அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இது எதிர்காலத்தில் மிகபெரிய உயிரினப் பேரழிவுக்கு வித்தாகலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

நீராவியைப் பயன்படுத்தி எந்திரங்களை இயக்கத்தொடங்கிய காலகட்டமான தொழிற்புரட்சி தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை அண்ணளவாக 2000 பில்லியன் டன் காபனீர் ஆக்சைட்டு நாம் வெளியிட்டுள்ளோம் என்று சர்வதேச காலநிலை மாற்ற அவதானிப்பு சபை தெரிவிகின்றது! அளவுக்கதிகமான காபனீர்ஆக்சைட்டு வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிப்பிற்கு பிரதான காரணியாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூமியின் வரலாற்றைப் பார்க்கும் போது, கடந்த பல மில்லியன் வருடங்களில் ஏற்படாத அளவிற்கு வளிமண்டலத்தின் காபன் அளவு அதிகரித்து வருவதை ஹவாய் பல்கலைக்கழகத்தின் ஆவாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அண்ணளவாக 56 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், மிகப்பெரிய கண்டமாக இருந்த பண்கீயா பிளவுபட்ட போது, கடல் அடித்தளத்தில் உறைந்துகிடந்த மீதேன் வாயு வளிமண்டலத்தில் கலந்ததனால் வளிமண்டல வெப்பநிலை 5 பாகை செல்சியசால் அதிகரித்தது. வெறும் ஐந்து செல்சியல் அப்படியென்ன மாற்றத்தைச் செய்துவிடும் என்று நீங்கள் கருதினால், அக்கால உயிரினப் பேரழிவிற்கு முக்கிய காரணியாக இருந்தது அதுவே.

petm_vs_modern_emissions
தற்போதைய வெப்பநிலை மாற்றம் – சிவப்பு, 56 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றம் – நீலம். ஒரு ஒப்பீடு.

வெப்பநிலையில் ஏற்பட்ட ஆரம்ப அதிகரிப்பு, மேலும் மேலும், பச்சை வீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கும் வீதத்தை அதிகரித்தது, இது ஒரு சங்கிலித் தொடரான நிகழ்வாக நடைபெற்றது. மேலும் பாரிய நிலப்பரப்பு பிரிகையடைந்து கொண்டிருந்த காலப்பகுதி என்பதால், அதிகளவான எரிமலை வெடிப்புக்கள் மற்றும் கடலடியில் இருந்த நிலப்பரப்பு என்பன மேலே வெளிவர, உறைந்த நிலையில் இருந்த மீதேன் ஹைட்ரேட்ஸ் உருகி அளவுக்கதிகமான மீதேனை வெளியிட்டு மேலும் வெப்பநிலையை பாதித்தது. காபனீர் ஆக்சைட்டோடு ஒப்பிடும் போது மீதேன் 20-25 வீதம் அதிகளவு வளிமண்டல வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

அக்காலப்பகுதியில் வருடத்திற்கு 2 பில்லியன் தொன் தொடக்கம் 5 பில்லியன் தொன் வரை காபனீர் ஆக்சைட்டு வளிமண்டலத்தில் கலந்தது. மேலும் 5 பாகை வெப்பநிலை மாற்றத்தை சரி செய்ய, அதாவது வளிமண்டலத்தில் இருந்த காபனீர் ஆக்சைட்டை குறைக்க அடுத்த 200,000 வருடங்கள் எடுத்தது என்பதும் கூடுதல் தகவல்.

ஆனால் தற்போது நடைபெறும் வெப்பநிலை மாற்றம் மிக வீரியமானது. தற்போது ஒவ்வொரு வருடமும் வளிமண்டலத்தில் சேரும் காபனீர் ஆக்சைட்டின் அளவு 30 பில்லியன் தொன்! அதுவும் நாம் பெற்றோலிய எரிபொருளைப் பயன்படுத்துவதால் வெளிவருவதே, ஒரு ஒப்பீட்டிற்கு எரிமலை வெடிப்பில் 0.2 பில்லியன் தொன் காபனீர் ஆக்சைட்டு வெளிவிடப்படும்.

zihhxstz8ejasllroon9
Sarychev எரிமலை வெடிப்பு – 2009. படம்: NASA

அக்காலப்பகுதியில், அதாவது 20,000 வருட காலப்பகுதியில் வெப்பநிலை மாற்றம் 6 பாகை தொடக்கம் 9 பாகை வரை அதிகரித்தது என்றால், அண்ணளவாக ஒவ்வொரு நூறு வருடத்திற்கு 0.025 பாகை வீதம் அதிகரித்து எனலாம். ஆனால் தற்போது 100 வருடங்களில் 1 பாகை தொடக்கம் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கிறது. இது 56 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பை விட பத்து மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும்!

எவ்வளவு வேகமாக வளிமண்டலத்தில் காபனீர் ஆக்சைட்டு சேருகின்றதோ அதே வேகத்தில் வெப்பநிலையும் அதிகரிக்கும். மேலும் எவ்வளவு வெப்பநிலை அதிகரிக்கும் என்பதைப்போலவே எவ்வளவே வேகமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்பதும் ஆபத்தானது. திடிரென்ற மாற்றம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

நாம் ஏற்கனவே வெப்பநிலை அதிகரிப்பின் தாக்கத்தை வெளிப்படையாக பார்க்ககூடியதாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  கடல் மட்டம் அதிகரிப்பு, கடல் பனிப்பாறைகளின் உருகும் வீதம் அதிகரிப்பு, அதிகளவான காட்டுத்தீ, மிக மோசமான வறட்சி, வெள்ளம், கடல் அமிலமடைதல் மற்றும் மண்அரிப்பு என்பன இதன் விளைவுகளே.

மேலும் எதிர்காலத்தில், வளிமண்டல காற்றின் தூய்மைத்தன்மை குறைவடைதல், சமுத்திர நீரோட்டம் சிதைவடைதல், இதுவரை கண்டிராத பாரிய புயல்கள் மற்றும் சூறாவளிகள் என்பன ஏற்படும் அபாயம் உள்ளது என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இயற்கையில் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு நடைபெறும் என்றாலும், தற்போதைய முடிவுகள், மனிதனின் செயற்பாடுகள் காரணமாக இந்த காலநிலை மாற்றம் துரித்தப்படுத்தப் பட்டுள்ளதை வெளிப்படையாக நிருபிக்கின்றது. அதனை நாம் நிராகரிப்பது என்பது மிகப்பெரிய முட்டாள்த்தனமான விடையமாகும்.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam