முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து ஆய்வுப்பயணத்தை சிலர் மேற்கொண்ட போது, பெரும்பாலானவர்கள் பூமி தட்டையானது என்றே கருதினர். மேலும் மேற்கு நோக்கி பயணப்படுபவர்கள், மிகவும் தொலைவு சென்றால், பூமியில் இருந்து வெறுமைக்குள் விழுந்துவிடுவர் என்றும் கருதினர்.
ஆனால் இன்று, நாம் பூமியின் எல்லாப் பகுதிகளையும் தெளிவாக ஆய்வுசெய்தது மட்டுமல்லாது, சூரியத் தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் பார்வையிட்டுள்ளோம். இந்தப் படிக்கல்லில் அடுத்து – சூரியத் தொகுதியையும் தாண்டி இருக்கும் உலகங்களை ஆய்வுசெயவதே.
1992 இல் முதன் முதலில், வேறொரு விண்மீனைச் சுற்றிவரும் கோள் ஒன்றைக் கண்டறிந்தோம். அதனைத்தொடர்ந்து இன்றுவரை, 3,300 இற்கும் அதிகமான பிற-விண்மீன் கோள்களை கண்டறிந்துள்ளோம். ஸ்டார் வார்ஸ், கார்டியன் ஒப் தி கலக்ஸி போன்ற விஞ்ஞான புனைக்கதைகளில் வரும் உலகங்களைவிட இந்த உலகங்கள் விசித்திரமானவை.
இவற்றில் சில, பூமியைவிட 9000 மடங்கு பெரியவை, சில நமது சந்திரனை விட சற்றே பெரியவை! சில இரும்பை உருக்கிவிடும் அளவிற்கு வெப்பமானவை, சில புளுட்டோவை விடக் குளிரானவை.
நாம் பாரிய விண்மீன்கள், இறந்த விண்மீன்கள், சிலவேளை விண்மீனே இல்லாமல் பேரடையில் தனியாக வலம்வரும் கோள்களைக் கூட அவதானித்துள்ளோம்.
இப்படியாக பலதரப்பட்ட கோள்கள் இருந்தாலும், எம்மை மிகவும் உற்சாகமூட்டும் கோள்கள், எமது பூமியைப் போன்ற கோள்களே. காரணம் இவற்றில் உயிரினங்கள் இருக்ககூடும்: பாறையால் ஆன கோள்களான இவற்றின் வெப்பநிலை அதன் மேற்பரப்பில் நீர் திரவநிலையில் இருப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.
அப்படியான ஒரு கோள் இருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது, அதுவும் நமது சூரியத் தொகுதிக்கு மிகவும் அண்மிய விண்மீனைச் சுற்றிவரும் கோள்!

புரோக்சிமா செண்டோராய் (Proxima Centauri) பூமியில் இருந்து வெறும் 4.2 ஒளியாண்டுகள் தொலைவிலேயே காணப்படுகிறது. ஆகவே இதனைச் சுற்றிவரும் பாறைக்கோள், எமக்கு மிகவும் அருகில் இருக்கும் பிற-விண்மீன் கோளாகும்.
Pale Red Dot என்கிற ஆய்வியல் திட்டத்தின் வழியாக Proxima Centauri விண்மீன் உலகில் உள்ள பல தொலைக்காட்டிகள் மூலம் நீண்ட காலத்திற்கு அவதானிக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2013 இல் முதன்முதலாக Proxima Centauri யில் சிறிய நடுக்கம் அவதானிக்கப்பட்டது. அதற்குக் காரணம் Proxima Centauri ஐ சுற்றிவரும் ஒரு கோளின் ஈர்புவிசையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்த போதும், சரியான முடிவுக்கு வரப்போதுமான தரவுகள் இருக்கவில்லை, ஆகவே தேடல் வேட்டை ஆரம்பமானது.
புதிய தேடல் தரவுகளின் அடிப்படையில், Proxima Centauri சில வேளைகளில் பூமியை நோக்கி மணிக்கு 5 கிமீ வேகத்தில் வருவது போலவும், சில வேளைகளில் பூமியை விட்டு மணிக்கு 5 கிமீ வேகத்தில் விலகிச்செல்வது போலவும் தோற்றம் அவதானிக்கப்பட்டது. இந்த மாதரியான மாற்றம் ஒவ்வொரு 11.2 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியான மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
இதனை அவதானித்த விஞ்ஞானிகள், சிறியளவில் டாப்ளர் மாற்றம் (Doppler shift) இடம்பெறுவதை அவதானித்தனர். இதற்குக் காரணம் நிச்சயம் ஒரு கோள் என்கிற முடிவுக்கு வந்தனர் – பூமியை விட 1.3 மடங்கு பெரிய கோள் ஒன்று Proxima Centauri ஐ வெறும் 7 மில்லியன் கிமீ தூரத்தில் சுற்றிவருவதால் இந்த டாப்ளர் விளைவு ஏற்படுகிறது.
இந்தக் கோளிற்கு Proxima b என்று பெயரிட்டுள்ளனர். பூமி சூரியனை 150 மில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவருகிறது, ஆனால் Proxima Centauri இற்கும் அதனைச் சுற்றிவரும் கோளிற்கும் இடையிலான தூரம் இதில் 5% மட்டுமே. இன்னொரு விதத்தில் கூறவேண்டும் என்றால், சூரியனை புதன் சுற்றிவரும் தூரத்தை விட (சூரியனுக்கும் புதனுக்கும் இடையிலான சராசரித் தூரம் 36 மில்லியன் கிமீ) இது குறைவான தூரமாகும்.
அப்படியென்றால் Proxima b மிக அதிகமான மேற்பரப்பு வெப்பநிலையை கொண்டிருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சூரியனை விட Proxima Centauri வெப்பமும் வெளிச்சமும் குறைந்த விண்மீன் ஆகும். எனவே வெறும் 7 மில்லியன் கிமீ தொலைவிலேயே தனது தாய் விண்மீனை சுற்றிவந்தாலும், Proxima b, ‘habitable zone’ எனப்படும் வாழத் தகுதியான எல்லையிலேயே காணப்படுகிறது. அதாவது இந்த எல்லையில் கோளின் மேற்பரப்பில் நீர் திரவ நிலையில் காணப்படும்.
வெப்பநிலை சரியான அளவில் இருந்தாலும், ஒரு விண்மீனுக்கு மிக அருகில் சுற்றிவரும் கோளிற்கு இருக்கும் பிரச்சினை, குறித்த தாய் விண்மீனில் இருந்து வரும் எக்ஸ்-கதிர் மற்றும் புறவூதாக் கதிர்வீச்சின் பாதிப்பாகும். ஆகவே நிச்சயம் Proxima Centauri இற்கு மிக அருகில் சுற்றுவதால், கதிர்வீச்சின் பாதிப்பு மிக அதிகமாகவே Proxima b இற்கு இருக்கும்.
மேலும் இது வெறும் 11 நாட்களில் Proxima Centauri ஐ சுற்றிவருவதால், இதனது காலநிலை பூமியை விட மிக வித்தியாசமானதாக இருக்கலாம். எப்படியிருப்பினும் இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும்.
நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனைச் சுற்றி ஒரு கோள் அதுவும் உயிர்வாழக்கூடிய காலநிலைகள் இருக்கத்தக்க பாறைக்கோள் ஒன்று இருப்பது, ஆச்சரியமானது என்பதனை விட, அதனை ஆய்வு செய்ய எம்மை மேலும் மேலும் தூண்டும் என்பதே உண்மை.
ஏற்கனவே எமக்கு அருகில் இருக்கும் விண்மீன் தொகுதிகளுக்கு நுண்-விண்கலங்களை அனுப்பும் திட்டத்தைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன. Nano-Lightsails எனப்படும் இவ்வகையான விண்கலங்கள், பூமியில் இருந்து ஒளிக்கற்றை மூலம் உந்தப்படும் – பாய்மரக்கப்பல் போல என்று நினைத்துக்கொள்ளுங்கள். இவை மிகச் சிறிய வின்கங்கள் என்பதால், மணிக்கு 100 மில்லியன் கிமீ வேகத்தில் பயணிக்கும். அப்படியென்றால் 20 வருடங்களில் Alpha Centauri விண்மீனை அடைந்துவிடலாம்.
ஆனாலும் இப்படியான nano-lightsail களை உருவாக்குவதில் இன்னும் சில பொறியியல் சிக்கல்கள் இருகின்றன, அவற்றை வெகு சீக்கிரத்திலேயே தீர்த்து, முதலில் Alpha Centauri ஐ நோக்கி இவற்றை அனுப்ப தற்போது ஆய்வுகள் இடம்பெறுகின்றன. Proxima Centauri ஐ நோக்கி கூட இவற்றை அனுப்பி புதிதாக கண்டறியப்பட்ட கோளைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெறலாம்.
தகவல்கள்: https://breakthroughinitiatives.org/Initiative/3, https://palereddot.org/, https://www.eso.org/public/news/eso1629/
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam