும்.

1000GB ஒரு TB, 1000TB ஒரு PB, 1000PB ஒரு EB. தற்போது உங்களுக்கு EB எவ்வளவு பெரியது என்று புரிந்திருக்கும்.

FAT32 உடன் ஒப்பிடும் போது NTFS பைல் சிஸ்டத்தில் பல நல்ல அம்சங்கள் உண்டு. இது பாதுகாப்பு அனுமதி முறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது, மேலும் பைல்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து வைப்பதன் மூலம், திடீர் என்று ஏற்படும் பிழைகளைத் திருத்த உதவுகிறது.

மேலும் Shadow Copy மூலம் backup செய்யும் வசதி, என்கிரிப்சன் மேலும் பல வசதிகளை NTFS கொண்டுள்ளது. விண்டோஸ் இயங்குமுறை பாதுகாப்பாக இயங்க NTFS இன் பல்வேறு அம்சங்கள் உதவுகின்றன.

NTFS இல் இருக்கும் சிக்கல் என்னவென்று பார்த்தால், அது மற்றைய இயங்குமுறைமைகளால் ஆதரிக்கப்படாமையே ஆகும். அப்பிள் நிறுவனத்தின் மக்ஒஸ் இயங்கு முறைமையால் NTFS இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்க மட்டுமே முடியும், அதனால், NTFS இல் சேமிக்க முடியாது. பல்வேறு லினக்ஸ் இயங்கு முறைமைகள், மக்ஒஸ் போலவே NTFS பைல்களை வசிக்க மட்டும் செய்கிறது, சில லினக்ஸ் இயங்கு முறைமைகள் மட்டும் வாசிக்கவும், சேமிக்கவும் வசதியை வழங்குகின்றன.

அதேபோல சோனி நிறுவனத்தின் PlayStation மற்றும் Xbox360 ஆகிய விளையாட்டுக்கருவிகள் NTFS ஐ ஆதரிப்பது இல்லை. மைக்ரோசாப்ட்டின் புதிய விளையாட்டுக்கருவியான XBoxOne தற்போது NTFS ஐ ஆதரிக்கிறது. காரணம் இது விண்டோஸ் 10 ஐயே தனது இயங்கு முறைமையாகக் கொண்டுள்ளது.

ஆகவே NTFS இல் இருக்கும் பெரிய குறைபாடு என்றால், அது பல்வேறு தளங்களில் ஆதரிக்கப்படாமையே ஆகும்.

ஆகவே நீங்கள் பல்வேறு வகையான கருவிகளையும் இயங்கு முறைமைகளையும் பயன்படுத்துவீர்கள் என்றால் உதாரணமாக மக்ஒஸ், லினக்ஸ், ஸ்மார்ட்டிவி; இவற்றுக்கிடையில் பைல்களை பரிமாற்ற நீங்கள் NTFS பைல் சிஸ்டத்தில் இருக்கும் சேமிப்பகத்தைப் பயன்படுத்த முடியாது.

exFAT பைல் சிஸ்டம்

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைல் சிஸ்டம், பிளாஷ் சேமிப்பகங்களுக்காகவே உருவாக்கப்பட்டது எனலாம். ஆகவே இது எளிமையான ஒரு பைல் சிஸ்டம், FAT32 பைல் சிஸ்டத்தில் இருந்த குறைபாடுகள் இதில் இல்லை.

அதாவது, ஒரு பைலின் ஆகப்பெரிய அளவு 4 GB என்கிற கட்டுப்பாடு எல்லாம் இதில் இல்லை. ஆகவே பெரிய பைல்களையும் இந்த exFAT ஐப் பயன்படுத்தி சேமிக்கலாம். ஆகவே SD கார்டு, பிளாஷ் டிஸ்க் போன்றவற்றிக்கு இது உகந்தது.

மேலும் NTFS போல் அல்லாமல், மற்றைய பலவேறு இயங்கு முறைமைகள் இந்த exFAT ஐ ஆதரிக்கின்றன. உதாரணமாக மக்ஒஸ், exFAT இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்கவும், அதே நேரத்தில்புதிய பைல்களை சேமிக்கவும் வசதியளிக்கிறது. NTFS இல் வாசிக்கமட்டுமே முடியும்.

ஆனாலும் பல்வேறு பழைய FAT32 ஐ மட்டுமே ஆதரிக்கும் கருவிகள் அல்லது இயங்கு முறைமைகள், exFAT ஐ ஆதரிப்பது இல்லை. ஆனாலும் NTFS அயல் ஆதரிக்கும் முறைமைகளைவிட இதனை ஆதரிக்கும் முறைமைகள் அதிகம் என்றே கூறலாம்.

பொதுவாக exFAT உங்கள் பிளாஷ் டிஸ்க்களில் பயன்படுத்த உகந்தது. எப்படியிருப்பினும் நீங்கள் பாவிக்கபோகும் கருவிகள் exFAT ஐ ஆதரிக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொல்வது அவசியம்.

மேலும் இதுபற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், பின்னூட்டத்தில் கேட்கலாம்.

தகவல்கள்: how to geek, wikipedia


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam