தேர்சான் 5 இன் புராணக்கதை

குறிப்பாக படிமங்களை ஆய்வு செய்யும் போது விஞ்ஞானிகள் எப்போதும் முதல் தடவையிலேயே சரியான முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள். தொல்லுயிரியலளர்கள் (paleontologists – டைனோசர் விஞ்ஞானிகள்) பல்வேறு சந்தர்பங்களில் பல மாபெரும் தவறுகளை அவர்களது ஆய்வில் இழைத்துள்ளனர்.

Stegosaurus போன்ற இராட்சதப் பல்லி போன்ற டைனோசரிற்கு சிறிய பறவையளவு மூளை இருக்கும் என்று அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. ஆகவே நிச்சயம் இரண்டாவது மூளை, அதனது பின்புறத்தில் ஒழிந்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர். (இது பிழையாக முடிவு என்று பின்னர் கண்டறியப்பட்டது)

விண்ணியலார்கள் கூட படிமங்களை ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்தப் படிமங்கள், டைனோசர் எலும்புக்கூடுகளையும் விட மிகவும் பழமையானவை. மேலும் ஆய்வு செய்யவும் கடினமானவை.

heic1617a

அண்ணளவாக 40 வருடங்களுக்கு முன்னர் இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் கொத்து (தேர்சான் 5 / Terzan 5 என அழைக்கப்படுகிறது) முதன் முதலில் கண்டறியப்பட்டது. விண்மீன் கொத்தில் இரண்டுவகை உண்டு: ஒன்று திறந்த விண்மீன் கொத்து (open cluster) மற்றயது கோள விண்மீன் கொத்து (globular cluster). தேர்சான் 5 ஒரு கோளக் கொத்து என்றே விண்ணியலாளர்கள் கருதினர். பல்லாயிரக்கணக்கான பழைய விண்மீன்களை கொண்டுள்ள இந்தக் கொத்தில் இருக்கும் விண்மீன்கள் அனைத்தும் ஒரே காலப்பகுதியில் ஒரே பொருளில் இருந்து உருவாகியிருக்கவேண்டும் என்றும் கருதினர்.

ஆனால் இந்த விண்மீன் கொத்து, மற்றையவை போலல்லாமல் விசித்திரமாக இருக்கிறது! காரணம், திறந்த விண்மீன் கொத்தில் அல்லது கோள விண்மீன் கொத்தில் இருக்கும் விண்மீன்கள் அனைத்தும் ஒரே காலப்பகுதியில் உருவாகியிருக்கும், ஆகவே அவை அனைத்தும் ஒரே வயதானதாக இருக்கும். ஆனால் இந்த விண்மீன் கொத்தில் இரண்டு விதமான விண்மீன் குழுக்கள் இருக்கின்றன. அவற்றின் வயது அண்ணளவாக 7 பில்லியன் வருடங்களால் வேறுபடுகிறது!

வயது குறைந்த இரண்டாவது விண்மீன் குழு உருவாக, தேர்சான் 5 உருவாகும் போது மிக மிக அதிகமான விண்மீன்களை உருவாக்கத் தேவையான வாயுக்களை கொண்டு உருவாகியிருக்கவேண்டும் – அண்ணளவாக 100 மில்லியன் சூரியன்களை உருவாக்கத்தேவையான அளவு!

இந்த விசித்திரமான பண்பு, தேர்சான் 5 ஐ பால்வீதியில் வாழும் படிமமாக கருதவைக்கிறது. அதிகளவான வாயுக்கள் ஒன்று திரண்டு பால்வீதிகள் போன்ற விண்மீன் பேரடைகள் உருவாகின்றன என்று பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பால்வீதியில் இருக்கும் படிமமான தேர்சான் 5 இந்தக் கோட்பாடு சரியானது என்றே கருத வைக்கிறது!

மேலதிக தகவல்

பூமியிக் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான உயிருள்ள அங்கியின் படிமம் 3.5 பில்லியன் வருடங்கள் பழமையானது. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் நாம் கண்டறிந்த மிகப் பழமையான படிமம் அண்ணளவாக 13.4 பில்லியன் வருடங்கள் பழமையானது.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1619/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam