இன்று பொதுவாக இருக்கும் பிரச்சினை கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரண்டுமே. மாணவரை ஆசிரியர் குறை கூறுவதும், ஆசிரியரை மாணவர் குறை கூறுவதும் வழக்கமாகிவிட்ட ஒன்று. நானும் படிக்கிறேன் என்று கிளம்பி, புத்தகத்தை எடுத்து வைத்துகொண்டு அதனை மனப்பாடம் செய்துவிட்டு, அதனைத் தாண்டி குறித்த பகுதியில் வினாக்களை எழுப்பும் போது, அதற்கு பதில் கூற முடியாமல் திண்டாடும் பலரையும் நான் பார்த்துள்ளேன்.
படிப்பது என்பது ஒரு கலைதான், சரியான முறைப்படி அதனை அணுகும் போது, அது ஒரு சுமையாக தெரிவதில்லை. மாறாக கற்றலின் தேவை புரியும் போதுதான், அதனை முழுமையாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் உருவாகும்.
ஆனால் சிறுவர்களுக்கு கற்றலின் தேவையை புரிய வைக்க முடிவது என்பது கடினமான காரியம். அதனால்தான் எதைப் படிக்கிறோம் என்று தெரியாமலே பாடசாலை மாணவர்களுக்கு ‘மனப்பாடம் செய்து தொலையுங்கள் மங்குனிகளே’ என்று பாடசாலைகளில் நாம் செய்யும் முறையற்ற கற்பித்தல்-கற்றல் என்கிற பெயரில் செய்யும் எதோ ஒன்று, பெரும்பாலும் வெற்றியளிப்பதில்லை. நீங்கள் நினைக்கலாம் பலர் பரிட்சையில் தேர்ச்சி அடைகிறார்கள் என்று, ஆனால் குறித்த பாடத்தில் அவர்கள் அறிவு பெற்றார்களா என்றால்… இங்கு நடைபெறும் பரிசைகள் அறிவை சோதிப்பதற்காக இடம்பெறவில்லை, அவை மாணவரை மனப்பாடம் செய்யும் கருவியாகவே மாற்றுகின்றன என்பது எனது கருத்து.
சரி, எப்படி படித்தால்/ கற்றால் நமது மூளையால் உள்வாங்கிக் கொள்ளலாம் என்று உளவியல் விஞ்ஞானம் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து, சில விடயங்களை எமக்கு கொடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது பலருக்கும் பயன்படலாம்.
தேர்ச்சிகளை சிறு பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு பகுதியாக கற்றல்
குறித்த பாடப்பரப்பை பகுதிகளாக உடைத்து ஒவ்வொரு பகுதிகளையும் முறைப்படி முழுதாகக் கற்றல். உதாரணமாக உங்களுக்கு ஒரு இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஒரே தடவையில் அதில் இருக்கும் எல்லா வித்தைகளையும் கற்றுவிட முடியாது. தனித் தனி இசைக் குறிப்பையும் கற்று தேர்ச்சி பெற்று, பின்னர் தேர்ச்சி பெற்ற இசைக்குறிப்புகளை ஒன்றாக சேர்த்து தேர்ச்சி பெறுதல்.
சிறு சிறு பாகங்களிலும்பூரணமாக தேர்ச்சி பெறுவதால், குறிப்பிட்ட காலத்தில் உங்களால் முழு அளவில் தேர்ச்சி பெற முடியும்.
இப்படியாக சிறு சிறு பாகங்களாக்கி கற்றலை, விஞ்ஞானம் கணிதம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெறவும் பயன்படுத்தலாம்.
சரியாக பாகங்களை உடைத்து, ஒவ்வொரு பாகத்தையும் முழுத் தேர்ச்சி பெறும்வரை கற்கவேண்டும்.
பலவிடயங்களை ஒரே நேரத்தில் கற்றல் புதிய விடயங்களுக்கு சரிவராது
கணணிகளைப் போலல்லாமல் மனித மூளை வேறுபட்டே தொழிற்படுகிறது. பொதுவாக ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது என்பது, நேரத்தை வீணடிக்கும் வேலை என்பது விஞ்ஞான ஆய்வுகளின் கருத்து.
கற்றலிலும் அப்படித்தான்; மேலே கூறியது போல ஒவ்வொரு பாடத்தையும் பகுதிகளாக பிரித்துவிட்ட பிறகு, ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளை ஒரே நேரத்தில் கற்க முயலவேண்டாம். புதிதாக ஒரு விடயத்தை கற்க முனையும் போது, குறித்த பகுதிக்கே முழு திறனையும், நேரத்தையும் செலவிடுங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளை ஒரே நேரத்தில் கற்றல் கவனச் சிதறல்களை ஏற்படுத்தும். ஒரு முறை கவனச் சிதறல் ஏற்பட்டால், மீண்டும் கவனத்தை ஒருமுனைப்படுத்த 25 நிமிடங்கள் வரை எடுக்குமாம்.
சில வேலைகளை ஒரே நேரத்தில் உங்களால் செய்யக்கூடியதாக இருக்கலாம், ஆனால் புதிதாக கற்க நினைக்கும் விடயங்களை அந்த லிஸ்ட்டில் சேர்க்காதீர்கள்.
கையால் எழுதுவது, புதிதாக கற்றவற்றை மனதில் பதிய வைக்க உதவும்
நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டால், அதனை கையால் எழுதி வைத்துக்கொள்தல், உங்கள் ஞாபகத்தில் அவற்றை மேலும் வைத்துக்கொள்ள உதவும்.
2014 இல் நடத்திய ஆய்வு ஒன்றில், பென்சில் மற்றும் பேப்பர் பயன்படுத்தி குறிப்புகளை எடுத்த மாணவர்கள், தங்கள் லேப்டாப்பில் குறிப்புகளை எடுத்த மாணவர்களை விட அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பென், பென்சில், பேப்பர் குழு, புதிய விடயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவும், சிக்கலான பிரச்சினைகளை தீர்க்கவும், புதிய கருத்துக்களை உருவாக்குவதிலும் அதிக தேர்ச்சி கொண்டிருந்தனர்.
எழுதுவது என்பது, மூளையின் அறிவாற்றல் பகுதியில் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது.
தவறுகள் பாராட்டப்பட வேண்டியவை
கற்றலின் போது தவறுகள் ஏற்படுவது சாதாரணமான விடயம், தவறுகள் ஏற்படும் போது தண்டனைகள் வழங்கப்படுவதை விட, ஏற்பட்ட தவற்றைப் பற்றி ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிவதன் மூலம், தவறைப் பற்றி தெரிந்து கொள்வதிலும், குறித்த கற்றல் பகுதியைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் அதிக விளக்கம் ஏற்படும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் கற்றல் செயற்பாட்டை ஒரு தேடல் போன்றே கருதவேண்டும். தேடலில் இருந்து வரும் விளைவுகளை அவர்கள் புரிந்துகொள்ள அனுமதிக்கப்படவேண்டும். மாறாக தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களது தேடல் தடைப்படலாம்.
விசித்திரமான விடயங்கள் என்றுமே ஞாபகம் வைத்துக்கொள்ள இலகுவானவை
சிறுவர்கள் துடிப்புடன் இருக்கும் போது அவர்கள் பல புதிய விடயங்களை அறிந்துகொள்கின்றனர். அதிலும் குறிப்பாக வித்தியாசமான விடயங்கள், விசித்திர விடயங்கள் இலகுவில் அவர்களது கவனத்தை ஈர்க்கும்.
எப்போவோ வரும் ஐஸ்கிரீம் காரன், பிந்துவிட்ட செருப்பு, ஆரெஞ்சு நிறப் பூச்சி, பக்கத்துக்கு வீட்டு அங்கிளின் பச்சைக்கலர் பிஜாமா இப்படி பல விடயங்கள். சிறுவர்கள் இப்படியான விடயங்களை ஞாபகம் வைத்திருப்பதை பெறோர்கள் பாராட்டவேண்டும்.
விசித்திரமான விடயங்களை, கற்கும் சாதாரணமான விடயங்களோடு ஒன்று சேர்ப்பதன் மூலம், அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.
ஞாபகம் இல்லாத விடயங்கள் தேடப்பட வேண்டும்
சிறுவர்கள் பிரச்சினைகளை தீர்க்க கற்றுக்கொள்ள வேண்டும் – இது அவர்களின் தனிமனிதத் திறனை அதிகரிப்பதுடன் அவர்களுக்கு இதே போன்ற வேறு பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பதனையும்கற்றுக்கொடுக்கும். ஆனால் ஒரே பிரச்சினையில் அதிக நேரம் செலவழிப்பது தவறான கற்றல் முறையாகும்.
தீர்க்க முடியாமல் திண்டாடும் வேளையில் அவர்களுக்கு குறித்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு குறித்த பிரச்சினையின் தீர்வு ஞாபகத்தில் இருப்பதைவிட, அவர்களின் திண்டாட்டமே ஞாபகத்தில் இருக்கும். இது எதிர்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும்.
கற்றவற்றை மற்றவர்களுக்கு கற்பித்தல்
இது மிக முக்கியம், நீங்கள் கற்றவற்றை இன்னொருவருக்கு கற்பிக்கும் போது, உங்கள் மொழியில் நீங்கள் கற்றவற்றை வெளிப்படுத்தப்போவதால், உங்களுக்கே உங்கள் திறனைப்பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு. மேலும் நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்துவதால், மூளை அதனையும் பதிவுசெய்து கொள்ளும்.
கற்பிக்கப் படுபவருக்கு விளங்கும் வகையில் நீங்கள் விடயத்தை இலகுபடுத்த வேண்டும் என்பதால், குறித்த பாடத்தில் உங்களின் தேர்ச்சியின் அளவு அதிகரிக்கும்.
ஆகவே இன்றே உங்கள் நண்பர்கள், அம்மா, அக்கா, தங்கச்சி, யாரையாவது கதிரையில் கட்டி வைத்து அவர்குக்கும் படிப்பிக்க ஆரம்பியுங்கள்!
தகவல்-படம்: sciencealert.com, இணையம்
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam