உங்களுக்கு இருளென்றால் பயமா?

எல்லோருக்கும் இருளைப் பார்த்து தங்களது வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் பயம் கொண்டிருப்பார்கள். நடக்கும் போது சப்தம் எழுப்பும் தரை, காற்றில் ஆடும் திரைச்சீலை என்று இரவில் எழுமாறாக இடம்பெறும் நிகழ்வுகள் எம்மை பயம் கொள்ளச்செய்யலாம். ஆனால், எமக்கு இருட்டின் மீது பயம் கிடையாது, மாறாக அந்த இருளில் ஒழிந்திருக்கும் ஒன்றில்தான் பயம்.

(இருள் மீதான பயம் என்பது எமக்கு ஒரு அனுகூலமான விடையமே; இது எம்மை ஆபத்தான வேளைகளில் விழிப்புடன் செயற்பட உதவுகிறது!)

இருளில் ஒழிந்துகொண்டு எம்மை அச்சுறுத்தும் அசுரன் என்று ஒன்றும் பூமியில் இல்லை என்று எமக்குத் தெரியும், ஆனால் அப்படி எதாவது இருக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா? பூமியில் இல்லாது இருக்கலாம், ஆனால் இந்தப் பிரபஞ்ச வெளியில் அப்படியான அரக்கர்கள் அதிகம் இருக்கின்றார்கள் – அவர்களுக்கு கருந்துளைகள் என்று பெயர்.

பாரிய விண்மீன்களின் இறப்பில் கருந்துளைகள் பிறக்கும். கருந்துளைக்கு அருகில் செல்லும் எதுவாயினும் கருந்துளையின் ஈர்ப்பு விசை என்னும் இரும்புப் பிடிக்குள் இருந்து தப்பித்துவிட முடியாது. கருந்துளை அதற்கு அருகில் வரும் அனைத்தையும் அப்படியே விழுங்கிவிடும்!

இதனைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலான விடையம், இவை கட்புலனாகாதவை, அதாவது அவை இப்படியாக தனக்கு அருகில் வரும் ஏதாவது பொருளை விழுங்கும் வரை அவை மறைவாகவே இருக்கும்.

Red_Geyser
கிளிக் செய்து படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கலாம். நன்றி: Kavli IPMU

மேலே உள்ள படத்தில் இரண்டு விண்மீன் பேரடைகள் காணப்படுகின்றன. படத்தின் வலப்பக்கத்தில் காணப்படும் பிரகாசமான பிங்க் நிற விண்மீன் பேரடையின் மத்தியில் மிகப்பாரிய கருந்துளையொன்று காணப்படுகிறது. இப்படத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தால், நீல நிற விண்மீன் பேரடையில் இருந்து விண்மீன்களையும் வாயுக்களையும் இந்தப் பாரிய கருந்துளை உறுஞ்சிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

சிறு குழந்தைகளைப் போல, கருந்துளைகள் உண்ணும் போது, அவை அதிகளவான உணவை வெளியில் சிந்தும்; கருந்துளைகள் பொருட்களை விழுங்கும் போது சூடான வாயுக்களை விசிறியடிக்கும். அப்படி விசிறியடிக்கும் வாயுக்களைப் பார்க்கும் போது, படத்தில் உள்ளது போல ஒரு பாரிய பிரபஞ்ச வெடிப்புப் போல தென்படும். வெடிப்புப் போல தென்படுவது மட்டுமல்லாது, வெடிப்பினால் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படுமோ அதனைப் போலவே பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்தப் படத்தில் இருக்கும் பிங்க் நிற விண்மீன் பேரடையை இந்த கருந்துளையில் இருந்து வரும் வாயு அளவுக்கதிகமாக வெப்பமாக்குவதால், இந்த விண்மீன் பேரடையில் எந்தவொரு விண்மீனும் பிறப்பதில்லை.

விண்மீன் பேரடைகள், விண்மீன்களை உருவாகும் தொழிற்ச்சாலைகளாக உருவாகின்றன. அவற்றின் செய்முறை: பிரபஞ்ச வாயு + ஈர்ப்புவிசை = விண்மீன்கள். இங்கே உள்ள படத்தில் இருக்கும் விண்மீன் பேரடையில் விண்மீனை உருவாக்கத் தேவையான அனைத்தும் இருந்தும், இங்கே விண்மீன்கள் உருவாகாமல் இருப்தற்கான காரணத்தை இன்று நாம் கண்டறிந்துவிட்டோம்.

மேலதிக குறிப்பு

படத்தில் உள்ள பிங்க் வகை விண்மீன் பேரடை ஒரு புதிய வகையான பேரடையாகும், இவற்றுக்கு “சிவப்பு வெந்நீரூற்று” (red geyser) என பெயரிட்டுள்ளனர். இவை பூமியில் இருக்கும் வெந்நீர் ஊற்றுக்களை அடிப்படியாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ள.  வெந்நீரூற்று என்பது இயற்கையாக அமைந்துள்ள சூடான நீரைக் கொண்டுள்ள குட்டையாகும். சில வேளைகளில் இவை எரிமைலைகளைப் போல சூடான நீரை காற்றில் பீச்சியடிக்கும்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1611/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam