இன்டெர்ஸ்டெல்லார் படம் விளங்க வேண்டும் என்றால், கொஞ்சூண்டு ஆழமான கிளாசிக் மெக்கானிக்ஸ் தெரிந்திருந்தால் இலகுவாக இருக்கும் என்பது அந்தப் படத்தின் ஒரு குறைதான். ஆனாலும் சிறிய விளக்கத்தின் மூலம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.
முதலில் அந்தப் படத்தின் அடிப்படை அம்சமே, ஈர்ப்பு விசை என்பதுதான், அதோடு நேரம் என்கிற வஸ்து எப்படி ஈர்ப்பு விசையோடு சேர்ந்து இந்த இயற்கையை ஆள்கிறது என்பதே படத்தின் அடிப்படை. இதனை விளங்கிக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்
கண்ணாடியின் ஊடாக ஒளி ஊடுருவி மறுபக்கம் செல்லும், ஆனால் அதுவே உடம்பின் ஊடாக ஒளி செல்லாது. ஆனால், உடம்பினூடாக எக்ஸ் கதிர் செல்லும். எலும்பிநூடாக எக்ஸ் கதிர் செல்லாது, ஆனால் காமா கதிர் அதற்கூடாகவும் செல்லும்!
மேலும் ஒரு உதாரணம், எமது கண்களுக்குத் தெரியாத மின்காந்த அலைகள் மூலம், நாம் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறோம், 3G/4G என்று தகவல்களை பரிமாறுகின்றோம், இவை எம்மை ஊடறுத்துச் செல்கிறது, ஆனால் அவற்றை எம்மால் பார்க்க முடிவதில்லை.
அதே போல இந்த நேரம் என்ற ஒன்றின் ஊடாக செல்லும் சக்தி வாய்ந்தது ஈர்ப்பு விசை என்கிற வஸ்து! அதனால் தான் மகளுக்கு புத்தகங்களை தள்ளி விடுவதன் மூலமாகவும், மணலை தூவி விடுவதன் மூலமாகவும் மறுபக்கத்தில் இருந்து தந்தையால் செய்கை செய்ய முடிந்ததே தவிர நேரே செல்ல முடிவதில்லை. காரணம் இரண்டும் வேறு வேறு நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், ஆனால் நேரத்தின் ஊடாக ஈர்ப்பு விசை பயணிக்கும் என்பதால், அவரால் அதனைப் பயன்படுத்தி தகவல் அனுப்ப முடிந்தது.
இன்னொரு முறையில் விளக்க வேண்டும் என்றால், எமது வெளி – space – என்பது மூன்று பரிமானங்களால் ஆனது, ஆனால் நான்காவது பரிமாணம் என்று ஒன்று இருந்தால் (கட்டாயம் இருக்கும் என்று அறிவியல் நம்புகிறது) இப்போது இதனை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்களுக்கு அருகிலேயே யாராவது இருக்கலாம், உங்களுக்கூடாக அவர் செல்லலாம் (படத்தில் வரும் ஆவிகள் போல) ஆனால் உங்களால் அவரை உணர முடியாது, ஆனால் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அவர் உங்களோடு தொடர்பு கொள்ள முனையலாம்! அப்படி ஏதாவது நடந்தால், பேய் என்று பயந்துவிடாமல், கொஞ்சம் காத்து கொடுத்து கேட்டுப் பாருங்கள், உங்கள் பேரனோ, அல்லது பேரனின் பேரனோ உங்களை ஆசையாக சந்திக்க வந்திருக்கலாம்!!
சரி மீண்டும் வருவோம், படத்தில் உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது, பயிர்கள் அழிவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது, இதற்குக் காரணம் இயற்கையின் `வாழ்க்கை வட்டம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பழைய நாசா பைலட்/எஞ்சினியர் நம் ஹீரோ, நாசா இல்லது போய்விட (சாப்பிடவே காசில்லை என்ற போது, செவ்வாய்க்கு ராக்கெட் விடவில்லை என்று யார் அழுதா மொமன்ட் – அமெரிக்க அரசு நாசாவை கலைத்துவிடுகிறது) வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆகி தனது குழந்தைகளை வளர்கிறார்.
அவரது மகள் அடிக்கடி தனது அறையில் ஆவி இருப்பதாகவும், அது தனக்கு செய்திகளை மூர்ஸ் கொடு வழியாக அனுப்புவதாகவும் கூறுகிறார், அப்படி அது அனுப்பிய கோடை மொழிபெயர்த்து “செல்லாதே” என்கிற செய்தி அதில் இருப்பதாக கூறுகிறார், ஆனால் வீட்டில் உள்ள எல்லோரும், சந்தானம் ஜோக் கேட்டது போல, மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்கின்றனர்.
ஒருநாள் திடீரென ஒரு புயல் வர, மகளின் அறை யன்னல் திறந்திருப்பதால், அதனை மூடுவதற்காக அவசரமாகச் செல்லும் தந்தை + மகள், புயல் காற்று மூலம் அறைக்குள் வந்திருந்த மணல் ஒருவித அமைப்பில் (மூர்ஸ் கோட்) இருப்பதைக் கண்டு, அதனை மொழிபெயர்த்துப் பார்க்க அது ஒரு இடத்தின் GPS குறியீடு என்று தெரிந்து, ஆர்வமிக்க தந்தை வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கே செல்கிறார். அவரோடு மகளும் பயணிக்கின்றார்.
குறிந்த இடத்தை அடைந்ததும் அது நாசாவின் மறைமுகமான ரகசியத் தளம் என்று தெரிந்து, அவர்கள் எப்படி அங்கே வந்தார்கள் என்று தந்தை நாசா ஆட்களிடம் விளக்குகிறார். இவர் ஏற்கனவே நாசாவில் வேலை செய்ததால் அங்கிருக்கும் தலைமை விஞ்ஞானிக்கு இவரை ஏற்கனவே தெரியும் என்பதால் எல்லாம் சுபம் என்று நினைக்கும் வேளையில் அங்கே ஒரு ட்விஸ்ட்!
டோண்டடோய் அப்படின்னு எதாவது நடக்கும்னு பார்த்தா, அப்படியேதான் டோண்டடோய் அப்படின்னு ஒரு விஷயம் அங்க நடக்குது. அங்க இருக்கிற தலைமை விஞ்ஞானி உட்பட மேலும் சில விஞ்ஞானிகள், இந்த உலக அழிவுக்கு மாற்று வழி ஏதாவது இருக்குமா என்று யோசிச்சுக்கொண்டு இருக்கும் போது, அவங்களுக்கு ஒரு குளு கிடைக்குது.
அதாகப்பட்டது, சுமார் நாற்பத்து எட்டு வருடங்களுக்கு முன்னர் சனிக் கோளுக்கு அருகாமையில் இருக்கும் பிறதேசத்தில் ஈர்ப்புவிசையில் ஒரு பாரிய மாற்றம் நிகழ்வதை நாசா அறிந்து இருந்தது. அதனைப் பற்றி மேலும் ஆய்வு செய்தபோது அதுவொரு வோர்ம்ஹோல் என்று தெரிய வர, அதனைப் பயன்படுத்தி ஏதாவது தீர்வு காணலாமா என்று நாசா ஆய்வுகளை தொடங்கியது.
முதலில் வோர்ம்ஹோல் என்றால் என்ன என்று ஒரு சிறிய விளக்கம் – வோர்ம்ஹோல் என்பது பிரபஞ்ச வெளியில் இரண்டு இடங்களை/ நேரத்தை இணைக்கும் ஒரு கதவு என்று எடுத்துக்கொள்ளலாம். எப்படி பக்கத்து பக்கத்துல ரெண்டு ரூம் இருந்தும், அதுக்கு இடையில் கதவு இல்லாட்டி எப்படி, ஒரு ரூம்ல இருந்து ஹாலுக்கு வந்து அடுத்த ரூமுக்கு போக நேரம் எடுக்கும் எண்டு, ரெண்டு ரூமுக்கு இடையில இருக்கிற சுவரை இடிச்சு அதுல ஒரு கதவை வச்சு, அது மூலமா எப்படி ஈசியா ரெண்டு ரூமுக்கும் மாறி மாறி போய் வரலாமோ, அதைப் போலவே இந்த வோர்ம்ஹோல் மூலமா ஈசியா பிரபஞ்சத்தில் இருக்கும் இரண்டு வேறுபட்ட இடங்களுக்கு இடையில் ஷோர்ட்கட் மூலம் போய் வரலாம்.
ரைட், மீண்டும் கதைக்கு, நாசா இந்த வோர்ம்ஹோலை ஆய்வு செய்து, இது மூலமா, பல மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு விண்மீன் பேரடையில் இருக்கும் ஒரு கருந்துளைக்கு அண்மிய பிரதேசத்திற்கு இது ஷோர்ட்கட் லிங்க் குடுப்பதை அறிந்துகொள்கின்றனர். அந்த வோர்ம்ஹோல் மூலம் ஒரு ரோபோ செய்மதியை அனுப்பி அங்கிருந்து தகவல்களை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அங்கிருக்கும் கருந்துளையின் ஈர்ப்பு விசையால், பூமிக்கு, அந்தப் பக்கத்தில் இருந்து தகவல்களை அனுப்புவது சிரமமாக இருக்கிறது, அப்பபோது மிக சொற்ப பைனரி தரவுகளை மட்டுமே வோர்ம்ஹோல் மூலம் பரிமாறக்கூடியதாக இருப்பதால், கருந்துளைக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் இருக்கும் கோள்களை பற்றிய தகவல்களை சேமிப்பது கடினமாக இருக்கிறது.
அப்படி இருந்தும் உயிரை துச்சமென மதித்து ஒரு விண்வெளி வீரம், லேசாராஸ் திட்டம் என்ற பெயரில், கருந்துளைக்கு அப்பால் இருக்கும் கோள்களை ஆராய்ந்து அங்கே உயிர் வாழலாமா என கண்டறிய கிளம்புகிறார்.
மொத்தம் 12 குழுக்கள், ஒவ்வொரு குழுவும், ஒரு கோளுக்கு செல்லவேண்டும், அங்கிருந்து அந்தக் கோளில் உயிர் வாழத் தேவையான காரணிகள் இருப்பின் மீண்டும் பூமிக்கு தகவல் அனுப்பவேண்டும் என்பதுதான் அவர்களது டீல். அதேபோல அங்கே சென்ற குழுக்களில், மூன்று குழுவிடம் இருந்து நம்பிக்கை தரக் கூடிய தரவுகள் வந்துள்ளதாக கூறி முடிக்கிறார், தற்போதைய நாசா தலைமை விஞ்ஞானி.
மேலும் மகளுடன் வந்த தந்தையை, மக்களைக் காப்பாற்றும் திட்டத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். தந்தை அதான் நம்ம ஹீரோ, கைதேர்ந்த விண்வெளி ஓட பைலட். ஆகவே, வோர்ம்ஹோல் மூலம், சாதகமான தரவுகள் வந்த கோள்களை சென்று பார்க்க உதவுமாறு விஞ்ஞானி ஹீரோவிடம் கேட்கிறார்.
மேலும், இரண்டு விதமான ப்ளான்கள் இருப்பதாகவும் கூறுகிறார். பிளான் A – பூமியில் இருந்து பாரிய ராக்கெட்கள் மூலம் பூமியில் இருக்கும் மொத்த சனத்தொகையை அப்படியே லம்பா, வோர்ம்ஹோலின் ஊடாக உயிர்வாழக்கூடிய கோளிற்கு கொண்டு செல்வது. ஆனால் அதில் இருக்கும் சிக்கல் இப்படி பாரிய ராக்கெட் உருவாக்கத் தேவையான ஈர்ப்பு விசை பற்றிய தியரி இன்னும் பூரணப்படுத்தப் படவில்லை, ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக அதில் தான் ஈடுபட்டுள்ளதாகவும், முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் வெகு சீக்கிரமே, தனது தியரியை பூரணப்படுத்தி, பாரிய ராக்கெட் ஒன்றை விண்வெளிக்கு தன்னால் மக்களுடன் கொண்டு செல்ல முடியும் என்று கூறுகிறார் தலைமை விஞ்ஞானி.
அதே போல பிளான் B – சில வேளையில் குறித்த தியரியை பூரணப்படுத்த முடியாவிட்டால் என்ன செய்வது, மனித இனம் அழிந்துவிடக் கூடாதே, அதனால், ஹீரோ செல்லும் விண்வெளி ஓடத்தில், 5000 உறையவைக்கப்பட்ட மனித மற்றும் உயிரின கருக்களை கொண்டு சென்று, புதிய கோளில் வளர வைப்பது.
தனது குழந்தைகள் இந்தப் பூமியில் இனிமேலும் வாழ முடியாது என்பதை உணர்ந்த ஹீரோ, இந்த திட்டத்திற்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால் இதற்கு மகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதனை கனத்த நெஞ்சுடன் தாங்கி, எல்லாம் உனக்காகத்தான் கண்ணே என்று மனதினில் சோக கீதம் பாடி, மகளை தனது மாமனாருடனும், மூத்த மகனுடனும் விட்டுவிட்டு வோர்ம்ஹோலை நோக்கி ஹீரோ உட்பட சிறிய விஞ்ஞானிகள் குழு ஒன்று பயணிக்கிறது.
வோர்ம்ஹோலின் ஊடாக வெற்றிகரமாக சென்ற குழு முதலில், நம்பிக்கையான சிக்னல் வந்த மூண்டு கோள்களில், முதலாவதாக அவர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோளிற்கு செல்ல தீர்மானிக்கிறது. ஆனால் இந்தக் கோளில் உள்ள பிரச்சினை, இது கருந்துளைக்கு மிகவும் அருகில் இருப்பதால், நேரம் என்பது பூமியோடு ஒப்பிடும் போது மிகவும் மெதுவாக நகரும். – இந்தக் கோளில் செலவழிக்கும் ஒரு மணித்துளியும், பூமியில் ஏழு வருடங்கள் கழிந்துவிடும்.
அந்தக் கோளில் தரையிறங்க, அங்கே நீர் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டாலும், உடனே வரும் சுனாமி போன்ற பேரலை இவர்களது விண்கலத்தின் எஞ்சினில் நீரை அடித்துவிடவே, இவர்கள் அந்தக் கோளில் அண்ணளவாக மூன்று மணிநேரம் தங்க வேண்டிய நிலை வர, அதன் பின்னர் மீண்டும் தாய் வின் காலத்திற்குச் சென்றால், அங்கே அவர்களுக்குத் தெரியவரும் விடையம், பூமியில் அண்ணளவாக 23 வருடங்கள் கழிந்து விட்டது என்பதே.
ஆக, பூமியில் இங்கே அதே வேளையில், 23 வருடங்கள் கடந்து விட்டதால், மகள் பெரிதாகி, தலைமை விஞ்ஞானிக்கு கீழே மேற்கொண்டு ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வை செய்துகொண்டு வருகிறார். அப்போதுதான் தலைமை விஞ்ஞானி, பிளான் A சாத்தியமற்ற ஒன்று என்ற உண்மையை ஹீரோவின் மகள் – மேர்பிக்கு சொல்கிறார். பிளான் A க்குத் தேவையான ஈர்ப்புவிசை பற்றிய தியரியை பூர்த்தி செய்வதற்கு மேலும் தரவுகள் வேண்டும் என்கிற உண்மையை சொல்கிறார்.
ஆகவே பிளான் B தான் உண்மையான பிளான் என்றும் சொல்கிறார். இந்த உண்மை தனது தந்தைக்கும் தெரிந்து என்னை இங்கே இறப்பதற்கு விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று மகள் கோபம் கொள்கிறார். தந்தை மீது கடும் கோபம் இன்னும் கனலாக மனதினுள் எரிகிறது. காரணம், தனது உயிரை முக்கியம் எனக் கொண்டு, தந்தை தன்னை விட்டுவிட்டு புதிய உலகில் புதிய வாழ்வை ஆரம்பித்துவிட்டார் என்பது மகளின் எண்ணம். நயவஞ்சக தலைமை விஞ்ஞானி இறக்கும் போது கூட உன்னையும் ஏனைய மக்களையும் காப்பாற்றத்தான் உன் தந்தை தனது உயிரியும் துச்சமென மதித்து அங்கே சென்றார், ஆனால் அவருக்கு பிளான் A சாத்தியமற்ற ஒன்று என்று தெரியாது என்ற உண்மையை கூற ட்ரை பண்ணியும் முடியாமல் இறந்து விடுகிறார்.
அந்தோ பரிதாபம்!
இப்போது மீண்டும் வோர்ம்ஹோலிற்கு அந்தப்பக்கம், இருக்கும் எரிபொருளை வைத்துக் கொண்டு, லசாரஸ் திட்டத்தின் தலைமை விண்வெளி வீரர் சென்ற கோளிற்கு செல்கிறார்கள், அங்கே உண்மையில் உயிர்வாழ எந்த ஒரு சாதியமும் இல்லை, ஆனால், அந்த விண்வெளி வீரர் தான் வில்லன், ஆகவே இவர்களை அங்கே வர வைத்து, அவர்களின் விண்கப்பலில் மீண்டும் பூமிக்குச் செல்ல திட்டமிட, அது ஒரு வாராக சொதப்பி, தாய் விண்கலம் விண்வெளியில் சேதப்படுத்தப் படுகிறது. அதோடு அங்கே இரண்டு விஞ்ஞானிகளும் இறக்கின்றனர். இப்போது எஞ்சி இருப்பது, ஹீரோ, பெண் விஞ்ஞானி, மற்றும் ஒரு ரோபோ.
இப்போது, எஞ்சி இருக்கும் எரிபொருளை வைத்து மீண்டும் பூமிக்கும் செல்ல முடியாது என்கிற நிலை வந்ததால், இறுதியாக கருந்துளையை ஒரு சுற்றுச் சுற்றி, மூன்றாவது சிக்னல் வந்த கோளிற்கு செல்லலாம் என்று தீர்மானித்து, அதனை நடைமுறைப் படுத்துகின்றனர். ஆனாலும், கருந்துளையின் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால், பெண் விஞ்ஞானி இருக்கும் விண்கலத்தை மட்டும் தள்ளி விட்டு, ஹீரோ மற்றும் ரோபோ இருக்கும் விண்கலம் அப்படியே கருந்துளையினுள் விழுகின்றார்கள். – திணிவு குறைந்தால் தள்ளுவதற்கு தேவையான சக்தி குறைவுதானே அதான் தான் ஹீரோ தங்களின் திணிவை கழட்டிவிட்டு, பெண் விஞ்ஞானி இருக்கும் விண்கலத்தை வேகமாக செல்லவைத்தனர்.
பெண் விஞ்ஞானி அழுதுகொண்டே மூன்றாவது கோளிற்கு செல்ல, ஹீரோவும் ரோபோவும் கருந்துளைக்குள் செல்கின்றனர்.
இங்குதான் படத்தின் அடுத்த ட்விஸ்ட். கருந்துளைக்குள் என்ன இருக்கும் என்பது இன்றுவரை இயற்பியலால் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது, ஆகவே இனி வரும் அனைத்தும் விஞ்ஞான புனைவு ஆகும்.
கருந்துளைக்குள் விழும் ஹீரோ, கருந்துளையின் மையத்தை நோக்கி இழுக்கப்படுகிறார். அங்கே அவர் ஒரு நான்கு பரிமாண அறையில் ஒரு குறித்த நேரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த இடம், இவரது பூமியில் இருக்கும் மகளின் வீடு, அங்கே மகளை இவரால் பார்க்க முடிகிறது. ஆனால் மகளை தொடவோ, கதைக்கவோ முடியாது, காரணம் நேரத்தைக் கடந்து பயணிக்கும் திறன் ஈர்ப்பு விசைக்கு மட்டுமே இருப்பதால் அதனைப் பயன்படுத்தி மூர்ஸ் கோட் மூலம் மகளுக்குச் செய்தி அனுப்புகிறார்.
“செல்லாதே” என்கிற செய்தி, நீங்கள் மீண்டும் ஞாபகப்படுத்தினால், இந்த செய்தியைக் கேட்டுத்தான், ஹீரோ கூட மகைளைப் பார்த்து சிரித்து, ஆவிகள் எல்லாம் இல்லை என்று கூறியது உங்களுக்கு நினைவு வரலாம். உண்மையிலேயே மகளின் அறியில் சில்மிசங்கள் பண்ணியது ஆவி அல்ல அது நான்தான் என்கிற விடையம் ஹீரோ விற்கு இப்போது புரிகிறது.
ஆனால் ஏன் நான், எப்படி நான் என்கிற கேள்வி இவருக்கு மட்டும் அல்ல அந்த ரோபோவுக்கும் தோன்ற, ஏலியன்ஸ் யாராவது இதனை உருவாக்கி இருப்பார்களா என்று அந்த ரோபோ சந்தேகம் கொள்கிறது. ஆனால் அப்போதுதான் ஹீரோவிற்கு உண்மை சற்றே விளங்குகிறது.
ஏலியன்ஸ் இந்த கருந்துளைக்குள் இருக்கும் நான்கு பரிமாண அறையை உருவாக்க வில்லை, மாறாக, மனிதர்களே இதனை உருவாக்கி இருக்கவேண்டும் என்கிறார். ஆனால் மனிதர்கள் எப்படி இப்படியான தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்கிற ரோபோவின் கேள்விக்கு, எதிர்காலத்தில் இருந்து வந்த மனிதர்கள் இதனை உருவாக்கி பூமியின் அழிவை தடுக்க இந்த இடத்தையும் என்னையும் எனது மகளையும் தெரிவு செய்திருக்கிறார்கள், ஆனால் எனக்கும் எனது மகளிற்கும் இடையில் எப்படி எந்த சந்தப்பதில் தொடர்பை ஏற்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரிவில்லை, ஆகவே எனக்கும் எனது மகளிற்கும் இடையில் இடம் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் நடந்த காலப்பகுதியை இந்த அறையில் வைத்துள்ளனர், ஆகவே நான் சரியான தருணத்தை தெரிவு செய்து எதோ ஒரு செய்தியை மகளுக்குச் சொல்லவேண்டும் என்கிறார்.
என்னதான் ஈர்ப்பு விசை, இயற்பியல் என்று இருந்தாலும், தந்தையையும் மகளையும் இணைக்கும் அன்பு என்னும் பாலம் காலம், நேரம் என்கிற அனைத்தையும் தாண்டிச்செல்லும் சக்தி வாய்ந்தது. அந்த அன்பென்னும் வித்தையை இன்னும் பூரணமாக விளங்கிக்கொள்ள முடியாததால் தான், இந்த நான்கு பரிமாண அறையை அமைத்த அட்வான்ஸ் மனித இனத்தால், என்னையும் மகளையும் அன்பால் இணைக்கும் சரியான தருணத்தை கண்டறிய முடியவில்லை. ஆகவே அன்பு என்னும் சக்தியைப் பயன்படுத்தி நான் மகளுக்கு எதோ சொல்லவேண்டும் என்று ஹீரோவிற்கு புரிகிறது.
அப்போது ரோபோ, நான் இந்தக் கருந்துளைக்குள் வரும் போது அதனது ஈர்ப்புவிசை பற்றிய தரவுகளை சேமித்து வைத்துள்ளேன் என்கிறது, அப்போதுதான் ஹீரோவிற்கு அடுத்த விஷயம் விளங்குகிறது. உடனே அந்த தகவலை அப்படியே மூர்ஸ் கோடாக மாற்றி, மகளின் அறையில் இருக்கும் கைக்கடிகார முள்ளின் அசைவில் அதனை வெளிப்படுத்துகிறார்.
கைக்கடிகாரம் மகளுக்கு இவர் பூமியில் இருந்து வரும் போது கொடுத்து, நிச்சயம் தனது மகள் வருவாள், இந்தக் கடிகாரத்தை பார்ப்பாள் என்கிற ஒரு ஆழமான உணர்வு அவருக்குள் எழுகிறது. அதேபோல மகளும் வருகிறார், கடிகாரத்தைப் பார்த்து, இதில் எதோ செய்தி இருக்கிறது என்கிற விடயத்தை அறிகிறார். அதனை மொழிபெயர்த்து, ஈர்ப்பு விசை பற்றிய தியரியை பூத்தி செய்கிறார். அதேபோல தந்தை என்னை இங்கு விட்டுச் செல்லவில்லை என்கிற உண்மையும், தனது அறையில் இருந்த ஆவி வேறு யாருமல்ல, தந்து தந்தையே என்கிற உண்மையும் மகளுக்கு புரிகிறது.
வெற்றிகரமாக தரவுகளை மகளுக்கு அனுப்பிவிட, அந்தக் கருந்துளையின் உள்ளே இருக்கும் அறையின் நோக்கம் பூர்த்தியாகிறது, உடனே அது மூடிக்கொள்ள, ஹீரோ மற்றும் அந்த ரோபோ மீண்டும் வோர்ம்ஹோல் மூலம் சனிக்கு அருகிலேயே கொண்டுவந்து விடப்படுகின்றனர். ஹீரோ மீண்டும் தனது மகளை சந்திக்கின்றார். அனால் தற்போது மகளுக்கு வயது நூறுக்கும் அதிகம், காரணம், ஹீரோ கருந்துளையில் இருந்த காலத்தில் பூமியில் அதிகளவான நேரம் சென்றிருக்கும் இல்லையா?
ஆனால் இப்போது இவர்கள் ஒருவரும் பூமியில் இல்லை மாறாக பாரிய விண்கலங்களில் வீடு கட்டிக்கொண்டு சூரியத் தொகுதியில் வாழ்கின்றார்கள். இதைச் சாதியப் படுத்திய மகளை எல்லோரும் ஒரு முக்கிய பிரஜையாக கருத மகளுக்கோ தனது தந்தையின் மூலமே இது சாத்தியமாகியது என்பது தெரியும்.
வயது முதிர்ந்து மரணப்படுக்கையில் இருக்கும் மகள், தந்தையைப் பார்த்து, அந்த பெண் விஞ்ஞானியை மறந்து விடவேண்டாம், நீங்கள் அவரைத் தேடிச் செல்லவேண்டும் என்கிறார். அதேபோல ஹீரோவும், அந்த பெண் விஞ்ஞானி சென்ற கோளிற்கு செல்கிறார்.
அங்கே புதிய கோள், உயிர்வாழத் தேவையான அனைத்தையும் கொண்டிருப்பதால், அங்கே பெண் விஞ்ஞானி கொண்டுசென்ற 5000 கருக்களை உயிராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதோடு படம் முடிகிறது.
ஆனால் அந்த கருந்துளைக்குள் நான்கு பரிமாண கட்டமைப்பை உருவாக்கியவர்கள் எவராக இருக்கும் என்றால், இந்தப் பெண் விஞ்ஞானி, உருவாகிய 5000 உயிர்கள், தொடர்ந்து இனப்பெருக்கம் செய்து, பல ஆயிரம் வருடங்களின் பின்னர் தொழில்நுட்பத்தில் விருத்தியடைந்து, இறந்தகாலத்தில் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற, இறந்த காலத்திற்கு வந்து சனிக்கு அருகில் ஒரு வோர்ம்ஹோல் வைத்து, கருந்துளைக்குள் ஒரு நான்கு பரிமாண அறையை உருவாக்கி இப்படியான ஜிகிர்தண்டா வேலை எல்லாம் செய்திருக்கலாம்.
அப்படியாயின் உமையிலேயே பெண் விஞ்ஞானி சென்ற முதலாவது டைம்லைனில் பூமி வேண்டும் ஏனெனில் அப்போதுதான் முதன் முதலில் பெண் விஞ்ஞானி குறித்த கோளிற்கு செல்கிறார். ஆகவே ஹீரோ கருந்துளையில் விழுந்து இறந்திருக்கவேண்டும். பூமியும் அழிந்திருக்கும். ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரலாற்றை மாற்றியமைக்க நேரப் பயணம் செய்து, பூமியைக் காப்பாற்ற அந்தப் புதிய கோளில் வாழும் புதிய மனித இனம் ஆசைகொண்டிருக்கவேண்டும். அதாலதான் இந்த சனிக்கு அருகில் வோர்ம்ஹோல், அங்கே கருந்துளை எல்லாம்!
ஆனாலும் இதிலும் இருக்கும் பிரச்சினை, முதலாவது வோர்ம்ஹோலை யார் அங்கு வைத்து என்கிற கேள்விக்கு விடை படத்தில் இல்லை என்பதே!
அப்படியே இடியப்பத்தை குலைச்சுப் போட்டமாதிரி கொசகொசன்னு இருந்தா, ப்ரீயா விட்டுருங்கோ!
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam