பிரபஞ்சத்தின் முதலாவது பாரிய விண்மீன் பேரடைகள் எப்போது உருவாகின என்பது பற்றிய புதிய ஆய்வு.
நமது பிரபஞ்சம் தோன்றி அண்ணளவாக 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று இயற்பியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆரம்பத்தில் உருவாகிய விண்மீன்கள் மற்றும் பேரடைகள் எப்பொழுது உருவாகின, அதாவது, பிரபஞ்சம் தோன்றி எவ்வளவு காலத்தின் பின்னர் முதலாவது விண்மீன்கள் மற்றும் முதலாவது விண்மீன் பேரடைகள் தோன்றின என்பது பற்றிய முழுமயான புரிதல் இன்றும் பூரணமாகவில்லை.
பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள் என்னும் பதிவை இங்கே வாசிக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு அடிப்படையான சில விடயங்கள் புரியும், ஏற்கனவே தெரிந்தவர்கள் இந்தக் கட்டுரையைத் தொடரலாம்.
பிரபஞ்சம் உருவாகி அண்ணளவாக 600 மில்லியன் வருடத்தின் பின்னர் உருவாகியிருந்த ஒரு விண்மீன் பேரடையை நாம் இன்று கண்டறிந்துள்ளோம். EGSY8p7 எனப்படும் இந்த விண்மீன் பேரடையில் இருந்து ஒளி 13.2 பில்லியன் ஒளியாண்டுகள் தூரம் பயணித்து பூமியை வந்தடைகிறது.
தற்போது இருக்கும் கோட்பாடுப்படி, இந்த ஆதிகால விண்மீன் பேரடைகள் சிறியதாக இருக்கும். காலப்போக்கில் அவை வளர்ந்தன என்று கருதப்படுகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகளை எண்ணுவதன் மூலம் அவற்றின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி என்பவற்றைப் பற்றி ஆய்வாளர்கள் படிக்கின்றனர்.
ஆனால் விண்வெளியில் மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளை கண்டறிவது மிகவும் கடினமான காரியமாகும். அதிலும் பிரகாசம் குறைந்த விண்மீன் பேரடைகளைக் கண்டறிவது குதிரைக்கொம்பு ஆகும்!
மிக மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளை எம்மால் பார்க்க முடிந்தால் அவை மிகப் பிரகாசமான பாரிய விண்மீன் பேரடைகள் என்பதனை நாம் அறியலாம். ஆனால் மேலே கூறியதுபோல, தொலைவில் பிரகாசமற்ற சிறிய விண்மீன் பேரடைகளைக் கண்டறிவது மிக மிகக் கடினம்.
தற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையத்தின் UltraVISTA என்னும் கணக்கெடுப்பின் மூலம் பிரபஞ்சம் உருவாகி வெறும் 0.75 தொடக்கம் 2.1 பில்லியன் வருடங்களுக்குள் உருவாகியிருந்த பல விண்மீன் பேரடைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். UltraVISTA என்பது VISTA கணக்கெடுப்பில் இருக்கும் ஆறு செயற்திட்டங்களில் ஒன்றாகும். VISTA கணக்கெடுப்பு விண்வெளியை, அன்மிய-அகச்சிவப்புக் கதிர்வீச்சில் (near-infrared) பதிவுசெய்யும் கணக்கெடுப்பாகும்.
UltraVISTA, நமது சந்திரனைப் போல நான்குமடங்கு பெரியளவான வான்பரப்பை 2009 தொடக்கம் ஆய்வுசெய்கிறது. அதுமட்டுமல்லாது நாசாவின் Spitzer வான் தொலைநோக்கி மூலமும் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆய்வாளர்கள் பிரபஞ்சம் உருவாகிய காலத்தில் தோன்றிய 574 பாரிய விண்மீன் பேரடைகளைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் அறிய விரும்புவது, எப்போது இந்த பாரிய விண்மீன் பேரடைகள் முதன்முறயாக உருவாகின என்றாகும்.
அகச்சிவப்புக் கதிர்வீச்சில் ஆய்வுசெய்வதர்கான காரணம், ஒன்று, தூசுகளைக் கடந்து அகச்சிவப்புக் கதிர்வீச்சு எம்மை வந்தடையும், மற்றது மிகத் தொலைவில் இருக்கும் பொருட்களை அகச்சிவப்புக் கதிர்வீச்சு மூலமே பார்க்க முடியும்.
எமக்கு அருகில் இருக்கும் பாரிய விண்மீன் பேரடைகள் பிரபஞ்சம் தோன்றி மூன்று பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் உருவாகியவை. மற்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட பாரிய விண்மீன் பேரடைகள் பிரபஞ்சம் தோன்றி ஒரு பில்லியன் ஆண்டுகளின் பின்னர் தோன்றி இருக்கவேண்டும்.
பிரபஞ்சம் தோன்றி ஒரு பில்லியன் வருடங்களுக்குள் உருவாகிய எந்தவொரு பாரிய விண்மீன் பேரடைகளையும் இவர்கள் கண்டறியவில்லை. ஆகவே இந்தப் பாரிய பிரபஞ்ச அரக்கர்கள், பிரபஞ்சம் தோன்றி ஒரு பில்லியன் வருடங்களுக்குப் பிறகே தோன்றியிருக்கவேண்டும்.
அதேபோல முன்னர் ஆய்வாளர்கள் கருதியது போல இந்த ஆதிகால பாரிய விண்மீன் பேரடைகள் எண்ணிக்கையில் குறைவாகக் காணப்படவில்லை. இந்தப் புதிதாகக் கண்டறியப்பட்ட விண்மீன் பேரடைகளில் பாதிக்குப் பாதி பாரிய விண்மீன் பேரடைகளாகும், மற்றும் இவை பிரபஞ்சம் தோன்றி 1.1 பில்லியன் வருடத்தில் இருந்து 1.5 பில்லியன் வருடங்களுக்குள் தோன்றியிருக்கவேண்டும்.
இந்தப் புதிய முடிவுகள், எமது பேரடைகள் பற்றிய புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை எமது பேரடைகள் பற்றிய கோட்பாடுப் படி, பாரிய விண்மீன் பேரடைகள் பிரபஞ்சம் தொடங்கி சிறிது காலத்தில் உருவாகியிருக்க முடியாது. எனவே இந்தப் புதிய முடிவுகள் எமது கோட்பாடுகளை மீளாய்வு செய்ய உதவும்.
மேலும் இந்த ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சுற்றி அதிகளவான தூசுகள் காணப்பட்டால், இந்த UltraVISTA ஆய்வினாலும் இப்படியான விண்மீன் பேரடைகளைக் கண்டறிய முடியாமல் போய்விடும். ஆகவே இன்னும் அதிகமாக பாரிய விண்மீன் பேரடைகள் பிரபஞ்சம் தொடங்கிய காலகட்டத்தில் உருவாகியிருக்கக் கூடும் என்பதும் ஒரு சாத்தியமான விடயமாகும்.
இறுதியாக, தற்போதய ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, பிரபஞ்சம் தோன்றி 1.1 பில்லியன் வருடங்களில் இப்படி பாரிய விண்மீன் பேரடைகள் தோன்றிவிட்டது உறுதியாகிறது!
தகவல்: ESO
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.