பூமி உருவாகி முதன் முதலில் சமுத்திரங்கள் தோன்றி இருந்த காலப்பகுதியில் சமுத்திரங்கள் மிக அதிகமான வெப்பநிலையில் காணப்பட்டன என்றே இதுவரை கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு முடிவு வேறுவிதமாகக் கூறுகின்றது. அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது.
இந்த ஆய்வின் படி, பூமியானது கடந்த 3.5 பில்லியன் வருடங்களுக்கு உயிரினம் உருவாக மற்றும் வாழத் தேவையான வெப்பநிலை அளவிலேயே காணப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.
நோர்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் Harald Furnes, மற்றும் தென்னாபிரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் Maarten de Wit ஆகிய இரு ஆய்வாளர்கள், தென்னாபிரிக்க Barberton Greenstone Belt பகுதியில் உள்ள பாறைப் படிமங்களை ஆய்வு செய்ததிலேயே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. இவர்கள் ஆறு வருடங்களாக இந்தப் பாறைப்படிமங்களை ஆய்வு செய்துள்ளனர்.
ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கான chert எனப்படும் எரிமலை வெடிப்பினால் உருவான கரிய சிலிக்காப்பாறை மாதிரிகளை Barberton பகுதியில் இருந்து எடுத்துள்ளனர், இவை 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் கடலின் ஆழத்தில் உருவானபாறைகளாகும். மேலும் இவர்கள் இந்த சிலிக்கா பாறைகள் உருவான பின்னர் 30 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் உருவாகிய எரிமலைப் பாறைகளையும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்தப் பாறைகளை ஆய்வுசெயததில் ஆக்ஸிஜன்-18 எனப்படும் சமதானி(isotope) செறிவாகக் காணப்படுவது எப்படியான வெப்பநிலை அந்தக்காலப்பகுதியில் நிலவியிருக்கலாம் என்று கணிக்க உதவுகிறது. மேலும் சற்று இளமையான, கடற்கரையில் இருந்த பாறைகளில், களித்தன்மையுள்ள வறண்ட பாறைகளின் தன்மையும் காணப்படுகின்றன, இது பனிப்பாறைப் பிரதேசத்தில் உருவாகும் ஒருவிதமான பாறையாகும். அதேபோல மிகவும் வயதான பாறைகளில் ஜிப்சம் அதிகளவில் காணப்படுகின்றது, 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், குளிர்ச்சியான ஆழமான கடல்ப்பகுதியில் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகவே 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் சமுத்திரங்களின் மேற்பரப்பு மற்றும் ஆழமான பகுதிகள் அண்ணளவாக 0 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் காணப்பட்டிருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
மேலும் தற்போதைய சமுத்திர வெப்பநிலையான 0 பாகை செல்சியஸ் தொடக்கம் 16 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலையைவிட முன்னைய ஆய்வுகளின் படி ஆதிகால சமுத்திர வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் தொடக்கம் 80 பாகை செல்சியஸ் வரை இருந்திர்க்கவேண்டும் என்று ஏன் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர் என்றும் Furnes மற்றும் Wit கண்டறிந்துள்ளனர். முன்னைய ஆய்வுகளின் படி, எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து ஆக்ஸிஜன் சமதானியின் அளவைக் கொண்டே வெப்பநிலை கண்டறியப்பட்டது, ஆனால் அதற்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் அந்தந்தப் பிரதேசக்கடலில் இருந்த வெப்பநிலையைக் குறிப்பவையாக இருந்ததே தவிர, மொத்த சமுத்திரத்தின் வெப்பநிலையை அது குறிக்கவில்லை. Barberton பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் துல்லியமான ஆதாரங்கள் கடலடியில் இருக்கும் எரிமலை செயற்பாடுகள் காரணமாக அவை உருவாகியிருக்கவேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன.
இதனடிப்படையில், கடலடியில் இருந்து எரிமலை பிளவுகள் மூலம் வெளிவந்த வெப்பம், குறித்த பிரதேசத்திற்கு மட்டுமே சார்பானதாக இருந்தது, அவை மொத்த உலக சமுத்திரத்தின் வெப்பநிலையின் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பது, Wit மற்றும் Furnes நடத்திய பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்தப் புதிய ஆய்வு, எப்படி உயிரினங்கள் பூமியில் தோன்றியிருக்கலாம் என்று நாம் இதுவரை கருதிய முறைகளை சற்றே குழப்பத்திற்கு உள்ளாக்கலாம். இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, குளிர்ச்சியான சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும் எரிமலை பிளவுகள் மூலம் உருவாகிய வெப்பநிலை, அங்கு பாக்டீரியாக்கள் உருவாகவும், பல்கிப்பெருகவும் தேவையான கனிப்பொருட்களைக் கொண்டிருக்கலாம்.
பல்வேறு புவியியல் விஞ்ஞானிகள் இந்த புதிய ஆய்வின் முடிவுகள் முக்கியமானவை என்று கருதுகின்றனர், இது பூமியின் ஆரம்பக்கால சூழலை எமக்கு விளக்கும் ஒரு ஆய்வாகும்.
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.