குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்

நமது பால்வீதி விண்மீன் பேரடையில் இன்றும் புதிய விண்மீன்கள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்ணளவாக பன்னிரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பால்வீதியில் இன்றும் விண்மீன்கள் பிறப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருக்கின்றன என்றால், எவ்வளவு பெரியது எமது பால்வீதி என எண்ணிப்பாருங்கள். சரி விடயத்திற்கு வருவோம்.

நமது பால்வீதியில் இன்னும் பல மில்லியன் வருடங்களுக்கு புதிய விண்மீன்களை உருவாக்கத் தேவையான மூலப்பொருட்கள் இருபதாக ஹேர்ச்சல் அகச்சிவப்பு விண்வெளித் தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் சொல்கின்றன! அதில் குறிப்பாக நாம் இன்று பார்க்க இருப்பது, இந்தப் படத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தை ஆகும்.

pia13500

நமது சூரியத் தொகுதியில் இருந்து அண்ணளவாக 8000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் வல்பெக்குல்லா எனப்படும் விண்மீன் தொகுதியில் இருக்கும் ஒரு பகுதிதான் படத்தில் இருக்கும் வல்பெக்குல்லா OB1 எனப்படும் பிரதேசமாகும். வல்பெக்குல்லா என்றால், லத்தீன் மொழியில் “குள்ள நரி” என்று பொருளாம்!

சரி இந்தப் பிரதேசத்தில் அப்படியென்ன விசேசம் என்று கேட்டால், இங்கு அதிகளவான “OB” வகை விண்மீன்கள் பிறந்து கொண்டிருகின்றன. O மற்றும் B வகை விண்மீன்களே பிறக்கக்கூடிய விண்மீன்களில் மிகப்பெரிய வகையைச் சார்ந்தவையாகும்.

அதிலும் இந்த வல்பெக்குல்லா OB1 என்கிற பிரதேசத்தில் பிறக்கும் OB வகையைச்சார்ந்த விண்மீன்கள் மிகவும் பெரிதாகக் காணப்படுகின்றன. பொதுவாக இப்படி பெரிதாக இருக்கும் விண்மீன்கள், அதாவது சூரியனின் திணிவைப் போல பல டஜன் மடங்கு திணிவைக் கொண்ட விண்மீன்கள் மிகக்குறைவான வாழ்க்கைக் காலத்தைக் கொண்டுள்ளன. காரணம் இவை மிகவும் வேகமாக தங்களது எரிபொருளை முடித்துவிடுகின்றன. அண்ணளவாக இந்த விண்மீன்களின் வாழ்க்கைக்காலம் இரண்டு மில்லியன் வருடங்களாகும். (சூரியனின் வாழ்க்கைக்காலம் பத்து பில்லியன் வருடங்கள் என்பதனைக் கவனத்திற்கொள்க)

இந்தப் பாரிய விண்மீன்கள் தங்கள் வாழ்க்கைக்காலத்தை முடித்துவிட்டு அப்படியே சுருங்கி பின்னர் பாரிய சக்திவாந்த சூப்பர்நோவாவாக வெடித்துச் சிதறுகின்றன. இப்படியாக வெடித்துக் சிதறும் போது ஏற்படும் அதிர்வலைகள் அதனைச் சுற்றியிருக்கும் பகுதியில் உள்ள வாயு மேகங்களில் இருந்து மேலும் புதிய விண்மீன்களை உருவாக்குகின்றன. இப்படியாக இங்கு விண்மீன்கள் பிறப்பதும், இறப்பதும் ஒரு வட்டமாக நடைபெறுகின்றது.

குறிப்பாக O வகை விண்மீன்கள், சூரியனைவிட குறைந்தது 16 மடங்கு திணிவுடையதாக இருக்கும். சிலவேளைகளில் சூரியனை விட 100 மடங்கிற்கும் அதிகமான திணிவுடைய O வகை விண்மீன்களையும் நாம் அவதானித்துள்ளோம்.  இவை சூரியனின் பிரகாசத்தைப் போல 30000 மடங்கு தொடக்கம் 1 மில்லியன் மடங்கு வரை அதிகளவான பிரகாசத்தைக் கொண்டிருக்கும். ஆனால் மேலே கூறியது போல இவற்றின் வாழ்வுக்காலம் சில மில்லியன் வருடங்களே!

B வகை விண்மீன்கள் சூரியனைப் போல இரண்டு மடங்கில் இருந்து 16 மடங்கு வரை திணிவுடையதாக காணப்படும். இவற்றின் பிரகாசம் சூரியனை விட 25 மடங்கில் இருந்து 30000 மடங்கு வரை காணப்படும்.

வல்பெக்குல்லா OB1 பிரதேசத்தில் இப்படி அதிகளவான O மற்றும் B வகை விண்மீன்கள் காணப்படுவது, அங்கே இவை தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டிருகின்றன என்ற முடிவுக்கு எம்மை கொண்டு செல்கிறது. இதற்குக் காரணம் அதன் வாழ்க்கைக்காலம் மிகக் குறைவு என்பதால், அங்கே இப்போதும் தொடர்ந்து இப்படியான விண்மீன்களை எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கக் காரணம், அவை புதிதாக பிறந்திருக்கவேண்டும் என்பதனாலாகும்.

மேலும் இந்தப் பாரிய விண்மீன்கள் அதிகளவான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிடுவதால்,  அதற்கு அருகில் இருக்கும் வாயு மேகங்களில் அவை ரசாயனத் தாக்கத்தை ஏற்படுத்தி, புதிய விண்மீன்கள் உருவாக்வதற்குக் காரணமாக விளங்குகின்றன.

மேலே உள்ள படம், ஹேர்ச்சல் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இந்தப் படம், ஐந்து வித்தியாசமான அகச் சிவப்பு அலைநீலங்களில் எடுக்கப்பட்ட படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இருக்கும் வாயுக்கள் மற்றும் தூசுகள் -220 பாகை செல்சியஸ் தொடக்கம் -260 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலையில் காணப்படுகின்றன. இந்த மிகக்குளிரான மேகங்களை கட்புலனாகும் ஒளியில் பார்க்க முடியாது, ஆனால் அகச்சிவப்புக் கதிர்வீச்சில் அவற்றில் இருக்கும் துல்லியமான கட்டமைப்புக் கூடத் தெளிவாகத் தெரிகின்றது.

தகவல்/படம்: நாசா, ESA/Herschel/PACS, SPIRE/Hi-GAL Project


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam