மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்!

இந்தப் பிரபஞ்சத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தாலும், மிகவும் மோசமான விடயம் அதன் அளவுதான். ரொம்ப பெரிசு இந்தப் பிரபஞ்சம். சூரியனுக்கும் பூமிக்குமே இடைவெளி 150 மில்லியன் கிமீ! ஒளிக்கு 8 சொச்சம் நிமிஷம் ஆகின்றது சூரியனில் இருந்து பூமிக்கு வருவதற்கு. இதுபோக, நமக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் 4.5 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. அங்கிருந்து ஒளி வருவதற்கு 4.5 வருடங்கள் எடுக்கும்; ஒளி ஒரு செக்கனுக்கு 300,000 கிமீ பயணிக்கும் என்பதும் கூடுதல் தகவல்!

ஆகவே எப்படி இவ்வளவு பெரிய விண்வெளியில் நாம் பயணிப்பது? மற்றைய விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள் என்பனவற்றை சென்று பார்ப்பது என்பது தற்போதுவரை முடியாத காரியம். காரணம் நமது ராக்கெட்கள்.

வெறும் ரசாயனத்தாக்கத்தை பயன்படுத்தி இயங்கும் ராக்கெட்கள் ஒளியின் வேகத்தில் 5% கூட செல்வதில்லை. நம்மிடம் இருக்கும் ராக்கெட்களை பயன்படுத்தி செவ்வாய்க்குச் செல்ல குறைந்தது 5 மாதங்களாவது எடுக்கும்; அது அவ்வளவு சுவாரஸ்யமான பயணமாக இருக்காது என்பது ஒரு விடயம் என்ற போதிலும், காலவிரையைம் அதிகமல்லவா? அருகில் இருக்கும் செவ்வாய்க்குச் செல்லவே இவ்வளவு நாட்கள் எடுத்தால், மற்றைய விண்மீன் தொகுதிகளைப் பற்றி சிந்திக்கவே வேண்டாம்!

Cbx8IJYVIAAtWxq

அதற்காகத்தான் வேகமாகச் செல்லக்கூடிய பல்வேறு ராக்கெட் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு புதிய முறையை நாசா ஆய்வாளர் பிலிப் லூபின் என்பவர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

ஒளியணு உந்துவிசை மூலம் செயற்படும் இந்த முறையிலான ராக்கெட்கள், 100 kg எடை கொண்ட விண்கலத்தை, பூமியில் இருந்து செவ்வாய்க்கு வெறும் மூன்றே நாட்களில் கொண்டு சேர்த்துவிடும் என்று பிலிப் கூறுகின்றார்.

தற்போதைய ராக்கெட்கள் இரசாயன எரிபொருளை பயன்படுத்தியே உந்துவிசையை உருவாக்குகிறது. இதிலிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, எரிபொருளின் எடையும் ராக்கெட் எடையுடன் சேர்வதால், இது வினைத்திறனற்ற ஒரு முறையாகும். ஆனால் ஒளியணு உந்துவிசை மின்காந்த கதிர்வீச்சைப் பயன்படுத்துவதால், மிகவும் வினைத்திறன் மிக்கது. ஆனால் இதிலிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை பெரிய பொருட்களை ஒளியைக்கொண்டு உந்துவதாகும்!

பூமியில் துகள்முடிக்கிகளில் (particle accelerator) அணுத்துணிக்கைகள் ஒளியின் வேகத்திற்கு முடுக்கப்படுகின்றன, பாரிய வினைத்திறனான மின்காந்தங்கள் கொண்டு இவை இயக்கப்படுகின்றன, ஆனால் அணுத்துணிக்கைகளை முடுக்குவதுபோல பாரிய பொருட்களை இதுவரை நாம் முடுக்கியது இல்லை. பாரிய பொருட்களுக்கான ஒளியணு மூலமான உந்துவிசை இன்னும் சாத்தியமாகாத ஒரு தொழில்நுட்பமாகவே இருக்கின்றது. ஆனாலும் இது சாத்தியம் என்று பிலிப் கூறுகின்றார்.

ஒளியணுக்களுக்கு திணிவு இல்லாவிடினும், சக்தியும் உந்தமும் காணப்படுகிறது. ஆகவே ஒளியணு பெரிய ஒரு பொருளில் படும் போது, சிறியளவு உந்துவிசையை  அந்தப் பொருளில் ஒளியணுக்கள் உருவாக்குகின்றன. போதுமானளவு பெரிய பாய்மரக்கப்பல்களின் பாய்களைப்போல பெரிய அளவிலான பாய்களைப் பயன்படுத்துவதன் மூலம் போதுமானளவு உந்துவிசையை உருவாக்க முடியும் என்றும் பிலிப் கூறுகின்றார்.

அதுமட்டுமல்லாது இந்த ஒளியணு உந்துவிசையைப் பயன்படுத்தி அண்ணளவாக ஒளியின் வேகத்தில் 30% வரை பயணிக்க முடியும் என்பது பிலிப்பின் வாதம். இதற்கான மாதிரி ஆய்வுகளை பிலிப் மற்றும் அவரின் சகாக்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த முறை சாத்தியப்படும் சந்தர்ப்பத்தில், சூரியத் தொகுதியைக் கடந்த விண்வெளிப் பயணங்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நாசா பிலிப் மற்றும் அவரது சகாக்களுக்கு சிறிய தொகையை வழங்கி இந்த ஆய்வை ஊக்கப்படுத்தியுள்ளது. வெகு விரைவில் சில முடிவுகள் தெரியவரலாம், பார்க்கலாம்.

மேலும் இது சம்பந்தமான வீடியோவை கீழே பார்க்கலாம்.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam