உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

இந்தப் பிரபஞ்சத்தில் என்னை வியப்பில் ஆழ்த்தும் பலவிடயங்கள் உண்டு. இரவு வானையும், அதில் தெரியும் மின்மினிப் புள்ளிகளையும் போல என்னை மெய்சிலிர்க்க வைத்தவை வேறு ஒன்றும் இல்லை எனலாம். சிறுவயது முதலே இரவு வானில் மின்னும் விண்மீன்கள், பிரகாசிக்கும் கோள்கள், மற்றும் வீரென்று வேகமாகச் செல்லும் செய்மதிகள், உடைந்துவிழும் வான்கற்கள் இப்படி என்னால் பார்க்க முடிந்தவை எல்லாவற்றாலும் ஈர்க்கப்பட்டு அதனைப் பற்றி மேலும் படிக்கத் தூண்டியது!

அப்படி மேலே செல்லச் செல்ல அறிமுகமாகிய, விண்மீன் பேரடைகள்,  நியூட்ரோன் விண்மீன்கள், பல்சார்கள் மற்றும் கருந்துளைகள், குவாசார்கள் போன்ற அரக்கர்களைப் பற்றி அறிய முடிந்தது. இது எண்ணிலடங்காத மாற்றங்களை எனக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் பூமியில் நாம் பார்க்கும், கேட்கும் மற்றும் உணரும் விடயங்கள், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உண்மையின் சிறு துளி என்றும் எடுத்துக்கொள்ள முடியாதளவு சிறியது. “common sense” என்று நாம் கருதிக்கொள்வது எல்லாமே சுத்த மடத்தனம் என்பது, ஐன்ஸ்டீன், எர்வின் சுரோடிங்கர் போன்றோரின் இயற்பியல் விதிகளில் பிரதிபலிக்கிறது.

இதிலும் என்னை மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தூண்டும் விடயம், இப்படி நாம் அனுபவிக்கும் இயற்கைக்கும் முரனான விதிகளை எப்படி இவர்களால் கூற முடிந்தது என்றுதான், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இதற்குக் காரணமான அந்த கொசகொச, கொளகொளா சமாச்சாரம் – மூளை!

மனித மூளை, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச் சிக்கலான அமைப்புக்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. நமது மூளையில் அண்ணளவாக 86 பில்லியன் நியுரோன்கள் உள்ளது என 2009 இல் ஒரு குழு ஆய்வுசெய்து முடிவை வெளியிட்டுள்ளது. நியுரோன்கள் என்பது நமது மூளையின் அடிப்படைக் கட்டமைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். நமது சூரியத் தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான “பால்வீதி”யில் அண்ணளவாக 200 – 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே நான்கு பேரின் மூளையில் இருக்கும் நியுரோன்களின் எண்ணிக்கை, இந்தப் பால்வீதியில் இருக்கும் விண்மீன்களின் எண்ணிக்கைக்குச் சமமாக வரும்!

Culture_of_rat_brain_cells_stained_with_antibody_to_MAP2_green_Neurofilament_red_and_DNA_blue
இயற்கையின் அற்புதம்: நியுரோன் இணைப்புகள்.

ஆனால் இந்தப் பால்வீதியோடு ஒப்பிடும் போது மனித மூளை எவ்வளவு சிறியது என்று உங்களுக்கே தெரியும்! அப்படியாக அவ்வளவு சிறிய அமைப்பினுள் எவ்வளவு சிக்கலான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஒரு விந்தையான விடயம் என்பதை விட ஆச்சரியமான, ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய விடயம்.

என்னையும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை எழுதத் தூண்டியது இந்த மூளைதான்! ஆனால் வெறும் மூளையைப் பற்றி மட்டும் தேடாமல், இந்த மூளை எப்படி வந்தது? மனதனாகிய நாம் எப்படி வந்தோம்? இந்தப் பூமியில் உயிர்கள் எப்படித் தோன்றின? எமது உயிரினங்களைப் பற்றிய கருத்துக்களும் கோட்பாடுகளும் என்ன? என்று பல்வேறு பட்ட கேள்விகளுக்குப் பதிலைத் தேடியதாக இந்தப் பயணம் அமையப்போகிறது.

கருந்துளைகள், விண்மீன் பேரடைகள் வானில் எங்கோ இருக்கும் அதிசயக்கத்தக்க விடயங்கள் என்றால், எமக்கு அருகிலேயே இருக்கும் “உயிர்” மற்றும் “உயிரினம்” அதிசயத்திலும் அதிசயம். நான் ஒன்றும் உயிரியலாலரோ, அல்லது அதனைப் பற்றிய துறையில் ஆய்வு செய்பவரோ அல்ல, மாறாக எனது அறிவியல் தேடல் இந்தப் பயணத்தில் கொண்டுவந்து விட்டுள்ளது.

என்னுடன் வாருங்கள், இந்தப் பூமியில் தோன்றிய உயிர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு புதிய உலகைக் காட்டுகிறேன். உங்களைக் கடிக்கும் நுளம்பும், அருகில் வரும் எறும்பும் எப்படி சாத்தியமாகியது என்று பார்க்கலாம்! மேலும் பூமியைத் தாண்டிய இடங்களில் தோன்ற வாய்ப்புள்ள உயிரினங்கள் பற்றியும் ஆராயலாம். என்னுடன் வாருங்கள்!

ஒரு குறிப்பு

இனி வரபோகும் கட்டுரைகளில் பல இடங்களில் ஆங்கிலப் பதங்கள் வரலாம், அவற்றைத் தமிழில் மொழிபெயர்ப்பதை விட அவற்றை அப்படியே ஆங்கிலத்தில் தரப்போகிறேன். இதற்குக் காரணம் உண்டு.

  1. பெரும்பாலான அடிக்கடிப் பயன்படுத்தப்படாத ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு தமிழ்ச் சொற்களைத் தேடிக் கண்டறிவது மிக மிகக் கடினம். ஆனால் இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் நீங்கள், குறித்த சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைத் தெரியப்படுத்தினால், நிச்சயம் அதனைக் கட்டுரையில் சேர்த்துக்கொள்வேன்.
  2. ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதால், நீங்கள் இலகுவாக அவற்றை கூகிள் போன்ற தேடல் பொறிகளில் தேடி மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அடுத்த பாகம்: உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam