நமக்குத் தெரிந்தவரை செவ்வாய் ஒரு உறைந்துபோன பாலைவனக் கோள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, செய்மதிகள் தொடக்கம் தளவுலவிகள் மற்றும் தரையிரங்கிகள் மூலம் ஆய்வுசெயதவரை செவ்வாய் ஒரு காய்ந்துபோன குளிரான ஒரு இறந்த கோள் என்பது நமக்குத்தெரியும். ஆனால் செவ்வாய்க்கு என்ன நடந்தது என்பது ஒரு புதிராகவே இருந்தது. அதன் வளிமண்டலத்திற்கும், முழுக்கோளின் மேற்பரப்புக் கட்டமைப்பிற்கும் என்ன நடந்திருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானிகள் முன்வைத்தனர்.
தற்போது நாசாவின் MAVEN விண்கலம் ஆறு மாதங்களாக சேகரித்த தகவல்களைக் கொண்டு இந்தப் புதிரின் ஒரு பகுதிக்குத் தெளிவான விடை கிடைத்துள்ளது. அதாவது, செவ்வாயில் இருந்த வளிமண்டலம், சூரியப்புயல் காரணமாக சிதறடிக்கப்பட்டுள்ளது!
பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய சூரியப்புயல்கள் காரணமாக, செவ்வாயின் மேற்பரப்பில் இருந்த காபனீர் ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய வாயுக்கள் பெருமளவில் விண்வெளியில் சிதறடிக்கப்பட்டுள்ளது. தற்போது செவ்வாய் செக்கனுக்கு 100 கிராம் அளவு தனது வளிமண்டலத்தை இழந்துகொண்டு வருகிறபோதிலும், சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய சூரியப்புயல்கள், தற்போது இழப்பதைவிட அண்ணளவாக 100 தொடக்கம் 1000 மடங்கு அதிகமாக வளிமண்டலம் செவ்வாயைவிட்டு சிதறக் காரணமாக இருந்துள்ளது.
ஒரு காலகட்டத்தில் செவ்வாயும் பூமியைப்போலவே ஒரு அடத்தியான வளிமண்டலத்தைக் கொண்டிருந்தது. அதற்குக்காரணம் பூமியைப் போலவே செவ்வாய்க்கும் சக்திவாந்த காந்தப்புலம் இருந்தது. ஆனால் பூமியை விடச் சிறிய செவ்வாய், வேகமாக குளிர்வடைந்துவிட்டதால், அதன் காந்தப் புலம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட அதன் வளிமண்டலத்தைக் காப்பாற்றக்கூடிய சக்தியை செவ்வாய் இழந்துவிட்டது எனலாம். அண்ணளவாக 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாய் தனது காந்தப்புலத்தை இழந்தது. அதன் பின்னர் வந்த சில பல மில்லியன் வருடங்களில் சூரியனது சக்திவாந்த சூரியப்புயல்கள், செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்த அணுக்களை கொஞ்சம் கொஞ்சமாக விண்வெளிக்குக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டது.
அடர்த்தியான வளிமண்டலம் செவ்வாய்க்கு இருந்த காலத்தில் அதன் வளிமண்டல அமுக்கம் 1000 மில்லிபார் வரை இருந்துள்ளது, இது தற்போதைய பூமியின் வளிமண்டல அமுக்கத்தின் அளவு. அதன் பின்னர் வந்த சூரியப் புயல் காலத்தில், செவ்வாயில் இருந்த ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள், குளிரால் உறைந்துவிட்டிருக்கவேண்டும், மற்றும் சில ஆவியாகி வளிமண்டலத்தோடு செவ்வாயை விட்டு அகன்றிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் உயிரினங்கள் இருந்திருந்தால், அது ஒரு பாரிய துர்ப்பாக்கியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். ஆக 4 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு தற்போது செவ்வாயின் வளிமண்டல அமுக்கம் வெறும் 6 மில்லிபார்கள் மட்டுமே.
இந்த MAVEN தகவலுக்கு முன்னர், செவ்வாயின் வளிமண்டலம் மறைந்தது எப்படி என்று ஆய்வாளர்கள் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் சூரியப் புயலே காரணம் என்று கருதினாலும், பாரிய விண்கல் செவ்வாயில் விழுந்து ஏற்படுத்திய அதிர்வு காரணமாக செவ்வாயின் வளிமண்டலம் மற்றும் அதன் நீர்ப் பரப்பு என்பன விண்வெளியில் சிதறடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதினர். சிலர் செவ்வாயின் பாறைகள் அதிகளவான காபனீர் ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய வாயுக்களை சிறைபிடித்திருக்கலாம் என்றும் கருதினர்.
2014 இல் செவ்வாயைச் சுற்றத் தொடங்கிய MAVEN விண்கலம் சேகரித்த தகவல்கள், துல்லியமாக மற்றும் நிச்சயமாக சூரியப்புயலே செவ்வாயின் வளிமண்டல இழப்பிற்குக் காரணம் எனக் கூறுகிறது.
சூரியப் புயலில் இருந்து வரும் ப்ரோடான் மற்றும் ஏலேக்ட்ரோன் துணிக்கைகள், செவ்வாயின் மேல்-வளிமண்டலத்தில் உள்ள அயன் துணிக்கைகளை விடுபடு-திசைவேகம் (escape velocity) அளவிற்கு முடுக்கிவிடுவதால், அந்தத் துணிக்கைகள், செவ்வாயை விட்டு நிரந்தரமாக சென்றுவிட்டன.
சூரியத் தொகுதி உருவாகிய காலப்பகுதியில் சூரியனில் இருந்து வெளிப்பட்ட சூரியப் புயல்கள் தற்போதைய சூரியப் புயல்களை விட மிகச் சக்திவாய்ந்ததாகக் காணப்பட்டது. ஆகவே அக்காலத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து இலகுவாக வளிமண்டலத்தை அச் சூரியப் புயல்களால் சிதறடிக்கமுடிந்திருக்கும்.
தற்போது செவ்வாய் இழந்துவரும் வளிமண்டலத்தின் அளவைக் கணக்கில் எடுத்தால், மொத்தமாக அதன் வளிமண்டலம் மறைவதற்கு அடுத்த இரண்டு பில்லியன் வருடங்களாவது எடுக்கும் என்பது ஆவாலர்களின் கணிப்பு.
நாசா, ESA மற்றும் ரஷ்சிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்பன செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதில் ஆர்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.