வெள்ளியின் மின்சாரப் புயல்

ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ் (2005 இல் வெள்ளிக்கு அனுப்பப்பட்டது) விண்கலத்தின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்களின் ஆய்வு முடிவுகள் வெள்ளியில் மின்சாரப் புயல் அடிப்பதாக தெரிவிக்கின்றது. இது வெள்ளியின் வளிமண்டலத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளை அகற்றியிருக்கலாம் என்றும், இதனால் வெள்ளியில் இருந்த சமுத்திரங்கள் அழிந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கோளின் வளிமண்டலத்தில் உருவாகும் மின்சாரப் புயல், அந்தக் கோளின் மேற்பரப்பில் இருக்கும் மொத்த ஆக்ஸிஜன் மூலக்கூறுகளையும் விண்வெளிக்கு கடத்திக்கொண்டு சென்றுவிடும் என்று யாரும் இதுவரை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது இந்த ஆய்வை மேற்கொண்ட Collinson இன் கருத்து, மேலும் நாம் பூமியைப் போன்ற கோள்களை தேடும் போது, இந்த மின்சாரப் புயலையும் கருத்தில் கொண்டால்தான் உயிர்வாழத் தேவையான கோள்களைக் கண்டறிய வசதியாக இருக்கும் என்கிறார்.

 

venus-electric-wind-nasa
பட உதவி: இணையம்

 

வெள்ளியை பூமியின் சகோதரக் கோள் என்று அழைத்தாலும், இரண்டின் அளவும் ஈர்புவிசையும் ஒரே அளவாக இருந்த போதிலும், பூமிக்கும் வெள்ளிக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

வெள்ளியின் தற்போதைய மேற்பரப்பு வெப்பநிலை 460 பாகை செல்சியஸ். நீராலான சமுத்திரங்கள் இருந்திருந்தாலும், இந்த வெப்பநிலைக்கு தற்போது அவை அனைத்தும் ஆவியாகிவிட்டிருக்கும்! இன்று வெள்ளி ஒரு அரக்கனாக காட்சியளிக்கிறது.

வெள்ளியின் வளிமண்டலமும், பூமியின் வளிமண்டலத்தைவிட 100 மடங்கு அடர்த்தியானது. மேலும் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் நீர் மூலக்கூறுகளின் அளவோடு ஒப்பிடும் போது, வெள்ளியில் 10000 இல் இருந்து 100000 மடங்கு குறைவான நீர் மூலக்கூறுகளே காணப்படுகின்றன. அப்படியாயின் ஆவியாகிய சமுத்திர நீர் எங்கே சென்றது என்கிற கேள்வி பல வருடங்களாக ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆவியாகிய நீர் மூலக்கூறுகள், ஹைட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆக பிரிவடைந்து இருக்கலாம் எனவும், பிரிவடைந்த பாரமற்ற ஹைட்ரோஜன் விண்வெளிக்கு தப்பித்துவிட, ஆக்ஸிஜன், அக்ஸைடாக மாறி பாறைகளின் மேலே பல பில்லியன் வருடங்களில் படிந்துவிட்டது என்பது இப்போதைய ஆய்வாளர்களின் கருத்து. அதுமட்டுமலாது சூரியனில் இருந்து மணிக்கு மில்லியன் கிலோமீட்டர்கள் வேகத்தில் வரும் மின்ஏற்றமடைந்த அணுத் துணிக்கைகளின் புயல், எஞ்சியிருந்த ஆக்ஸிஜனையும், நீரையும் வெள்ளியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு கடத்திச் சென்றிருக்கலாம்.

ஒவ்வொரு கோள்களுக்கும் ஈர்ப்பு விசைப் புலம் இருப்பது போல, வளிமண்டலம் இருக்கும் ஒவ்வொரு கோள்களையும் சுற்றி காந்தப்புலம் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஈர்ப்புவிசை கோளின் மேற்பரப்பில் இருக்கும் வளிமண்டலத்தை பிணைத்து வைக்க உதவுவது போல, காந்தப்புலம் மேல்மட்ட வளிமண்டலத்தை குறித்த கோளைவிட்டு விண்வெளிக்கு சிதறடிக்கவும் செய்யும்!

வெள்ளியில் நடந்ததும் இதுதான், பாரம் குறைந்த ஹைட்ரோஜன் அணுக்களை இலகுவாக மேலே தூக்கிச் சென்ற காந்தப் புயல், மிகவும் சக்திவைந்த்தாக இருந்ததால், மின்னேற்றமுள்ள நீரின் ஆக்ஸிஜன் அயன்களை இலகுவாக மேலேயுள்ள மேல்மட்ட வளிமண்டலத்திற்கு கொண்டுசெல்ல, அங்கிருந்து விண்வெளிக்கு தப்பித்துச் செல்வதற்கு ஆக்ஸிஜன் அணுக்களுக்கு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

வெள்ளியின் மின்காந்தப் புலத்தை அறிவதற்கு ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்த இலத்திரன் நிரமாலைக்கருவியை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இந்தக் கருவியைப் பயன்படுத்தி, வெள்ளியின் மேல்மட்ட வளிமண்டலத்தில் இருந்து தப்பிக்கும் இலத்திரன்களை ஆய்வாளர்கள் நோட்டமிட்டனர். அவர்கள் எதிர்பார்த்த வேகத்தைவிட இந்த இலத்திரன்கள் வேகமாக பயணித்ததால், அதன் வேகத்தை குறிப்பாக கணக்கிட்டபோது, பூமியின் காந்தப் புலத்தின் அளவைவிட, வெள்ளியின் காந்தப்புலம் ஐந்து மடங்கு வலிமையானது என்பது கண்டறியப்பட்டது.

ஆனாலும் பூமியைவிட வெள்ளியின் காந்தப் புலம் அதிக வலிமை கொண்டதாக காணப்படுவதற்கு காரணம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம், வெள்ளி பூமியைவிட சூரியனுக்கு அருகில் இருப்பதால், அதன் மீது விழும் சூரியனின் புறவூதாக் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் இப்படி வலிமையான காந்தப் புலம் வெள்ளிக்கு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வெள்ளியின் காந்தப் புலத்தை மட்டுமல்லாது, சனியின் துணைக்கோளான டைட்டான் மற்றும் செவ்வாயிலும் அவற்றின் காந்தப் புலத்தைப் பற்றி ஆய்வுகள் நடக்கின்றன.

செவ்வாயைப் பொறுத்தவரை, அதன் மேற்பரப்பில் இருந்த சமுத்திர நீர் என்னானது என்று சரியான விடை இன்றுவரை கண்டறியப்படவில்லை. அதனைக் கண்டறிவதற்கு என்றே சென்ற மேவன் ரோபோ விண்கலம் மூலம் பெறப்படும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ, உயிர் தோன்ற நீர் அவசியம் என்னும் போது, இன்று நமக்கு “மின்சாரப் புயல்” என்கிற கோளின் காந்தப் புலம் கூட உயிர்கள் தோன்றுவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்று தெரிகிறது.

தகவல்: நாசா


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam