உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்

முன்னைய பாகங்கள்

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்


அறிவியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு, “பெருவெடிப்புக் கோட்பாடு” (Big Bang theory) ஆகும். இங்கு நாம் “பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட” என்கிற சொற்தொடரை விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் தனக்குத் தெரியாத விடயத்தை தெரிந்ததாக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. அப்படிக் கருதினால் அது அறிவியலே இல்லை.

இன்று நாம் அவதானிக்கும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டு செல்கிறது என்பதற்கு எம்மிடம் பரிசோதனை ரீதியான ஆதாரங்கள் இருகின்றன. அதேபோல இன்று பார்க்கும் பிரபஞ்சம் பல்வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக அது விரிவடையும் முறை, அதனில் இருக்கும் அணுத் துணிக்கைகளின் அடர்த்தி, ஏன் அதிகளவாக ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் அணுக்கள் காணப்படுகின்றன என்கிற கேள்விகளுக்குப் பதில் தேவைப்படுகிறது.

“அது அப்படித்தான்” என்கிற பேச்சுக்கே அறிவியலில் இடமில்லை. ஆகவே தற்போது நாம் அவதானிக்கும் பிரபஞ்சத்தின் பண்புகளை விளக்கும் தெளிவான ஒரு அறிவியல் கோட்பாடு தேவைப்படுகிறது. அங்கேதான் இந்தப் பெருவெடிப்புக் கோட்பாடு வருகிறது.

இதனைப் புரிந்துகொள்ள இப்படி ஒரு மிக எளிமையான உதாரணத்தைப் பாருங்கள்:

நீங்கள் ஒரு டென்னிஸ் பந்தை எடுத்து வீசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது குறிப்பிட்ட தூரம் சென்று விழும் அல்லவா? தற்போது அது எவ்வளவு தூரம் சென்று விழுந்துள்ளது என்று கணக்கிட்டால், எவ்வளவு சக்தியைப் பயன்படுத்தி நீங்கள் வீசியிருபீர்கள் என்று கண்டுகொள்ளலாம். பூமியின் ஈர்ப்பு, மற்றும் நியுட்டனின் விதிகளைப் பயன்படுத்தி எம்மால் இதனைக் கணக்கிட்டு கண்டறியமுடியும்.

இப்போது இதனையே எதிர்மாறாகப் பார்க்கலாம். பந்து எறியப்பட்டு இங்கு இருக்கிறது. எங்கிருந்து எவ்வளவு தூரத்தில் எறியப்பட்டது என்று எமக்குத் தெரியாது, அதேபோல பூமியின் ஈர்ப்பு விசையின் அளவும் தெரியாது. இப்போது கேள்வி என்னவென்றால், எங்கிருந்து எவ்வளவு சக்தியைப் பயன்படுத்தி இந்தப் பந்து எறியப்பட்டது என்று கண்டறிவது எப்படி?

இங்குதான் “கோட்பாடு” என்று ஒன்று வருகிறது. கோட்பாடு (theory) என்பது விதி (law) அல்ல. கோட்பாடு, நமக்கு ஒரு படத்தை கண்முன் காட்டும். அதாவது, இங்கிருந்து தான், இவ்வளவு சக்தியைப் பயன்படுத்தி பந்து எறியப்பட்டிருக்கவேண்டும். ஏனென்றால், பூமியின் ஈர்ப்பு விசை இவ்வளவு என்று தோராயமாக கணக்கிடலாம் என்று கோட்பாடு எமக்குச் சொல்லும் (1. அதனைக் கணக்கிட்டுப் பார்க்க பரிசோதனைகளைச் செய்யவேண்டும். 2. இங்கு ஈர்ப்புவிசை என்பது உதாரணமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனைக் கவனத்திற்கொள்க). மற்றும் பந்து  விழுந்ததால் ஏற்பட்ட மணல் குழிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை என்பவற்றைக் கொண்டு கோட்பாடு உருவாக்கப்படுகிறது.

இதனை நீங்கள் ஒரு குற்றப்பிரிவில் துப்பறியும் வேலைக்கு ஒப்பாகச் சொல்லலாம். அறிவியல் கோட்பாட்டாளர்கள் இப்படியான இயற்கையின் துப்பறிவாளர்கள்.

ஆகவே இவர்கள் பல சாத்தியக்கூறுகளை காரணம் காட்டி, கோட்பாட்டை முன்வைப்பார்கள். எந்தக் கோட்பாடு, தற்போது நிலத்தில் கிடக்கும் பந்தின் நிலைமையை தெளிவாக எடுத்துச் சொல்கிறதோ, அந்தக் கோட்பாடு ஏற்கப்படும். அதனைத் தொடர்ந்து பரிசோதனைகள் மூலம் அந்தக் கோட்பாடு நிருபிக்கப்படும். பரிசோதனையின் போது வரும் முடிவுகள் கோட்பாட்டின் படி இல்லாமல் இருந்தால், அந்தக் குறிப்பிட கோட்பாட்டில் மாற்றங்கள் செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் முற்றிலும் கோட்பாட்டிற்கு முரணாக இருந்தால், அந்தக் கோட்பாடே கைவிடப்படும்! அல்லது முழுமையாக அந்தக் கோட்பாடு பூரணப்படுத்தப்படும். அதன் பின்னர் அது விதியாக மாறலாம். இதுதான் அறிவியல் முறைமை.

சரி, பெருவெடிப்புக்கு வருவோம், தற்போது பிரபஞ்சம் எப்படித் தோன்றியிருக்கலாம் என்று கூறும் கோட்பாடுகளில் நாம் அவதானித்த விடயங்களை கூடியளவு துல்லியத் தன்மையோடு கூறும் ஒரே கோட்பாடு, இந்தப் பெருவெடிப்புக் கோட்பாடுதான்.

பெருவெடிப்புக் கோட்பாடு

இந்தப் பெருவெடிப்புக் கோட்பாட்டின் படி, பிரபஞ்சம் அணுவைவிட மிகச் சிறிய அளவாக, மிக மிக அடர்த்தியாகவும், வெப்பமான நிலையில் இருந்து விரிவடைந்தது. இப்படியாக சிறிதாக இருந்தது பெரிதாக உருவாகியதையே நாம் பெருவெடிப்பு என்று அழைக்கிறோம். அண்ணளவாக இந்த நிகழ்வு நடந்து 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

சிறிதாக இருந்தது, மிகவும் வெப்பமாக மற்றும் அடர்த்தியாக இருந்தது என்று கூறினேன் அல்லவா? இந்தப் பிரபஞ்சம் விரிவடைய அதன் அடர்த்தியும் வெப்பமும் குறைவடைந்துகொண்டு வந்துள்ளது.

விஞ்ஞானிகள் இந்தப் பெருவெடிப்பு இடம்பெற்ற காலப்பகுதி, மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் என்னென்ன மாற்றங்கள் இடப்பெற்றன என்று கணக்கிட்டுள்ளனர்.

பிரபஞ்சம் உருவாகி ஒரு செக்கனில் ஒரு மில்லியன் பகுதி நேரத்திலேயே, இந்தப் பிரபஞ்சம் நமது சூரியத் தொகுதியின் அளவு இருந்தது. அப்போது பிரபஞ்சத்தின் வெப்பநிலை 100 பில்லியன் பாகையாகக் குறைவடைந்திருந்தது. இந்த வெப்பநிலைக் குறைவின் காரணமாக, அணுத் துணிக்கைகளின் அடிப்படைக் கட்டமைப்பான குவார்க்ஸ் (quarks) எனப்படும் துணிக்கைகள் ஒன்று சேர்ந்து அணுக்கருவை உருவாக்கும் ப்ரோடான் (proton), நியூட்ரோன் (neutron) ஆகிய துணிக்கைகளை உருவாக்கியது.

அதன் பின்னர் பெருவெடிப்பு நடந்து ஒரு செக்கனில், பிரபஞ்சம் நமது சூரியத் தொகுதியின் அளவைப்போல 1000 மடங்கு பெரிதாக விரிவடைந்திருந்தது. இப்போது பிரபஞ்சம் 10 பில்லியன் பாகை வெப்பநிலையில் காணப்பட்டது. இந்த வெப்பநிலையில் அணுக்கள் எதுவும் உருவாகவில்லை, ஆனால் அணுத் துணிக்கைகளான ப்ரோடான், நியூட்ரோன், ஏலேக்ட்ரோன், அண்டி-ஏலேக்ட்ரோன், போட்டன் மற்றும் நியுற்றினோ போன்றவை பிரபஞ்சத்தைக் கடல்போல நிரப்பியிருந்தன.

இந்தக் காலப்பகுதியில், முதலாவது அணுக்கருக்கள் உருவாகின. ஒரு ப்ரோடான் மற்றும் ஒரு நியூட்ரோன் ஒன்று சேர்ந்து Deuterium எனப்படும் ஹைட்ரோஜன் அணுவின் சமதாணியை (isotope) உருவாக்கியது. Deuterium எனப்படும் அணு, ஒரு ப்ரோடான், நியூட்ரோன் இணைந்து ஆக்கப்பட்ட ஹைட்ரோஜன் அணுவாகும். அதேபோல கொஞ்சம் ஹீலியம், லிதியம் போன்ற சிறிய அணுக்கள், ஹைட்ரோஜனை விடக் குறைந்த அளவில் உருவாகின.

இப்படியாக அடுத்த சில நிமிடங்களுக்கு ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் அதிகளவில் பிரபஞ்சத்தில் உருவாக்கப்பட்டது. (ஒப்பீட்டளவில் மற்றைய அணுக்களை விட அதிகமாக). பெரிய அணுக்கலான ஆக்ஸிஜன் கார்பன் போன்ற அணுக்கள் இங்கே உருவாகவில்லை, காரணம், பிரபஞ்சம் அதிகளவு வெப்பநிலையைக் கொண்டிருந்ததால் இலத்திரன்கள் அதிகளவு சக்தியைக் கொண்டிருந்தது, எனவே அவை வேகமாக அலைந்து திரிந்தன; ஆகவே அணுக்கருவால் போதியளவு இலத்திரன்களை கவர்ந்து பிடிக்க முடியவில்லை.

ஆகவே இருந்த அணுத்துணிக்கைகள் ஹைட்ரோஜன், ஹீலியம் போன்ற சிறிய அணுக்களை உற்பத்தி செய்தது. இந்தக் காலத்தில் இடபெற்ற நிகழ்வை, “ஆதிகால அணுக்கரு இணைவு” (primordial nucleosynthesis)  என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

பின்னர் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு பிரபஞ்சத்தின் வெப்பநிலை 1 பில்லியன் பாகையாக குறைவடைந்தது. ஆனாலும் இந்த வெப்பநிலையும், பெரிய அணுக்கள் உருவாவதற்கு அதிகமாகக் காணப்பட்டது.

அடுத்த பகுதியை, மூன்று நிமிடத்தில் இருந்து 380,000 வருடங்கள் வரை என்று விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் பிரபஞ்சம் மேலும் விரிவடைந்து விட்டதனால், அதன் வெப்பநிலை மேலும் குறைவடைந்துவிட்டது.  ஆனாலும் இந்தக் காலப்பகுதியிலும் அணுக்கருவால் இலத்திரனைப் பிடிக்க முடியாதளவு சக்தி கொண்டதாக இலத்திரன்கள் இருந்தன. ஆகவே இவை வேகமாக மற்றும் சுயாதீனமாக இந்தப் பிரபஞ்சக் கடலில் அலைந்து திரிந்தன.

இப்படி சுயாதீனமாக அலைந்து திரிந்த இலத்திரன்கள், ஒளியணுக்கள் எனப்படும் போட்டன்களுக்கு வில்லன்களாக இருந்தது இந்தக் காலப்பகுதியில்த்தான். அதாவது, தற்போது பல ஒளியாண்டுகள் தூரம் இருக்கும் விண்மீனில் இருந்து ஒளி நம்மை வந்தடைகிறது அல்லவா? ஒளி வரும் பாதை பெரும்பாலும் வெறுமையாக இருப்பதானால் ஒளி எந்தவொரு தடங்களும் இன்றி எம்மை வந்தடைகிறது, ஆனால், அப்போதைய காலகட்டத்தில், எங்கு திரும்பினாலும் இலத்திரன்கள் அரசியல் கூட்டங்கள் நடத்தியதால், போட்டன்களால் சிறிதளவு தூரம்கூட தடையின்றி பயணிக்க முடியவில்லை – இலத்திரன்கள், இந்த போட்டன்களை தெறிப்படையச் செய்தன. இதனால் பிரபஞ்சம் தற்போது இருப்பது போன்று இல்லமால், ஒளிபுகாத் தன்மையுடன் காணப்பட்டது.

380,000 வருடங்களுக்குப் பின்னர், வெப்பநிலை 3000 பாகையாகக் குறைந்தது! இது இறுதியாக ப்ரோட்டன்கள் இலத்திரன்களை பிடித்துக்கொள்ள போதுமானவு வெப்பநிலைக்குக் இலத்திரன்களைக் கொண்டுவந்துவிட்டது. இதனால் ஏற்றமற்ற ஹைட்ரோஜன் அணுக்கள் உருவாகத் தொடங்கியது. இப்படி ப்ரோடான்கள் இலத்திரன்களை சிறை செய்துகொள்ள, ஒருவழியாகப் பிரபஞ்சம் ஒளிபுகும் தன்மையுடயதாகியது. இந்தக் காலத்தில், இலத்திரன்களால் வழி மறைக்கப்பட்ட ஒளி, முதன் முதலாகப் பிரபஞ்சத்தில் தடங்கலின்றி பயணிக்கத் தொடங்கியது.

அண்ணளவாக 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பயணிக்கத் தொடங்கிய ஒளி இன்றும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது! அதுமட்டுமல்லாது எம்மால் அந்த ஒளியைப் பார்க்கவும் முடியும்!

பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் (Cosmic Microwave Background) ஆக தற்போது அது இந்தப் பிரபஞ்சத்தைச் சுற்றியுள்ளது. பிரபஞ்சம் விரிவடைய, ஒளியின் அலைநீளம் அதிகரித்து, தற்போது அவை நுண்ணலைகளாக மாறிவிட்டன.

இந்த ஒளி பிரபஞ்சம் உருவாகிய போது ஏற்பட்ட சக்தியில் இருந்து உருவாகிய போட்டன்களால் ஆனது என்பதனை நாம் கருத்திற் கொண்டால், இந்த ஒளி பிரபஞ்சத்தில் தடையின்றி பயணிக்க, பிரபஞ்சம் இருளானது. நீங்கள் மின்விளக்கை உயிர்ப்பித்துவிட்டு உடனே நிறுத்திவிட்டால் அந்த ஒளி மறைந்துவிடும் அல்லவா? இங்கும் கிட்டத்தட்ட அதேபோல்தான்; மேலும் நுண்ணலைகள் கண்களுக்குப் புலப்படாத மின்காந்த அலைகள் ஆகும். மேலும் பிரபஞ்சம் இருளாக இருந்ததற்குக் காரணம், அங்கு எந்தவொரு விண்மீனும் இன்னும் உருவாகவில்லை!

ஹைட்ரோஜன் அணுக்களாக மாறிய துணிக்கைகள் (மற்றைய சிறிய அணுக்கள் உட்பட) கொஞ்சம் கொஞ்சமாக ஈர்புவிசையின் காரணமாக ஒன்றுக்கொன்று அருகில்வர ஆரம்பித்தது. முன்னர் ஈர்ப்புவிசை காரணமாக ஒன்றுகொன்று அருகில் வரவிடாமல் தடுத்து இந்தப் பிரபஞ்சத்தின் வெப்பநிலை என்பதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். தற்போது வெப்பநிலை போதுமானளவு குறைந்துவிட்டதனால், அணுக்கள் வெப்பநிலை குறைந்து குளிராகவும், மற்றும் அதனூடுபுகும் ஒளியால் (ஒளி – நுண்ணலை அம்பலம்) பிரகாசமாகவும் காணப்பட்டன.

ஆகவே ஈர்ப்புவிசையால் ஒன்றுகொன்று அருகில் வந்துசேர சிரமம் இருக்கவில்லை. அதுமட்டுமலாது, அதிகளவான ஹைட்ரோஜன் அணுக்கள் அருகில் இருந்தமையால், ஒன்றுகொன்று அருகில் வந்த அணுக்கள் பாரிய விண்மீன்களாகத் தோற்றம் பெற்றது. இப்படியாக விண்மீன்களாக மாறிய பருப்பொருள் (matter) கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாகச் சேர்ந்து விண்மீன் பேரடைகள், மற்றும் விண்மீன் பேரடைத் தொகுதிகளை உருவாக்கியது.

அப்போதைய விண்மீன்கள் நமது சூரியனை விட 10 மில்லியன் மடங்கு வரை பெரிதாக இருந்தது! இப்படியான பாரிய விண்மீன்கள் அதிகளவான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிட்டது. இப்படியாக முதல் விண்மீன்கள் தோன்றி ஒளியை வெளியிடப் பிரபஞ்சம் தோன்றி அண்ணளவாக 400 தொடக்கம் 500 மில்லியன் வருடங்கள் எடுத்தது.

ஆகவே பிரபஞ்சம் தோன்றி 380,000 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்த ஒளிக்குப் பின்னர், இருளாக்கிப்போன பிரபஞ்சம் மீண்டும் ஒளிர அடுத்த பல நூறு மில்லியன் வருடங்கள் எடுத்து எனலாம்.

இன்றுவரை, முதலாவது விண்மீன்கள் பற்றிய ஆய்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது, நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மற்றும் ESA இன் செய்மதிகள் என்று பல்வேறுபட்ட கோணங்களில் இந்த ஆய்வுகள் நடை பெறுகின்றன. முதலாவது விண்மீன்கள் தோன்றிய காலத்தை சரியாகக் கணிப்பதன் மூலம் பல்வேறுபட்ட பிரபஞ்சப் புதிர்களுக்கு விடைபெற முடியும்.

சரி, அடுத்ததாக, ஒரு பில்லியன் வருடத்தில், இப்போது பிரபஞ்சம் இருக்கும் அளவில் ஐந்தில் ஒரு பங்கு அளவே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் ஏற்கனவே நன்றாக விருத்தியடைந்த விண்மீன் பேரடைகளை நாம் அவதானித்துள்ளோம். ஆகவே இந்தக் காலத்திற்கு முன்னரே விண்மீன் பேரடைகள் தோன்றியிருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும் அதன் பின்னர் வந்த சில பில்லியன் வருடங்களில், ஆவர்த்தன அட்டவணையில் உள்ள மூலகங்களில் பல விண்மீன்களின் உட்பகுதியில் உருவாக்கப்பட்டன. மேலும் பாரமான மூலகங்கள் (heavy elements, தங்கம், செப்பு போன்றன), விண்மீன் சுப்பர்நோவாவாக வெடித்ததன் மூலம் உருவாக்கப்பட்டன. இவற்றைப் பற்றிய மேலதிக தகவல்கள் அடுத்த பாகங்களில் வருகின்றன.

அண்ணளவாக 5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் சூரியன் முதன் முதலில் உதித்தார். ஏற்கனவே இவ்விடத்தில் இருந்த ஒரு விண்மீன் சுப்பர்நோவாவாக வெடித்த எச்சத்தில் இருந்து நம் சூரியன் உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. மேலும் சூரியன் உருவாகிய பின்னர் அதனைச் சூழ இருந்த தூசுகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து கோள்கள் உருவாகின.

அண்ணளவாக 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி மற்றும் ஏனைய கோள்கள் உருவாகின. நமது கோள்கள் உருவாகத் தேவையான மூலப் பொருட்களும், மூலகங்களும், விண்மீன்களில் இருந்தே உருவாக்கப்பட்டவை.

இதுதான் பெருவெடிப்புக் கோட்பாடு. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இது நமக்கு விளக்குகிறது இல்லையா? ஆனாலும் இதனை இன்று வரை நேரடியாக நிருபிக்கவோ, அல்லது மறுக்கவோ எந்தவொரு ஆதாரமும் இல்லை.

அப்படியென்றால், பிரபஞ்சத் தோற்றம் பற்றி வேறு சில கோட்பாடுகளும் இருக்கவேண்டும் அல்லவா? சமய ரீதியான கோட்பாடுகளைத் தவிர்த்து விஞ்ஞான ரீதியான வேறு கோட்பாடுகள் இருந்தனவா? ஆம். அப்படி பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கே சவால் விட்ட கோட்பாடு “நிலையான பிரபஞ்சக் கோட்பாடு”

நிலையான பிரபஞ்சக் கோட்பாடு (Steady State Theory)

இந்தக் கோட்பாடுப் படி, பிரபஞ்சம் தொடங்கவும் இல்லை, அதற்கு முடிவும் இல்லை. அது தொடர்ந்து இப்படியே இருக்கும். அதேவேளை அது தொடர்ந்து விரிவடைந்துகொண்டே செல்லும். அப்படியாயின், பிரபஞ்சத்தின் குறித்த பகுதியில் உள்ள பருப்பொருளின் சராசரி அடர்த்தி, பிரபஞ்சத்தின் மற்றைய எல்லாப் பகுதியிலும் அதே அளவே காணப்படும். அதானால் இந்தப் பிரபஞ்சம் எந்தத் திசையில் பார்த்தாலும் ஒரேமாதிரியாகக் காணப்படும்!

பிரபஞ்சம் விரிவடைவதால், இந்த அடர்த்தியை தக்கவைத்துக்கொள்ள, புதிதாக உருவாகிய இடைவெளியில் இருந்து, விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகும். இப்படி உருவாகும் அதே வீதத்தில் ஏற்கனவே இருந்த பழைய விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகள் என்பன நாம் பார்க்க முடியாதளவு தூரம் சென்றுவிடும் (வெளி/space விரிவடைவதால்). ஆகவே எப்போது பார்த்தாலும், பிரபஞ்சம் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும்.

இங்கு கவனிக்கவேண்டிய விடயம், சிறியளவில் பார்த்தால், எங்கு பார்த்தாலும் சூரியத் தொகுதி இருக்கிறதா? இல்லை பூமிதான் இருக்கிறதா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். இந்தக் கோட்பாடு, ஒரு அறிவியல் கோட்பாடு என்பதனை மறக்கவேண்டாம்.

இந்தக் கோட்பாடு வலியுறுத்தும் “எல்லாத் திசையிலும் ஒரே மாதிரி” பிரபஞ்சம் இருக்கும் என்பது, பெரியளவில். அதாவது உங்களை அமேசான் காட்டின் மையத்திற்கு அனுப்பி விட்டால் நீங்கள் இருக்கும் இடத்திலோ பல்வேறு வகையான மரங்கள் இருக்கலாம். ஆனால் சராசரியாக ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால், நான்கு திசைகளிலும் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையும், அமைப்பும் அண்ணளவாக ஒத்துப் போகும்.

இதே போலத்தான் இந்தப் பிரபஞ்சமும், நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது, எல்லாத் திசைகளிலும் ஒரே மாதிரியாகத்தான் சராசரி அடர்த்தியோடு காணப்படுகிறது.

இதனால்தான் இப்படியொரு கோட்பாட்டை இயற்பியலாளர்கள் 1950 களில் முன்வைத்தனர்.  மேலும் அந்தக் காலத்தில் இந்தக் கோட்பாடு பெருவெடிப்புக் கோட்பாட்டையே ஓரம்கட்டிவிடும் அளவிற்கு புகழ்பெற்று இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இதற்கு சாவுமணி அடிக்க அவ்வளவு காலம் எடுக்கவில்லை. குவாசார் போன்ற அதி சக்திவாய்ந்த ரேடியோ கதிர்வீச்சு விண்மீன் பேரடைகளின் கண்டுபிடிப்பு, நிலையான கோட்பாட்டிற்கு எதிராக இருந்தது. குவாசார் போன்ற பாரிய விண்மீன் பேரடைகள் மிக மிகத் தொலைவிலேயே இருக்கின்றன (தொலைவில் இருக்கின்றன என்றால், பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கவேண்டும்). நமக்கு அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகள் இப்படியான குவாசார்களாக இல்லை. ஆகவே இது நிலையான பிரபஞ்சக் கோட்பாட்டின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

மேலும் 1965 இல், பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தின் கண்டுபிடிப்பு, புகழ்பெற்ற பிரபஞ்சவியலாளர் ஸ்டீபன் ஹவ்கிங்கின் வார்த்தையில் கூறவேண்டும் என்றால், “அதன் சவப்பெட்டியில் இறுதி ஆணியை அடித்தது”.

ஆணியைப் பிடுங்கி எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். நிலையான பிரபஞ்சக் கோட்பாட்டுப் படி, பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் என்பது, ஆதிகால விண்மீன்களின் ஒளி, பிரபஞ்சத் தூசுகளால் சிதறடிக்கப்பட்டதால் உருவாகியது என்று கூறுகிறது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், பிரபஞ்ச நுண்ணலை அம்பலம், பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் இருந்து சீராக வருகிறது! அப்படியென்றால், பிரபஞ்சத்தின் எல்லா இடத்திலிருந்து விண்மீன்களின் ஒளி சீராக தூசுகளால் சிதறடிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், சிதறடிக்கப்படும் ஒளி பொதுவாக முனைவாக்க நிலையை (polarization) அடையும், ஆனால் பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் இப்படியான எந்தவொரு இயல்பையும் கொண்டில்லை.

நிலையான பிரபஞ்சக் கோட்பாடு விளக்கும் விதத்தை விட, பெருவெடிப்புக் கோட்பாடு குவாசார், பிரபஞ்ச நுண்ணலை அம்பலம், அதிகளவான ஹைட்ரோஜன் ஆகியவறை இலகுவாகவும், முரண்பாடு இல்லாமலும் விளக்குவதால், நாம் பெருவெடிப்புக் கோட்பாட்டையே ஏற்றுக்கொள்கிறோம்.

எப்படியிருப்பினும், சில இயற்பியலாளர்கள், நிலையான பிரபஞ்சக் கோட்பாட்டில் இருக்கும் நம்பிக்கயை இழக்கவில்லை. எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படக்கூடிய பரிசோதனைகள், இந்தக் கோட்பாட்டை மீண்டும் நிருபிக்கும் என்று நம்புகின்றனர்.

இந்தக் கோட்பாடுகள் போக, புதிய இயற்பியல் முறைகளான குவாண்டம் இயற்பியல், வேறுபட்ட பிரபஞ்ச உற்பத்திக் கோட்பாடுகளை கூறுகிறது. மேலும் ஸ்ட்ரிங் கோட்பாடு, எம்-கோட்பாடு, பலபிரபஞ்சக் கோட்பாடுகள் என்று பல்வேறு பட்ட கோட்பாடுகள் உண்டு.

நமது நோக்கம் உயிரினம் பற்றியதால், என்னுடன் வாருங்கள், நாமறிந்து இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினம் தோன்றிய ஒரு இடம் எப்படி உருவாகப்போகிறது என்று பார்க்கலாம்.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam