பொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.
ஆகவே “வெளி”யை விளங்கிக்கொள்ள சிறிய உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம்!
நமக்குத் தெரிந்த பொருட்களை வைத்துக்கொண்டு, சூரியத்தொகுதியை ஒரு சிறிய மாதிரியாக உருவாக்கிப் பார்க்கலாம். சூரியனது விட்டம் அண்ணளவாக ஒரு மில்லியன் கிலோமீட்டர்கள்… ஆனால் இப்படிச் சொல்லிவிட்டால் அது எவ்வளவு பெரியது என்று நமக்கு விளங்காது. அகவே சூரியனை ஒரு பெரிய தோடம்பழம் அளவு என்று வைத்து கொண்டு ஒரு மாதிரியை உருவாக்கினால், பூமி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பால்பாயிண்ட் பென்களை (ball-point pens) உங்களுக்குத் தெரியுமல்லவா? அதனது முனையில் இருக்கும் பாலின் அளவே நமது பூமி இருக்கும்! பூமி அவ்வளவுதான்! இதுவே இப்படி என்றால், வியாழன்? சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய கோள் வியாழன், அவரே வெறும் கோலிகுண்டு அளவுதான் இருப்பார்!
ஆனால் பெரிய தோடம்பழம் அளவுள்ள சூரியனைச் சுற்றிவரும், பால் பாயிண்ட்அளவுள்ள பூமி, எவ்வளவு தொலைவில் சூரியனைச் சுற்றிவரும் என்று கருதுகிறீர்கள்? எதோ சிலபல சென்டிமீட்டர்கள் இருக்கும் என்று நினைக்கலாம், அல்லது உங்கள் இரு கைகளிலும் ஒன்றை சூரியனாக நினைத்து, மற்றயதை பூமியாகப் பாவித்து, இரு கைகளையும் ஓரளவு தூரத்தில் பிடித்துக் காட்டி இவ்வளவு தூரம் இருக்கும் என்றும் கூறாலாம். ஆனால் உண்மை என்ன?
தோடம்பழம் அளவுள்ள சூரியனை, மண்ணளவு உள்ள பூமி 15 மீட்டார் தொலைவில் சுற்றிவரும்!
இப்படி ஒரு பெரிய தோடம்பழத்தின் அளவை அடிப்படையாகக் கொண்ட சூரியத் தொகுதியின் மாதிரி ஒன்றை அமைக்க எமக்கு ஒரு சதுர கிலோமீட்டர் அளவைவிடப் பெரியதான இடம் தேவைப்படும். அந்த ஒரு சதுர கிமீ அளவில் வெறும் பால்பாயிண்ட் பேனாவின் பாலின் அளவுதான் பூமி, அதில் இருக்கும் ஒரு சிறிய நாடுதான் உங்கள் நாடு, அதிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் இருக்கும் ஓர் சிறிய கட்டடத்தில் இருந்து ஒரு “சிறிய ஆசாமியாகிய” நீங்கள் இதனைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
இந்த பால்பாயிண்ட் அளவை கொண்டு பார்த்தால், நம் நிலவுக்கும் பூமிக்கும் வெறும் 4 சென்டிமீட்டர்கள் அளவு மட்டுமே. அப்படியென்றால், மனிதன் இதுவரை பயணித்த அதிகூடிய தூரத்தையும் (பூமியில் இருந்து 400,000 கிமீ தொலைவில் உள்ள நிலவு) உங்கள் உள்ளங்கையில் அடக்கிவிடலாம்!
மேலும் இந்த மாதிரியின் அடிப்படையில் புளுட்டோ சூரியனில் இருந்து 600 மீட்டர்கள் தொலைவில் சுற்றிவருகிறது. இந்த தூரத்தை நீங்கள் நடந்துசெல்லை சில நிமிடங்கள் எடுக்கலாம் இல்லையா? அனால் நாசா புளுட்டோவிற்கு அனுப்பிய நியூ ஹொரைசன் விண்கலம், புளுட்டோவைச் சென்றடைய அண்ணளவாக 10 வருடங்கள் எடுத்து, அதுவும் அது பயணித்த வேகம், செக்கனுக்கு 16 கிமீ, அல்லது மணிக்கு 58,000 கிமீ!
இப்போது இந்தச் சூரியத் தொகுதியே எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு ஒரு சிறிய எண்ணம் வந்திருக்கும். கொஞ்சம் சூரியத் தொகுதியை விட்டு வெளியே சென்று பார்க்கலாம்.
நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் அல்பா சென்டுரி (Alpha Centauri) என்ற விண்மீன் ஆகும். உண்மையிலேயே அது மூன்று விண்மீன்களால் ஆன ஒரு தொகுதி; சூரியனில் இருந்து 4.4 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.
நமது தோடம்பழ அளவுகொண்ட மாதிரியில் இந்த விண்மீனை எங்கு வைக்கலாம்? புளுட்டோ சூரியனில் இருந்து 600 மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்று ஏற்கனவே கூறிவிட்டோம், ஆனால் இந்த விண்மீன்?
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், தோடம்பழ அளவுகொண்ட சூரியனில் இருந்து அண்ணளவாக 4,400 கிமீ தொலைவில் வைக்கவேண்டும்! சிந்தித்துப் பாருங்கள், அல்பா சென்டுரி வெறும் 4.4 ஒளியாண்டுகள் தொலைவில் மட்டுமே இருக்கிறது. நமது பால்வீதியாகிய விண்மீன் பேரடை அண்ணளவாக 100,000 ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது.
அதையும் தாண்டிச் சென்றால், எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் பேரடை, அன்றோமீடா 2.5 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. இவற்றை எல்லாம் தோடம்பழ அளவுள்ள சூரியனின் மாதிரியில் காட்டவே முடியாது.
விண்வெளி என்ற பெயருக்குக் காரணம் தற்போது உங்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும்.
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.