மீண்டும் ஒரு புதிய குறள்கோள் கண்டுபிடிப்பு

மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் புதிய குறள்கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். புளுட்டோவின் பாதி அளவான இந்தக் குறள்கோள், அண்ணளவாக சூரியனை புளுட்டோவின் சுற்றுப்பாதையைப் போல இரண்டு மடங்கு தொலைவில் சுற்றிவருகிறது. பால்வீதியின் பூரணமான வரைபடத்தை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர் குழு ஒன்று, Dark Energy Survey ஐ சேர்ந்த Dark Energy Camera வைக் கொண்டு இந்த புதிய குறள்கோளைக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கேமரா வானில் அசையும் பொருட்களை கண்காணிக்கும் கருவியாகும்.

தொலைவில் இருக்கும் விண்மீன்கள் பெரிதாக அசையாது, காரணம் அதன் தூரம். ஆனால் அருகில் இருக்கும் பொருட்கள் வேகமாக அசையும், இவை சூரியத்தொகுதியில் இருக்கும் விண்பொருட்களாகும். வாகனத்தில் பயணிக்கும் போது வீதியின் அருகில் இருக்கும் மரங்கள் வேகமாக அசைவது போல தெரியும் அதேவேளை, தொலைவில் இருக்கும் மலைகள் அல்லது கட்டடங்கள் குறைந்த வேகத்தில் அசைவது போலத் தோன்றும் அல்லவா? இங்கும் அதேபோலத்தான். தொலைவில் இருக்கும் விண்மீன்கள் நிரந்தரப்புள்ளிகளாக அப்படியே தெரிய, அருகில் இருக்கும் கோள்கள், விண்கற்கள், வால்வெள்ளிகள், குறள்கோள்கள் தினம்தோறும் அசைவதை அவதானிக்கமுடியும். மேலும் அதன் அசைவு வேகம் திசை என்பவற்றைக்கொண்டு அதன் தூரம் மற்றும் வேறு சில பண்புகளையும் கண்டறியமுடியும்.

sedna_wide-714e0950fff56d6186a21177ccec30e0a82cf2b9-s800-c85
குறள்கோள் செட்னாவில் இருந்து பார்த்தல் எப்படி இருக்கும் என்று ஒரு ஓவியரின் கைவண்ணத்தில். மிச்சிகன் ஆய்வாளர்கள் புதிய குறள்கோளின் மேற்பரப்பும் இப்படித்தான் இருக்கும் எனக் கருதுகின்றனர். நன்றி: NASA, ESA and Adolf Schaller

புதிதாகக் கண்டறியப்பட இந்தக் குறள்கோளிற்கு 2014 UZ224 எனப் பெயரிட்டுள்ளனர். இது வெறும் 530 கிமீ விட்டம் கொண்ட சிறிய குறள்கோளாகும். இதன் அளவு மிகச்சிறியதாக இருப்பதால் இதனை குறள்கோளாக IAU மற்றும் எனைய விண்ணியலாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியவில்லை, ஆனால் தற்போதைக்கு மாற்றிய குறள்கோள்களான Makemake, Sedna, Eris ஆகியவற்றோடு இவரையும் சேர்த்துவிடவேண்டியது தான் என்று இதனைக்கண்டறிந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த குறள்கோள் சூரியனில் இருந்து 14 பில்லியன் கிமீ தொலைவில் சுற்றுகிறது. இதன் காரணமாக ஒருமுறை சூரியனைச் சுற்றிவர சுமார் 1140 ஆண்டுகள் எடுக்கும்.

darkenergy_wide-086c7b51fb840dcf8697bdbe45e2d0fc31ef3c85-s800-c85
The Dark Energy Camera, நன்றி: Reidar Hahn/Courtesy of The Dark Energy Survey

இந்த வருட ஆரம்பத்தில் ஒன்பதாவது கோள் (Planet Nine) என்கிற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. அது நெப்டியுனுக்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் இருக்கும் ஈர்ப்புவிசையை ஆய்வுசெய்து, குறித்த பிரதேசத்தில் பெரிய ஒரு கோள் இருக்கவேண்டும் என்று கூறியது. அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருகின்றனர். ஆனால் இதுவரை ஒன்பதாவது கோள் அகப்படவில்லை.

தகவல்: phys.org, npr.org


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam