சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் “கிடைத்திருந்த” அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்!
ஒரு தடவை தான் நான் அவரின் கதையை நேரடியாகக் கேட்டு இருக்கிறேன். தரம் ஐந்தில் கல்வி கற்கும்போது வாழைச்சேனை காகித ஆலையில் வேலைசெய்யும் மக்களின் குழந்தைகளுக்கு அங்கே கதை சொல்ல மாஸ்டர் சிவலிங்கம் வருகிறார் என்றவுடன், இதுவரை காலமும் வெறும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த ஒரு மனிதர் அதுவும் கதை சொல்வதில் வல்லவர் வருகிறார் என்று, அவர் வருகைதந்த அன்று காகிதஆலை விளையாட்டுக் கழக மண்டபத்தில் அவரை நேரடியாகப் பார்த்த ஞாபகம் என்றும் அப்படியே இருக்கிறது.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அவரைப் பார்த்த அந்த நினைவுதான் ஞாபகம் இருகிறதே தவிர அவர் சொன்ன கதை அல்ல. அதற்குக் காரணம் அவர் மேல் கொண்டிருந்த பிரமிப்பாக இருக்கலாம். அவரைப் பார்ப்பதில் இருந்த கவனம் அவர் சொன்ன கதையின் மேல் அன்று இருக்கவில்லை.
அதன் பிறகு 25 வயதில் தான் ஒரு நிகழ்வில் அவரைப் பார்க்கக் கிடைத்தது. அதன் பின்னர் ஒரு தடவை என்று நினைக்கிறன், ஆனால் பேசியது இல்லை, தொலைவில் இருந்து பார்த்ததோடு சரி.
எப்படியோ, அவரது அந்தக் கதை சொல்லும் திறமை மிகபெரியது. என்னை ஆளாகிய, அல்லது செதுக்கிய (எனது சைஸைப் பார்த்தும் செதுக்கிய என்ற சொல்லைப் பயன்படுத்த உனக்கு எப்படிடா மனசு வந்தது என்று கேட்போர்கள், மன்னிக்கவும்! ) ஆளுமைகளில் இவரும் ஒருவர்.
நண்பர் மதன் அவர்கள் நேற்று மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை நேரில் கண்டு எடுத்த நேர்காணலை மிக அழகான உரைநடையில் நேர்த்தியாக அவரது கலைஞன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். மாஸ்டர் பற்றிய பல தெரியாத அறியாத விடயங்களை அந்த நேர்காணல் பதிவின் மூலம் அறியக்கிடைத்தது பேரும் மகிழ்ச்சியே.
உண்மையிலேயே நாங்கள் அனுபவித்த பல விடயங்கள் இன்று சிறுவர்களுக்குக் கிடைபதில்லை என்றே சொல்லவேண்டும். அதில் இந்தக் கதைகள் ஒரு முக்கியமான விடயம், இன்று மறைந்தே போய்விட்டது. எல்லாக் குழந்தைகளும் ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், அல்லது tab போன்றவற்றை வைத்துக்கொண்டு, அருகில் அடுத்த கதிரையில் அமர்ந்திருக்கும் நண்பனுக்கும் மசென்ஜர் மூலம் மெசேஜ் அனுப்புகிறான்!
என்னடா வெறும் கதை தானே அதனை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்தானே என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஒருவர் விபரனையுடன் சொல்லும் போது அதனைக் கேட்பது, அந்தக் கதைக்குள்ளே எம்மைக் கொண்டு சென்றுவிடும். சொல்லிப் புரியாது, அனுபவிக்கவேண்டும்.
எப்படியோ, ஒரு அருமையான நேர்காணலை எமக்குத் தந்த மதன் அண்ணனுக்கு நன்றிகள், அவரது நேர்காணலை வாசிப்பதற்கான லிங்க் இதோ: http://www.muthusom.com/2015/11/MasterSivalinkam.html