மூன்று சூரியன்களைக் கொண்ட கோள்

ஒவ்வொரு பருவ காலமும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும், மூன்று நிழல்கள் ஒரே நேரத்தில் நிலத்தில் விழும் உலகம் ஒன்றை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள் HD 131399ab மேலே குறிப்பிடப்பட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. (புறக்கோள் எனப்படுவது, வேறு ஒரு விண்மீனை சுற்றிவரும் கோளாகும்)

பூமியில் இருந்து 320 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த விசித்திரமான புதிய கோள், மூன்று விண்மீன்களைக் கொண்ட தொகுதியை சுற்றிவருகிறது. அதாவது, இதன் தாய் விண்மீன் மேலும் இரண்டு விண்மீன்களை சுற்றிவருகிறது. இதனால் இந்தக் கோளில் சூரிய உதயமும், அஸ்தமனமும் சற்று வித்தியாசமாக இருக்கும். சில வேளைகளில் ஒரு விண்மீன் உதிக்கும், சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்றும் சேர்ந்தே உதிக்கும்.

 

Artist’s impression of planet in the HD 131399 system
ஓவியரின் கைவண்ணத்தில் HD 131399Ab கோளும், அதனது மூன்று விண்மீன்களும். நன்றி: ESO

 

இதைத் தவிர இந்த புறக்கோள் வேறு விதத்தில் வேறுபட்டதோ அல்லது விசித்திரமானதோ அல்ல. 16 மில்லயன் ஆண்டுகள் வயதான இந்தக் கோள் இதுவரை கண்டறியப்பட்ட புறக்கோள்களில் மிகவும் இளமையாக கோளாகும். மேலும் இதம் மேற்பரப்பு வெப்பநிலை 580 பாகை செல்சியஸ் ஆகும்.

பல புறக்கோள்கள் இரண்டு அல்லது மூன்று விண்மீன்கள் கொண்ட தொகுதியைச் சுற்றி வருகின்றன. ஆனால் இந்தக் கோளைப் பொறுத்தவரை, விசேடம் என்னவென்றால், இந்தக் கோளை விண்ணியலாளர்கள் நேரடியாக அவதானித்துள்ளனர்!

3000 இற்கும் அதிகமான புறக்கோள்களை நாம் இன்று கண்டறிந்துள்ளோம், ஆனால் அவற்றில் 50 இற்கும் குறைவான கோள்களே நேரடியாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு விண்மீனைச் சுற்றிவரும் சிறிய கோள் ஒன்றை கண்டறிவது, மதிய நேர சூரியனுக்கு முன்னால் பறக்கும் நுளம்பு ஒன்றை படம்பிடிப்பதற்கு சமாகும்.

எப்படியோ, இந்தப் புதிதாக கண்டறியப்பட்ட விசித்திர உலகம், நீண்ட நாட்கள் இருக்க முடியாது.

மூன்று விண்மீன் தொகுதியில் ஒரு கோள் சுற்றிவர, மிக மிக துல்லியமான சமநிலை கொண்ட சுற்றுப்பாதையை குறித்த கோள் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இந்தக் கோளின் தற்போதைய சுற்றுப்பாதை புளுட்டோவிற்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவைப் போல இரண்டு மடங்காகும்.மேலும் இதன் பாதை அடுத்த இரண்டு விண்மீன்களின் சுற்றுப் பாதையின் அருகில் வருகிறது.

The orbits of the planet and stars in the HD 131399 system
படத்தில் கோளின் சுற்றுப் பாதையும் (சிவப்பு) விண்மீன்களின் சுற்றுப் பாதையும் (நீலம்) காட்டப்பட்டுள்ளது. நன்றி: ESO

இதனால், இந்தக் கோளின் அழிவு பல வழிகளில் வரலாம். விண்மீன்களுக்கு அருகில் செல்வதால், எரிந்துவிடக்கூடிய சாதியக் கூறுகள் அதிகம், அல்லது மற்றைய விண்மீன்களின் ஈர்ப்புவிசையால் பாதை மாற்றப்பட்டு, நிரந்தரமான குறித்த விண்மீன் தொகுதியை விட்டே வெளியில் வீசி எறியப்படலாம்.

மேலதிகத் தகவல்

HD 131399ab கோள் நமது வியாழனைப் போல நான்கு மடங்கு திணிவானது, மேலும் தனது தாய் விண்மீனை சுற்றிவர அண்ணளவாக 550 பூமி வருடங்கள் எடுக்கிறது.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1614/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam