எழுதியது: சிறி சரவணா
“குளோபல் வார்மிங்” என்ற சொல் எமக்குப் பரிட்சியமானது. அது பற்றிய பொதுவான புரிதல், பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதுதானே. அது தவறு என்ற காரணத்தால்தான், விஞ்ஞானிகள் தற்போது குளோபல் வார்மிங் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் “கிளைமேட் சேஞ்” அல்லது காலநிலை மாற்றம் என்கிற சொற்தொடரைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் பூமியொரு சிக்கலான பொறிமுறையைக் கொண்டு செயற்படும் பாரிய அமைப்பு. அதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றத்தை வெறும் “வெப்பநிலை மாற்றம்” என்று கூறிவிடமுடியாது.
சரி இதனைச் சொல்வதற்கான காரணம் என்னவென்றால், தலைப்பில் கூறியதுபோல, தற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு அல்ல.
தெளிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.
இந்தப் புதிய ஆய்வின்படி, அண்டார்டிகா கண்டத்தில் பனி சேர்வது அண்ணளவாக 10,000 வருடங்களுக்கு முன்னர் தொடங்கியிருக்கவேண்டும். ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை அதிகரிப்பால் உருகும் பனியின் அளவைவிட புதிதாக வந்து சேரும் பனியின் அளவு அதிகமாகக் காணப்படுகிறது.
இதுவரை, அண்டார்டிகாவின் மொத்தப் பனியின் அளவு குறைவடைதுகொண்டு வருவதாகவே ஆய்வாளர்கள் கருதினர். Intergovernmental Panel on Climate Change (IPCC) இன் 2013 ஆண்டு ஆய்வறிக்கையிலும் இப்படிக் குறைவடைந்து வருவதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், செய்மதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளைக் கொண்டு செய்யப்பட்ட புதிய ஆய்வுகளில், கடந்த 1992 தொடக்கம் 2001 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 112 பில்லியன் தொன் பனி புதிதாகச் சேர்ந்துள்ளது. அதேபோல 2003 தொடக்கம் 2008 வரையான காலப்பரப்பில் ஒவ்வொரு ஆண்டும் 82 பில்லியன் தொன் பனி புதிதாகச் சேர்ந்துள்ளது.
இதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடயம், பழைய ஆய்வுகளின் முடிவும் புதிய ஆய்வின் முடிவும் மேற்கு அண்டார்டிகாவில் பனியின் அளவு குறைவடைந்துகொண்டு வருவதைச் சுட்டிக்காட்டும் அதேவளை, கிழக்கு மற்றும் மேற்கின் உற்பகுதிகளில் பனியின் அளவு அதிகரிப்பதாக இந்தப் புதிய ஆய்வு சொல்கிறது.
புதிய ஆய்வைச் செய்த குழு, பாரிய நிலப்பரப்பின் உயரத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களை அவதானித்துள்ளனர், அதேபோல சிறிய நிலப்பரப்பில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களையும் இவர்கள் கவனித்துள்ளனர். இதில் கிழக்குப் பகுதியில் அதிகரித்துவரும் பனியின் அளவே, மற்றைய ஆய்வுகளுக்கும் இவர்களின் ஆய்வுகளுக்கும் இருக்கும் பாரிய வித்தியாசம் என இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் முக்கிய விஞ்ஞானி Jay Zwally கூறுகிறார்.
குறித்த நிலப்பரப்பில் பனி எவ்வளவு அதிகரிக்கிறது அல்லது குறைவடைகிறது என்று செய்மதியில் உள்ள உயரமானி கொண்டு விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். பனி புதிதாகச் சேரும் பிரதேசத்தில், பனி கரைந்து கடலில் சேரும் அளவைவிட புதிதாக பனி பொழியும் அளவு அதிகமாகக் காணப்படுகிறது.
ஆனாலும் இப்படியாக அண்டார்டிகாவில் அதிகரிக்கும் பனியின் அளவு சில தசாப்தங்களில் குறைவடைந்து, முழுதாக எதிர்திசையில் திரும்பி, குறைவடையத் தொடங்கும் என்றும் Zwally கூறுகின்றார்.
அண்டார்டிகா தீபகற்பத்தில் உருகும் பனியின் அளவு அதிகரித்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு அண்டார்டிகாவிலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கும். அடுத்த 20 தொடக்கம் 30 ஆண்டுகளில் புதிதாகச் சேரும் பனியின் அளவைவிட குறைவடையும் அளவு அதிகரித்துவிடும் என்று Zwally கருதுகின்றார்.
அண்டார்டிகாவின் பனிப் படலத்தின் உயரத்தை அளக்க ஐரோப்பிய விண்வெளி ஆய்வகத்தின் ERS என்னும் செய்மதி பயன்படுத்தப்பட்டது. 1992 தொடக்கம் 2001 வரையான காலப்பகுதிக்கான தரவுகள் இதிலிருந்து பெறப்பட்டவையே. அதேபோல 2003 தொடக்கம் 2008 காலப்பகுதிக்கான தரவுகள் அமெரிக்க நாசாவின் ICESat என்னும் செய்மதியில் இருந்து பெறப்பட்டவை.
இன்னுமொரு முக்கியவிடயம், பொதுவாக பனியின் அளவு அதிகரிப்பதற்கான காரணம் இங்கு புதிதாகச் சேரும் பனியே என்று நாம் கருதினாலும், Zwally மற்றும் அவரது குழுவினர், அண்டார்டிகாவின் காலநிலை பற்றிய தகவல்களை 1979 முதல் சேகரித்துக்கொண்டு வந்துள்ளனர், அதனடிப்பையில் கடந்த 20 ஆண்டுகளில் கிழக்கு அண்டார்டிகாவில் புதிதாகச் சேரும் பனியின் அளவு 11 பில்லியன் தொன் வரை குறைவடைந்துகொண்டு வந்துள்ளதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது வேறு ஆய்வாளர்களின் தரவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது அண்டார்டிக்காவில் நீண்டகாலமாக இப்படி புதிய பனி வந்து சேர்வது இடம்பெற்றுக்கொண்டு இருக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது.
கடைசியாக வந்த பனியுகத்தின் முடிவில் (10,000 ஆண்டுகளுக்கு முன்பு) காற்று சற்று வெதுவெதுப்பானதாக மாறியது, இது அதிகளவான நீராவியை வளிமண்டலத்தில் காவிச்செல்ல, அண்டார்டிகாவில் பொழியும் பனியின் அளவும் அதிகரித்திருக்கவேண்டும்.
கடந்த 10,000 ஆண்டுகளுக்குள் தொடங்கிய அதிகளவான பனிப்பொழிவு, ஆயிரக்கணக்கான வருடங்களாக இறுகிக் கட்டியாகி, கிழக்கு மற்றும் மேற்கு அண்டார்டிகாவின் உட்புறப் பகுதிகளின் உயரம் ஆண்டு ஒன்றுக்கு 1.7 cm வரை அதிகரிக்கிறது. இது மிக மிகக் குறைவானதே என்ற போதிலும், பாரிய நிலப்பரப்பில் இது இடம்பெறுவதால், அண்டார்டிகா இழக்கும் பனியின் அளவைவிட இது அதிகமாகக் காணப்படுகிறது.
Zwally மற்றும் அவரது குழுக்களின் கணக்குப்படி, 1992 இல் இருந்து 2008 வரையான காலப்பகுதியில் கிழக்கு அண்டார்டிகாவில் சேரும் பனியின் அளவு அண்ணளவாக ஒரு வருடத்திற்கு 200 பில்லியன் தொன் ஆகக் காணப்பட்டது. அதேவேளை, மேற்குப் பகுதியில் பனி இழக்கப்படும் வீதம் ஆண்டு ஒன்றிற்கு அண்ணளவாக 65 பில்லியன் தொன் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
ஆகவே தற்போது பிரச்சினைக்கு வருவோம்!
புதிய ஆய்வுகள் படி, கடல் மட்ட அதிகரிப்பிற்கு அண்டர்டிகாவின் பனி உருகுதல் காரணமில்லை. மாறாக கடல் நீரின் மட்டத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் 0.23 mm உயரத்தைக் குறைக்கிறது! ஆம் அதுதான் அண்டர்டிக்காவின் மேலே பனியாகப் பொழிகிறதே! அப்படியென்றால் IPCCஅறிக்கையில் கூறிய ஆண்டுதோறுமான 0.27 mm கடல்மட்ட அதிகரிபிற்குக் காரணம் என்ன?
நாம் இதுவரை கண்டறியாத ஏதோவொரு காரணி இன்னமும் செல்வாக்குச் செலுத்திக்கொண்டு இருக்கிறது. அதனைக் கண்டறியவேண்டும்.
ஆனால் விஞ்ஞானம் என்பது ஒருவர் கூறும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதில் இல்லை, மாறாக, இந்தப் புதிய ஆய்வை மீண்டும் வேறு குழுக்களும் செய்து இந்தப் புதிய ஆய்வில் உள்ள குறை நிறைகளைக் கண்டறியவேண்டும்.
அண்டர்டிக்காவில் ஏற்படும் மாற்றங்களை மேலும் தெளிவாக ஆய்வுசெய்ய நாசா ICESat-2 என்கிற செய்மதியைத் தயார்செகிறது. இது 2018 இல் விண்ணுக்குச் செலுத்தப்படும். இது ஒரு பென்சில் கூர்முனையை விட சிறிய அளவுவரை துல்லியமாக உயரமாற்றத்தைக் கணக்கிடக் கூடியது! இதன் மூலம் தற்போதைய ஆவின் முடிவுகளை மேலும் பரிசோதிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இயற்கை எவ்வளவு சிக்கலானது என்று பார்த்தீர்களா?
நன்றி: நாசா
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.