சனியின் வளையங்கள் புதியது

சூரியத்தொகுதியில் இருக்கும் மிகவும் விசித்திரமான மற்றும் பிரமிக்கத்தக்க கோள் எது என்று கேட்டால், அது சனியாகத்தான் இருக்கும்! காரணம் அதனைச் சுற்றியிருக்கும் வளையங்கள்.

தற்போது விஞ்ஞானிகள் இந்த வளையம் எப்போது உருவாகியிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். பூமியில் டைனோசர்கள் உலாவிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்த வளையங்கள் சனியைச் சுற்றி உருவாகியிருக்கவேண்டும் என்பது இவர்கள் முடிவு – டைனோசர்களிடம் பாரிய தொலைக்காட்டிகள் இருந்திருந்தால், இந்த அழகிய பிரமாண்ட நிகழ்வை அவர்கள் பார்த்திருக்கலாம்!

பொதுவாக, 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் சனி தோன்றிய போதே இந்த வளையங்களும், சனியின் துணைக்கோள்களும் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும், தொலைவில் சனியைச் சுற்றிவரும் துணைக்கோள்களுக்கு இது பொருந்தும், ஆனால் சனிக்கு மிக அருகில் சுற்றிவரும் துணைக்கோள்கள் நிச்சயம் புதிதாக சனியுடன் இணைந்த துணைக்கோள்களே. சனிக்கு 62 துணைக்கோள்கள் உண்டு.

2009-saturn
சனியும் அதன் நான்கு துணைக்கோள்களும். சனியின் மிக முக்கிய அமைப்பு அதன் பிரமாண்டமான வளையங்கள்.

சனியின் துணைக்கோள்களின் பாதையை ஆய்வு செய்துபார்த்த விண்ணியலாளர்கள், சனிக்கு மிக அருகில் இருக்கும் துணைக்கோள்கள், மற்றைய துணைக்கோள்களின் பாதையில் செயவாக்குச் செலுத்தும் என்று கண்டறிந்தனர். அதனை வைத்துப் பார்க்கும் போது, சனிக்கு மிக அருகில் இருந்த துணைக்கோள்களில் சில, ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி சனியின் வளையங்களை உருவாக்கியிருக்க வேண்டும், அத்தோடு தற்போது சனியை மிக அருகில் சுற்றிவரும் துணைக்கோள்களும் இந்த செயன்முறையிலேயே உருவாகியிருக்கவேண்டும் என்றும் விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.

எப்படியிருப்பினும், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய காரணிகள் பல உண்டு. அதில் முக்கியமான ஒன்று, சனிக்கு அருகில் தற்போது சுற்றிவரும் துணைக்கோள்கள், எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவே பெரியதாக உருவாகியது என்பதாகும்.

ஆகவே மேற்கொண்டு ஆய்வுகள் நடாத்தப்படவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் குழு கருதுகின்றது.


 

மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam