உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்

எழுதியது: சிறி சரவணா

நமது சூரியத் தொகுதி என்பது மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. வெறும் சூரியனும் எட்டுக் கோள்களும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதையும் தாண்டி விண்கற்கள், வால்வெள்ளிகள் தூசு துணிக்கைகள் என்று பற்பல விண்வெளிப் பொருட்கள் நமது சூரியத் தொகுதியில் உலா வருகின்றன.

விண்கற்கள் என்ற விதத்தில், எமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, விண்கற்கள் பட்டி / சிறுகோள் பட்டி (asteroid belt) – செவ்வாயின் சுற்றுப் பாதைக்கும், வியாழனின் சுற்றுப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் பில்லியன் கணக்கான விண்கற்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த மொத்த விண்கற்களின் திணிவையும் ஒன்றாகச் சேர்த்தாலும், நமது நிலவின் திணிவில் வெறும் 4% மட்டுமே வரும், எனினும், சில நூறு கிமீ விட்டம் தொடக்கம், சிறிய சிறிய மணல் மண் அளவுள்ள பில்லியன் கணக்கான துணிக்கைகள் வரை காணப்படுவதால், இவற்றின் பாதைகள் பரவலாக வேறுபடுகின்றன.

இந்த விண்கற்கள் பட்டியில் மட்டும்தான் விண்கற்கள் காணப்படுகின்றன என்று கருதினால் அது தவறு. சூரியத் தொகுதியில் உட்பிரதேசமான அதாவது புதன் தொடக்கம் வியாழன் வரையான சுற்றுப் பாதையில் இவை பரவலாகச் சிதறிக் காணப்படுகின்றன. இன்னொரு விதத்தில் கூறவேண்டும் என்றால், asteroids என அழைக்கப்படும் விண்கற்கள் / சிறுகோள்கள், சூரியத் தொகுதியின் உட்பிரதேசதில் காணப்படும் சிறிய வான் பொருட்களை குறிக்க பயன்படும் சொல்லாகும்.

Meteorcrater
Meteor Crater – Arizona, United States – 1200 மீட்டர் விட்டம் கொண்ட 170 மீட்டார் ஆழமான இந்தக் குழி, 50 மீட்டார் விட்டமாக நிக்கல்+இரும்பால் ஆன ஒரு விண்கல் 50,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் விழுந்ததால் ஏற்பட்டது.

பல்வேறு சந்தர்ப்பங்களில், விண்கற்களின் பயணப்பாதை கோள்களின் பயணப்பாதையில் சந்திக்கும் வேளையிலோ, அல்லது, கோள் ஒன்றிற்கு அருகில் வரும் போது, அதனது ஈர்ப்புவிசையால் கவரப்பாடு பாதைமாறியோ, பல விண்கற்கள் கோள்களில் மோதுகின்றன. இதில் பிரச்ச்சினை என்னவென்றால், இப்படியான உற்புற சூரியத் தொகுதியில் சுற்றிவரும் விண்கற்களின் அளவு சிறிய மணல் மண் தொடக்கம் அண்ணளவாக 1000km வரை விட்டம் கொண்டதாக காணப்படுகின்றன.

இவை போதாதென்று கோள்களின் சுற்றுப் பாதைக்கு அப்பால் இருந்து சூரியனை நோக்கிவரும் வால்வெள்ளிகள், துரதிஷ்டவசமாக சிலவேளைகளில் கோள்களின் பயணப்பாதையில் குறுக்கிடும் போது, கோள்களுடன் மோதும் சம்பவங்களும் இடம்பெறும்.

வியாழன், சனி போன்ற பாரிய வாயு அரக்கர்கள் வகைக் கோள்களை சுற்றிவரும் பல துணைக்கோள்கள், ஒரு காலத்தில் தன்னிச்சியாக சூரியத் தொகுதியை சுற்றிவந்த விண்கற்கள் எனவும், பின்னர் இந்தக் கோள்களின் ஈர்ப்புவிசைக்குள் அகப்பட்டு, பின்னர் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட துணைக்கோள்கள் என்றே விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.

வியாழனால் கைப்பற்றப்பட்டு பின்னர் வியாழனுடன் மோதுண்ட Shoemaker-Levy 9 என்கிற வால்வெள்ளி மேலே குறிப்பிட்ட நிகழ்வுக்கு ஒரு நல்ல உதாரணம். ஜூலை 1992 இல் Shoemaker-Levy 9 வால்வெள்ளி துண்டுதுண்டாக உடைந்து பின்னர் ஜூலை 1994 இல் வியாழனின் மேற்பரப்பில் மோதியதை நாம் தொலைநோக்கிகளைக்கொண்டு அவதானிக்கக்கூடியதாகவும் இருந்தது எமக்கு வால்வெள்ளிகள் / விண்கற்கள் எப்படி கோள்களால் கவரப்பட்டு பின்னர் கோள்களில் மோதுகின்றன என்பதனைப் பற்றி அறிய உதவியது என்றும் கூறலாம். இந்த வால்வெள்ளி வியாழனின் மேற்பரப்பில் மோதும் போது அது பயணித்த வேகம் மணித்தியாலத்திற்கு 216,000 கிமீ ஆகும்! இந்த வால்வெள்ளித் துண்டுகள் வியாழனில் மோதியதால் ஏற்பட்ட தழும்பு, வியாழனின் தனிப்பட்ட குறியீடான “பெரும் சிவப்புப் புள்ளி”யை விட இலகுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தில் அந்தத் தழும்புகளை பார்க்கலாம்.

Jupiter_showing_SL9_impact_sites
பிரவுன் நிறத்தில் தெரிவது, உடைந்த வால்வெள்ளி வியாழனின் மேற்பரப்பில் பல இடங்களில் விழுந்ததால் ஏற்பட்ட தழும்பு.

சூரியத் தொகுதியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், எல்லாக் கோள்களிலும் விண்கற்கள் / வால்வெள்ளிகள் மோதிய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. எமது பூமி கூட இதற்கு விதிவிலக்கல்ல.

பல விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளமான குழிகளில் சில, மண்ணரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றைத் தாண்டியும் இன்றும் பூமியில் இருகின்றன. மேலும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் மோதிய 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல்தான் பூமியில் இறுதியாக இருந்த டைனோசர்கள் முழுதாக அழியக்காரணம் என்று பல்வேறுபட்ட புவியியல் சான்றுகள் கூறுகின்றன. இந்த வெறும் 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல் பூமியில் மோதியதால், 180 கிமீ விட்டம் கொண்ட குழி உருவானதென்றும் அதன் போது சிதறி எறியப்பட்ட தூசுகள் பூமியின் வளிமண்டலத்தை மூடி, காலநிலையை மாற்றி, அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் ¾ பங்கு உயிரினம் முழுதாக அழியக் காரணமாக இருந்தது.

நமது பூமியில் மட்டுமல்லாது, நிலவை எடுத்துக்கொண்டால், அது உருவாகிய காலப்பகுதியில் இருந்து அதில் விழுந்த விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளின் தடயங்கள் இன்னமும் அப்படியே இருகின்றன, காரணம் அங்கு பூமியைப் போன்ற தொழிற்படும் வளிமண்டலமும் காலநிலை மாற்றமும் இல்லாததினால் அந்தத் தடயங்கள் அப்படியே சிதைவின்றி காணப்படுவதுடன், விண்கற்களின் தாக்கம் எப்படிப்பட்ட உக்கிரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதனை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது என்றே சொல்லலாம்.

உண்மையில் இந்த விண்கற்கள் / வால்வெள்ளிகள் எல்லாம் யார் என்று பார்த்தால், சூரியத் தொகுதி உருவாகிய காலப்பகுதியில் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள் மூலம் சிதறடிக்கப்பட்ட எச்சங்களே.

வால்வெள்ளிகள் – புறச்சூரியத் தொகுதிக் கோள்களான வியாழன், சனி, யுறேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களின் பிறந்த காலப்பகுதியில் அவற்றில் முட்டி மோதிய மற்றும் இந்தக் கோள்களாக மாறாத விண் பொருட்கள் இவையாகும்.

விண்கற்கள் – இவை உட்புற சூரியத் தொகுதியில் உருவாகிய கோள்களின் மோதுகையால் சிதறிய பாறைகளால் ஆன எச்சங்கள் எனலாம்.

பெரும்பாலும் இவை மோதல்களால் சிதறடிக்கப்பட்டவை என்பதால், இவற்றின் பாதைகளை துல்லியமாக எதிர்வுகூறுவது என்பது முடியாத காரியம் என்றே கூறலாம்.

சரி, இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கும் விடயம், பூமியை தாக்கக்கூடிய விண்கற்கள் / வால்வெள்ளிகள் இருக்கின்றனவா? அவற்றால் எப்படியான ஆபத்துக்கள் வரலாம், அவற்றை தவிர்ப்பதற்கும், கண்காணிப்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா இப்படி சில விடயங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.

Near-Earth Objects (NEOs) எனப்படும் பூமிக்கு அருகில் சுற்றிவரும் விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளை குறிக்கும். சூரியத் தொகுதியின் உட்புறக் கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற கோள்களின் அருகில் வரும் விண்கற்கள் / வால்வெள்ளிகள் இந்தக் கோள்களின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு, இவற்றின் பாதை மாற்றப்பட்டு, பின்னர் இந்தப் பாதை பூமியின்சுற்றுப் பாதைக்கு அருகில் வருமானால் அவற்றை நாம் NEO என்று அழைக்கலாம்.

potentially_hazardous_asteroids_2013
140 மீட்டருக்கும் பெரியதான NEOக்கள், பூமியின் சுற்றுப் பாதைக்கு 7.6 மில்லியன் கிமீ தூரத்தினுள் வரக்க்டியவை, நீல நிறத்தில் அவற்றின் பயன்பபாதை காட்டப்பட்டுள்ளது.

இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், சூரியனை சுற்றிவரும் விண்கற்கள் / வால்வெள்ளிகள், சூரியனை நெருங்கும் போது, சூரியனுக்கும் குறித்த விண்கல் / வால்வெள்ளிக்கும் இடையிலான தூரம் 1.3 வானியல் அலகைவிடக் (Astronomical Unit – AU – ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரமாகும், அண்ணளவாக 150 மில்லியன் கிமீ) குறைவாக இருந்தால் அவற்றை NEO என வகைப்படுத்துகின்றனர்.

இதுவரை கண்டறியப்பட்ட வரைக்கும் 14,000 இற்கும் அதிகமான விண்கற்கள் / சிறுகோள்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான வால்வெள்ளிகள் இந்த NEO வகையினுள் வருகின்றன.

இந்த NEOக்கள் எல்லாமே தமிழ் மெகாசீரியலில் வரும் வில்லன்களை (வில்லிகள்?!) போல எதோ பூமியை தாக்குவதற்காகவே சபதம் பூண்டவை என்று கருதவேண்டியதில்லை. ஆனால், இந்த NEOக்களில் பூமியின் சுற்றுப் பாதையில் குறுக்கிடும் பல விண்கற்கள் / வால்வெள்ளிகள் காணப்படுகின்றன. அவற்றில் பல பூமிக்கு மிக மிக அருகில் வரவும், சிலவேளைகளில் மோதிவிடவும் வாய்ப்புக்கள் உண்டு!

உங்களுக்குத் தெரியுமா… ஒவ்வொரு நாளும் பூமியின் வளிமண்டலத்தில் நூறு தொன் எடையுள்ள வான் பொருட்கள் நுழைகின்றன. இவை பெரும்பாலும் வால்வெள்ளியில் இருந்து வெளிவந்த தூசு துணிக்கைகள் மற்றும் சிறிய மண் போன்ற விண்கற்கள் ஆகும். விண்கற்கள் ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் முட்டி மோதி அவற்றின் மூலம் சிதறிய சிறிய விண்கற்கள் என்பனவும் இவற்றில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் மிகச்சிறியவை என்பதனால், பூமியை அடைவதற்குள், வளிமண்டலத்தில் எரிந்துவிடும்.

புள்ளியியல் கணக்குப் படி அண்ணளவாக 10,000 வருடங்களுக்கு ஒரு முறை, 100 மீட்டார் விட்டத்தைவிட அதிகளவு கொண்ட விண்கற்கள் பூமியில் விழுந்து பிராந்திய ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் – உதாரணமாக சுனாமி போன்றவை.

ஆனால் சில பல நூறாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை 1 கிமீ அளவைவிடப் பெரிய விண்கற்கள் விழுந்து, பாரிய முழு உலகிற்குமான பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வைக் கருதலாம். சில கிமீ அளவுள்ள விண்கற்கள் பூமியில் மோதுவதால், பாரிய ஆபத்தான விளைவுகள் ஏற்படும். மோதலினால் சிதறடிக்கப்படும் தூசுகள் பூமியின் வளிமண்டலத்தில் ஒரு படையாக பரவுவதால் சூரிய ஒளி பூமியில் விழுவது தடுக்கப்படும் / குறைவடையும். இதனால் பூமியின் வளிமண்டல வெப்பநிலை குறையும். அமில மழை, தீமழை – விண்கல் விழுந்து வெடித்ததால் சிதறடிக்கப்பட்ட தீபாரைகள் மீண்டும் பூமியின் மேற்பரப்பில் மழை போல விழும் அல்லவா.

பூமியின் வரலாற்றை ஆராயும் போது இப்படியான நிகழ்வுகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இடம்பெற்றுள்ளது, மேலும் இப்படியான நிகழ்வுகளை நிகழ்த்தவல்ல விண்கற்கள் / வால்வெள்ளிகள் இன்னும் சூரியத் தொகுதியில் உலா வருகின்றன, ஆகவே இவற்றின் ஆபத்தை நாம் உணர்ந்துள்ளோம்.

விருத்தியடைந்த விண்வெளி ஆய்வுத் திட்டங்களைக் கொண்ட அமெரிக்கா, ரஷ்சியா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை பூமிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய NEOக்களை கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை வாசிக்கும் உங்களுக்கு ஒரு நற்செய்தி – NEO மற்றும் இவற்றின் ஆபத்தான மோதல்களைப் பற்றி நீங்கள் அவ்வளவாக கவலை கொள்ளத்தேவையில்லை. வீதி விபத்து, நோய்த் தாக்கம், மற்றும் இயற்கை அனர்த்தம் மூலம் ஏற்படும் அழிவின் நிகழ்தகவு, பூமியை ஒரு பாரிய விண்கல் தாக்கும் நிகழ்வின் நிகழ்தகவைவிடக் கூடியதாகும்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் உங்களை குழப்புவதில்லை. மாறாக இப்படியும் சில விடயங்கள் உள்ளன என விளக்குவதே எனது நோக்கம். ஆகவே வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்.

பூமியில் உயிரினம் தோன்றியது எப்படி என்பது இன்னமும் புரியாத புதிர்தான். பல்வேறு பட்ட கோட்பாடுகள் எப்படி முதலாவது உயிரினம் பூமியில் தோன்றியது என்று கூறினாலும், ஒரு குறிப்பிட்ட கோட்பாடு சுவாரசியமானது. அதன்படி, சூரியத் தொகுதி பிறந்து அதனோடு சேர்த்து பிறந்த பூமியின் மீது மிக்க உக்கிரமாக வால்வெள்ளிகளும், விண்கற்களும் மோதின. பூமிக்கு முதலாவது உயிரினம் அல்லது உயிரினம் தோன்றத் தேவையான மூலக்கூறுகள் இப்படியான வால்வெள்ளிகளில் இருந்து வந்திருக்கலாம் என்பது அந்தக் கோட்பாடு.

மேலும் பூமியில் இருக்கும் நீரும் வால்வெள்ளிகள் மூலமே பூமிக்கு கொண்டுவந்திருக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆகவே ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால், விண்கற்கள் மோதுவதும் அப்படியொன்றும் மோசமான நிகழ்வாகத் தெரியவில்லை. ஆனால் கூர்ப்படைந்த உயிரினங்கள் வாழும் கோள்களில் பாரிய விண்கற்கள் மோதுவது என்பது, அந்த உயிரினங்கள் அனைத்தும் ‘கூண்டோடு கைலாயம்’ செல்ல வழிவகுக்கும் என்பதிலும் ஐயமில்லை.

சரி மீண்டும் NEOவிற்கு வருவோம், பூமிக்கு அருகில் வரும் NEOக்களில் குறிப்பட்ட விண்கற்கள் / வால்வெள்ளிகளை PHO (potentially hazardous objects – ஆபத்தை விளைவிக்கவல்ல பொருட்கள்) என வகைப்படுத்துகின்றனர். இவை பூமிக்கு மிக அருகில் வரும் அதேவேளை, பூமியில் மோதினால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய NEOக்களாகும். ஆனால் இவை எல்லாம் பூமியில் மோதும் என்று அர்த்தமில்லை. பூமிக்கு 750,000 கிமீ தூரத்தினுள் வரும் 150 மீட்டார் அளவைவிடப் பெரிய NEOக்கள் PHOக்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

இதுவரை நாம் கண்டறிந்த வரை 1726 PHOக்கள் சுற்றி வருகின்றன. ஆனால் அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் இவற்றில் ஒன்றும் பூமியில் நேரடியாக மோதுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

இருப்பினும், எதாவது PHOக்கள் மோதும் வாய்ப்பு அதிகரித்தால், அதன் தாக்கம் எப்படி இருக்கலாம் என்று இலகுவாக புரிந்து கொள்வதற்காக டொரினோ அளவீடு (Torino scale) ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் இலகுவாக பொது மக்களும், வின்னியலாலர்க்ளும் பூமியில் மோதும் விண்கல் / வால்வெள்ளி நிகழ்வின் மூலம் எப்படியான தாக்கம் உருவாகும் என்பதனை இலகுவாக தொடர்பாடிக் கொள்ளமுடியும்.

இந்த டொரினோ அளவீட்டில் பூஜ்ஜியம் தொடக்கம் பத்து வரையான இலக்கம் மூலம் மோதலின் தீவிரம் அளவிடப்படும்.

கீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு இழக்க அளவீட்டிற்கும் எப்படியான தாக்கம் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளவு நிறம் தாக்கம்
0 வெள்ளை பூமியின் மேற்பரப்பில் மோதுவதற்கான சாத்தியக்கூறு இல்லை, அல்லது மிக மிக மிகக் குறைவு. இது மிகச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும் நிலையைக் குறிப்பிடும்.
1 பச்சை பொதுவாக பூமியை நெருங்காமல் அப்படியே சென்றுவிடும் விண்கற்கள், இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. பொதுவாக இப்படியான விண்கற்கள் கண்டறியப்பட்டால், பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை, காரணம் இவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை. பெரும்பாலும் இவற்றை தொலைநோக்கியால் மேலும் ஆய்வுகள் செய்த பின்னர் 0 அளவீட்டிற்கு மாற்றப்படும்.
2 மஞ்சள் பூமிக்கு அருகில் ஆனால் ஆபத்தற்ற நெருங்கல். விண்ணியலாளர்கள் இந்த விண்கற்களை அவதானிப்பார். மக்கள் கவலைப்படத் தேவையில்லை.
3 மஞ்சள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் நிகழ்வு. பூமியுடன் மோதுவதற்கு 1% வரையான வாய்ப்பு உண்டு. மோதினால் சிறிய ஊர் அளவிற்கு பாதிப்பு இடம்பெறலாம். இப்படியான நிகழ்வு அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இடம்பெறும் எனக் கருதப்பட்டால், மக்களுக்கும் தகவல்கள் வெளியிடப்படும்.
4 மஞ்சள் பூமிக்கு மிக அருகாமயில் கடந்து செல்லும் நிகழ்வு. மோதுவதற்கு 1% இற்கும் அதிகமான வாய்ப்பு. மோதினால்  பூமியில் ஒரு பிராந்தியமே தாக்கப்படும் அபாயம். வானியலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இப்படியான நிகழ்வு அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இடம்பெறும் எனக் கருதப்பட்டால், மக்களுக்கும் தகவல்கள் வெளியிடப்படும்.
5 ஆரஞ்சு பூமிக்கு மிக அருகில் வந்து அச்சுறுத்தும் நிகழ்வு. நிச்சயமற்ற மோதல், மோதினால் பாரிய பிராந்திய அழிவு. விண்ணியலாளர்கள் மோதலின் துல்லியத் தன்மையை கண்டறிய தொடங்குவார்கள். மோதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் என்றால், அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.
6 ஆரஞ்சு பூமிக்கு மிக அருகில் வரும் பாரிய விண்கல். நிச்சயமற்ற மோதல், மோதினால் முழு உலகப் பேரழிவு. முழு விண்ணியல் ஆய்வாளர்களின் கவனமும் ஈர்க்கப்படும். நிகழ்வு அடுத்த மூன்று தசாப்தங்களுக்குள் இடம்பெறும் என்றால் அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.
7 ஆரஞ்சு மிகவும் நெருங்கிய பாரிய விண்கல் நிகழ்வு. மோதலுக்கான சாதியக்கூறு நிச்சயமற்றது. ஆனால் இந்த நூற்றாண்டுக்குள் மோதினால் பாரிய உலகளாவிய பேரழிவு. முழு உலகும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.
8 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல். நிலத்தில் மோதினால் ஒரு ஊர் அழியும் அபாயம், அல்லது கடலில் மோதினால் சுனாமி ஏற்படும். இப்படியான நிகழ்வுகள் 50 தொடக்கம் சில ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறலாம்.
9 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல், பிராந்திய அழிவு. கடலில் மோதினால் பாரிய சுனாமி பல நாடுகளின் கரையோரங்களை தாக்கும். இப்படியான நிகழ்வுகள் 10,000 தொடக்கம் 100,000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்.
10 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல். முழு உலகப் பேரழிவு. நாமறிந்த மனிதகுல நாகரீகம் முழுதாக அழிவதற்கான சாத்தியக்கூறு. பல லட்சம் வருடங்களுக்கு ஒரு முறை இப்படியான நிகழ்வு நிகழலாம்.

இதுவரை நாம் அவதானித்தற்கு இணங்க, எந்தவொரு NEOக்களும் நான்காம் மட்டத்தை தாண்டியதில்லை. தற்போதுள்ள அனைத்து PHOக்களும் பூஜ்ஜிய மட்டத்திலேயே இருக்கின்றன – மகிழ்ச்சி!

ஆனாலும் இப்போது எஞ்சி இருக்கும் கேள்வி, இப்படியான “சிவப்பு” நிலையில் எதாவது விண்கற்கள் / வால்வெள்ளிகள் எம்மை நோக்கி வருகிறது என்றால், அதற்கு எம்மால் என்ன செய்துவிட முடியும்? என்பதுதான்.

அண்ணளவாக 12,000 கிமீ விட்டமான பூமியின் மேற்பரப்பில் வாழும் பெரும்பாலான வளர்ச்சியடைந்த உயிரினங்கள் அனைத்தையும், கொத்தாக கொன்றுவிடக்கூடிய சக்தி வெறும் 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல் ஒன்றிற்கு உண்டு! துரதிஷ்டவசமாக மனிதர்களாகிய நாமும் அப்படியாக ‘கைலாசம்’ செல்லகூடிய உயிரினமாக இருப்பதால் இப்படியான விண்கல் / வால்வெள்ளி மோதல்களை தவிற்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்பதனை புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தவாறு சில பல வழிகளை சர்வதேச விஞ்ஞானிகள் குழுக்கள் பரிந்துரைத்துள்ளனர். அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக வரும் ஆபத்தைக் கண்டறிய வேண்டும், அதாவது, பூமியைச் சுற்றிவரும் PHOகளைப் பற்றி முழுதாக அறிந்திருந்தால்தான் எம்மால் அவை எப்போது எப்படி பூமியில் மோதும் என்பதனைக் கணக்கிடமுடியும் (மோதும் சந்தர்பம் இருந்தால்!).

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால், பெரும்பாலும் பெரிய PHOக்களை எம்மால் இலகுவாக கண்டறியவும் அவதானிக்கவும் முடிகிறது. பெரிய PHOக்கள் என்றால், முழு உலகிற்குமான ஆபத்தை உருவாக்கக்கூடியவை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிராந்திய ரீதியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய சில நூறு மீட்டர்கள் விட்டம் கொண்ட PHOக்களை கண்டறிவது மிகக் கடினமான காரியமாகும். எம்மால் இவற்றை பெரும்பாலும் கண்டறியக்கூடியதாக இருப்பினும், அவை பூமிக்கு மிகவும் அருகில் வந்த பின்னரே எம்மால் இவற்றைக் கண்டறியக்கூடியதாக இருக்கின்றது. அப்படியாயின் பூமியுடன் மோதும் பாதியில் இப்படியான சிறிய PHO வந்தால், அவற்றை நாம் முதலில் அவதானிப்பதற்கும், அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் போதுமான காலம் இருக்காது!

சரி, முன்கூட்டிய PHOக்களை கண்டறிந்து விட்டோம் என்றாலும், அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். அவற்றின் பாதை, அவை பூமியின் பாதையில் குறுக்கே வருமா? மற்றும் மோதலுக்கான சாதியக்கூறுகள் உண்டா என தொடர்ந்து அவதானிப்புகள் நடைபெறவேண்டும்.

சிலவேளைகளில் கண்டறியப்பட்ட புதிய விண்கற்கள், அவற்றின் பாதை முழுதாகக் கண்டறியப்பட முதலே அவற்றை நாம் தொலைத்துவிடக் கூடிய சந்தர்பங்களும் உண்டு. விண்கற்களின் பாதைகள் கோள்களின் பாதைகளைப் போல நிலையானது அல்ல என்பதனால், போதுமானளவு அவதானிப்புகள் இன்றி அவற்றின் பாதைகளை உறுதிப்படுத்த முடியாது.

விண்கற்களின் / வால்வெள்ளிகளின் பயணப்பாதையை மட்டும் அவதானித்தால் மட்டும் போதுமா? அவற்றை எவ்வாறு பூமியுடன் மோதுவதில் இருந்து தடுப்பது என்று சரியான முறையைக் கண்டறிய, குறித்த விண்கற்களை / வால்வெள்ளிகளை பற்றியும் அவற்றின் பண்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றின் ஆக்கக்கூறு, அவை சுழலும் விதம் மற்றும் அதனது வடிவம் போன்றவற்றைப் பற்றி தெளிவான அறிவை நாம் கொண்டிருந்தால் மட்டுமே நாம் குறிந்த PHOக்களை சரியான முறையைக் கொண்டு தடுக்கமுடியும்.

நாம் தற்போது பல்வேறு வழிகளில் விண்கற்கள் / வால்வெள்ளிகள் என்பவற்றின் வகைகள், அதன் பண்புகள் என்பவற்றை தொலைநோக்கிகள் மூலமும், விண்கலங்கள் மூலமும் ஆய்வு செய்து பல்வேறு விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் பற்றி பல்வேறு விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம்.

ஒரு PHO பூமியை நோக்கி வருகிறது என்று தெரிந்தால், அதனது அளவு, கட்டமைப்பு, ஆக்கக்கூறு மற்றும் அது மோதுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்பவற்றைக்கொண்டு சில பல வழிகளை எம்மால் தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைக்கொண்டு செய்யமுடியும்.

பல வருடங்களுக்கு முன்பே ஒரு PHO பூமியில் மோதிவிடப் போகிறது என்று தெரிந்தால், குறித்த PHOவை நோக்கி விண்கலங்களை அனுப்பி, சிறிய ஈர்ப்புவிசை மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் PHOவை பூமியுடன் மோதுவதற்கான பாதையில் இருந்து விலகச்செய்யலாம்.

அல்லது விண்கலங்களை அனுப்பி குறித்த விண்கல்லில் லேசரைப் பயன்படுத்தி துவாரங்கள் இடுவதன் மூலம், அதிலிருந்து வெளிவரும் தூசுகளை உந்து சக்தியாக பயன்படுத்தி விண்கற்களை திசை திருப்பலாம்.

மிகக்குறைந்த காலத்தில் ஒரு விண்கல் மோதிவிடப் போகிறது என்று தெரிந்தால், இப்படியான நீண்ட கால செயன்முறைகளை செயற்படுத்த முடியாது. எனவே நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி, விண்கல்லை தாக்கி அவற்றை சிறிய விண்கற்களாக உடைத்தோ, அல்லது அதனது திசையை மாற்றவோ எத்தனிக்கலாம்.

எப்படி இருப்பினும் இப்படியான தொழில்நுட்பங்கள் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு முறையில் இதனைப் பார்த்தால், பாரிய விண்கல் ஒன்று பூமியை தாக்குவது என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகும். அதாவது ஒரு நாடு அல்லது ஒரு கண்டம் என்ற வரையறையை தாண்டி, அது முழு உலக நாடுகளையும் பாதிக்கும் நிகழ்வாகும். ஆகவே கூட்டுமுயற்சி மற்றும் ஒருமித்த திட்டமிடல் அவசியம்.

இன்று நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகம் என்பன வினைத்திறனுடன் NEO மற்றும் PHOக்களை கண்காணிக்கின்றன. இருந்தும் பூரணமான கண்காணிப்பு என்று கூறிவிடமுடியாது. மேலே ஏற்கனவே கூறியது போல, பாரிய விண்கற்களை எம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் ஆனால், சில நூறு மீட்டர்கள் அளவுள்ள விண்கற்களை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் கடினமாக ஒன்று.

இறுதியில் எல்லாமே நிகழ்தகவில் வந்து நிற்கிறது. அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் எந்தவித நேரடி விண்கற்கள் / வால்வெள்ளிகள் மோதல் இல்லை என்பதால், நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் நிச்சயம் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும். மேலும் இப்படியான ஆபத்துக்களை தடுக்க நிச்சயம் எதாவது செயற்திட்டத்தை மனிதகுலம் உருவாக்கியிருக்கும் என்று நம்புவோம்.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam