ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?

இன்று கணணி உலகில் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ். பொதுவாக வைரஸ் என்று எல்லோராலும் அறியப்பட்டாலும், கணணி வைரஸ் என்பது, மல்வெயர் (malware) எனப்படும் தீங்கு விளைவிக்கும் கணணி மென்பொருள்களில் இருக்கும் ஒரு வகை மட்டுமே. மல்வெயார்கள் பலவகளைப் படுகின்றன. கணணி வைரஸ் தவிர்த்து, வோர்ம், ட்ரோஜான் ஹோர்ஸ், ransomware, adware, spyware, scareware, rootkit இப்படி பல தினுசுகளில் இவை கிடைகின்றன!

கணணி மல்வேர்களின் பண்புகளைப் பற்றி அறிந்துகொள்ள, பரிமாணத்தின் மற்றுமொரு கட்டுரையான கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி? என்கிற கட்டுரையை வாசித்துவிடவும்.

கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?

இந்தக் கட்டுரையில் நாம், எப்படி பல்வேறுபட்ட malware களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்றே பார்க்கப்போகிறோம்.

இன்று malware இலகுவாக பல்வேறு கணணிகளுக்கு இடையில் பரவிவிடக் காரணமாக இருப்பது இணையம் என்றே கூறலாம், மேலும் இலகுவாக பைல்களை காவிச்செல்லக்கூடியதாக இருக்கும் பிளாஷ்டிரைவ்கள், இணையத் தொடர்பு இல்லாத கணணிகளுக்கு இடையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் malwareகளை பரப்பி விடுகிறது.

பொதுவாகவே கணணி வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு பெற நாம் இன்ஸ்டால் செய்யும் ப்ரோக்ராம் ஆன்டிவைரஸ். பொதுவாக பலர் ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்துவிட்டால் தங்கள் கணணி பாதுகாக்கப்பட்டுவிடும் என்றே நம்புகின்றனர். பொதுவாக இதை நானே பலமுறை எனது துறையில் கண்டுள்ளேன். சிலர் எல்லா அன்டிவைரஸ்களும் ஒரே மாதிரியாக வைரஸ்களை பிடித்துவிடும் என்றும் கருதுகின்றனர். அதனால் தான் இலவச அன்டிவைரஸ் ப்ரோக்ராம் மட்டுமே போதும் என்றும் கருதுகின்றனர். இந்தக் கருத்துகளில் இருக்கும் உண்மைத் தன்மை என்ன? இலவச அன்டிவைரஸ் ப்ரோக்ராம் மட்டுமே போதுமா என்று இந்தக் கட்டுரையின் முடிவில் உங்களுக்கு விளங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

மிக எளிமையாக சொல்லிவிடுகிறேன். வைரஸ்களை தடுக்க ஆன்டிவைரஸ் நன்றாகவே உதவும். ஆனால் இன்றைய இணைய உலகில், வைரஸ் தாக்குதல்களை விட வேறுவிதமான தாக்குதல்கள் உங்கள் கணனியைக் குறிவைப்பதை விட உங்களையும், உங்களது தகவல்களையும் குறிவைக்கின்றன. இவற்றை வெறும் ஆன்டிவைரஸ்களால் மட்டுமே நிறுத்திவிட முடியாது. போதுமான பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும் வேண்டும்.

ஒரே கட்டுரையில் அவை எல்லாவற்றியும் எழுதிவிடவோ, அல்லது அவற்றைப்பற்றி பேசிவிடவோ முடியாது. எனவே முக்கியமான சில வழிகளைப் பற்றிப் பார்க்கலம். தாக்குதல்கள் எப்படி இடம்பெறுகின்றன, தாக்குதல்களை எப்படித் தடுக்கலாம் மேலும் முன்கூட்டியே எப்படி உங்களையும் உங்கள் தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் ஆராயலாம் வாருங்கள்.

இந்தக் கட்டுரையைப் பற்றி ஒரு விடையத்தை நான் இப்போதே கூறிவிடுகிறேன். எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்பதனாலும், எல்லோராலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனாலும், இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ப்ரோக்ராம்கள் சில வணிக நோக்க ப்ரோக்ராம்களாகும். அவற்றுக்கான இலவச மாற்றீடு இருந்தால் அவற்றைக் குறிப்பிடுவேன். மேலும் விண்டோஸ் இயங்குமுறை சார்பாகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருகிறது.

சரி வாருங்கள், முதலில் உங்கள் கணனியின் நிலையப் பரிசோதிக்கலாம்.

எப்போதுமே அப்டேட் செய்யப்பட்ட இயங்குமுறை

கணனியில் ப்ரோக்ராம் ஒன்று இயங்க அடிப்படைத் தேவை ஒரு இயங்குமுறை. விண்டோஸ், மெக், லினக்ஸ் (உபுண்டு, பெடோரா போன்றவை) இப்படி பல இயங்கு முறைகள் (operating system) உள்ளன. இவற்றில் விண்டோஸ் இயங்கு முறை பிரபல்யமானது. வைரஸ் என்பதும் ஒரு ப்ரோக்ராம் என்பதால் அதுவும் இந்த இயங்குமுறையில் தான் இயங்கியாகவேண்டும்.

[இயங்குமுறை சார்ந்த malware குறித்த இயங்குமுறையில் மட்டுமே தொழிற்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்குமுறையை தாக்கும் malware லினக்சில் தொழிற்படுவதில்லை. பெருமபாலான malwareகள் இயங்குமுறை சார்ந்தவையே]

ஓட்டை இல்லாத சிஸ்டம் எங்கு இருக்கிறது? அதேபோல என்னதான் அட்வான்ஸாக இயங்குமுறைகள் இருந்தாலும், அவற்றிலும் சில பல பக்ஸ் (bugs) பாதிப்பு இருக்கலாம். இந்த பாதிப்பை சாதகமாக பயன்படுத்தி சில வகையான malwareகள் உங்கள் கணணிக்குள் வந்துவிடக்கூடிய அபாயம் உண்டு.

பொதுவாக ஒரு bug கண்டறியப்பட்டால், அதனை இயங்குமுறை தயாரித்த நிறுவனம் சரி செய்து, சரி செய்யப்பட்ட புதிய இயங்குமுறையை வெளியிடும். விண்டோஸ் இயங்குமுறையைப் பொறுத்தவரையில், விண்டோஸ் அப்டேட் என்கிற முறையில் இப்படியான bugs சரிசெய்யப்பட்டு இணையம் மூலம் உங்கள் கணனிக்கு தன்னிச்சியாக திருத்தப்பட்ட புதிய இயங்குமுறையின் பாகங்கள் தரவிறக்கப்பட்டு இன்ஸ்டால் செய்யப்படும்.

ஆனால் விண்டோஸ் இப்படி அப்டேட் செய்ய நீங்கள் முறைப்படி விண்டோஸ் இயங்குமுறையை வாங்கியிருக்கவேண்டும். அப்படி வாங்கியிருக்காவிடில், அப்டேட் செய்யும் போது உங்கள் இயங்குமுறை திருடப்பட்ட காப்பி என்று அது கண்டறிந்து சில சிக்கல்களை உங்களுக்கு கொடுக்கலாம். பொதுவாக முறைப்படி வாங்காத விண்டோஸ் இயங்குமுறையை இன்ஸ்டால் செய்பவர்கள் விண்டோஸ் அப்டேட் வசதியை நிறுத்துவிடுவது வழமை. இதனால் புதிதாகக் கண்டறியப்பட்ட இயங்குமுறை ஓட்டை உங்கள் கணனிகளில் திருத்தப்படாமலே இருக்கும், இதனால் குறித்த ஓட்டை மூலம் கணணிகளுக்குள் வரும் வைரஸ்கள் உங்கள் கணனியையும் தாக்கலாம்.

புதிய இயங்குமுறைகளை பயன்படுத்துதல்

இயங்குமுறைகளில் இருக்கும் ஓட்டைகளை அப்டேட் மூலம் அடிப்பது என்பது வேறு, புதிதாகவே அடிப்படை தொழில்நுட்பத்தை மாற்றியமைத்து புதிய இயங்குமுறைகளை உருவாகுவது என்பது வேறு. விண்டோஸ் இயங்குமுறையை பொறுத்தவரையில், விண்ட்வோஸ் 95, 98, 2000 அதன் பின்னர் வெளிவந்த புகழ்வாய்ந்த விண்டோஸ் எக்ஸ்பி, அதன் பின்னர் விஸ்டா, விண்டோஸ் செவென், எய்ட், தற்போதுள்ள பதிப்பான விண்டோஸ் டென் வரைக்கும் பலவேறு தொழில்நுட்பங்களில் மாற்றங்களை செய்து, அடிப்படியில் விண்டோஸ் இயங்கும் முறைகளும் மாற்றியமைக்கப்பட்டு புதிய இயங்குமுறைகளாக சில வருடங்களுக்கு ஒரு முறைபுதிய விண்டோஸ் பதிப்பு வெளிவரும்.

விண்டோஸ் இயங்குமுறையைப் பொறுத்தவரையில் மிகவும் புகழ் வாய்ந்த, 2001 இல் வெளிவந்த விண்டோஸ் எக்ஸ்பி இயங்குமுறை தற்போதும் 9% மான மொத்த விண்டோஸ் கணனிகளில் நிறுவப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக விண்டோஸ் 7, 48% மான கணனிகளில் நிறுவப்பட்டுள்ளது. விண்டோஸ் இயங்குமுறையைப் பொறுத்தவரையில் விண்டோஸ் 7 இயங்குமுறையே அதிகளவான கணனிகளில் நிறுவப்பட்டுள்ள இயங்குமுறை ஆகும். அண்மையில் வெளிவந்த விண்டோஸ் இறுதிப் பதிப்பு விண்டோஸ் 10 ஆகும். இது தற்போது 22% மான கணனிகளில் நிறுவப்பட்டுள்ளது.

502548-microsoft-windows-defender-4-9-quarantine
விண்டோஸ் இயங்குமுறையுடன் வரும் Windows Defender ஆன்டிவைரஸ்.

விண்டோஸ் இயங்குமுறை மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் குறித்த காலத்திற்கு மட்டுமே அப்டேட் செய்யப்படும். அதாவது ஏதாவது பாதுகாப்பு ஓட்டைகள், பக்ஸ் என்பன கண்டறியப்படின் அவற்றை சரிசெய்து அதன் அப்டேட்கள் குறித்த காலம் வரையே கணணிகளுக்கு அனுப்பப்படும்.

மிகவும் பிரபல்யமான விண்டோஸ் எக்ஸ்பிக்கான மைக்ரோசாப்ட்டின் துரித ஆதரவு 2009 ஆம் ஆண்டுடன் நிறைவுற்றது – துரித ஆதரவு என்றால், கண்டறியப்படும் சகல பிரச்சினைகளும் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு விண்டோஸ் அப்டேட் மூலம் கணனிகள் அப்டேட் செய்யப்படும். விண்டோஸ் எக்ஸ்பியின் நீட்டப்பட்ட ஆதரவு 2014 உடன் முடிவுக்கு வந்தது – நீட்டப்பட்ட ஆதரவு என்றால், துரித ஆதரவைப் போல உடனுக்குடன் இல்லாவிடினும் பெரிய பிரச்சினைகள் உடனே தீர்க்கபட்டாலும் அப்டேட்கள் அவ்வளவு துரிதமாக வராது. இதையெல்லாம் கருதினால், 2014 இருக்கு பின்னர் கண்டறியப்பட்ட பாதுகாப்பு ஓட்டைகள் விண்டோஸ் எக்ஸ்பியில் நிவர்த்தி செய்யப்படமாட்டாது என்பதே இதன் அர்த்தம்.

அதேபோல அடுத்த பிரபல்யமான விண்டோஸ் 7 இற்கான துரித ஆதரவு 2015 ஜனவரியுடன் முடிவடைந்துவிட்டது. நீட்டப்பட்ட ஆதரவு 2020 இல் முடிவடையும்.

ஆகவே இப்படியான பழைய இயங்குமுறைகளை பயன்படுத்தினால், அவற்றில் புதிதாக கண்டறியப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால், அவற்றை வைத்து உங்கள் கணணிகளை குறிவைக்கும் ஜாம்பவான்களை உங்களால் தடுக்க முடியாது.

என்னதான் ஆன்டிவைரஸ் செயலிகளை நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7 போன்றவற்றில் நிறுவினாலும், அவற்றுக்கு கீழே இருக்கும் அடிப்படை விண்டோஸ் இயங்குமுறையில் இருக்கும் பிரச்சினைகளை ஆன்டிவைரஸ் மூலமும் பாதுகாக்க முடியாது.

ஆகவே முடிந்தவரை எப்போதும் புதிய இயங்குமுறைகளை பயன்படுத்தவேண்டும்.

ஆன்டிவைரஸ்கள் – ஒரு பார்வையும் தேவையும்

பல்வேறு பட்ட ஆன்டிவைரஸ்கள் இன்று சந்தையில் கிடைகின்றன. சாதாரணமாக வைரஸ்களை மட்டுமே பிடிக்கும் ஆன்டிவைரஸ் தொடக்கம், கணனியில் தீச்சுவரை நிறுவி இணையத்தில் இருந்து வரும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பது வரை பல தொழிற்பாடுகளில் ஆன்டிவைரஸ்கள் இன்று கிடைகின்றன.

முதலில் ஆன்டிவைரஸ்கள் எப்படி தொழிற்படுகின்றன என்று அறிவதன் மூலம் ஆன்டிவைரஸ்கள் பற்றிய ஒரு விளக்கத்தை பெறலாம்.

கையொப்பமுறை மூலம் வைரஸைக் கண்டறிதல் – ஒரு குறித்த வைரஸ் பற்றி ஆன்டிவைரஸ் தயாரிக்கும் நிறுவனத்துக்கு தெரியவரும் போது, அந்த வைரஸை அலசி ஆராய்ந்து, குறித்த வைரஸ் கோப்பிற்கான ஒப்பம் ஒன்று உருவாக்கப்படும். இந்த ஒப்பம் பின்னர் ஆன்டிவைரஸ் அப்டேட் மூலம் கணணிகளுக்கு அனுப்பப்படும். பின்னர் கணணியை ஆன்டிவைரஸ் ஸ்கேன் செய்யும் போது, குறித்த ஒப்பத்தில் ஏதாவது கோப்பு அகப்படும் என்றால், அதனை வைரஸ் என இனம்காண முடியும்.

இப்படியான வைரஸ்களின் ஒப்பங்களைத்தான் அடிக்கடி ஆன்டிவைரஸ் ப்ரோக்ராம்கள் அப்டேட் செய்துகொள்ளும்.

இந்தமுறைமை சிறப்பாக வைரஸ்களை கட்டுப்படுத்த உதவினாலும், புதிய வைரஸ்களை உருவாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, தனைத்தானே மாற்றியமைத்துக்கொள்ளும் வைரஸ்களை எழுதுகின்றனர். Oligomorphic, polymorphic, மற்றும் metamorphic போன்ற முறைகளைப் பயன்படுத்தும் வைரஸ்கள், தங்கள் ப்ரோக்ராம்மில் இருக்கும் சில பகுதிகளை மாற்றியமைப்பதால், இவற்றின் ஒப்பம் மாறிக்கொண்டே இருக்கும், இதனால் கையொப்பமுறையைப் பயன்படுத்தி இந்த வைரஸ்களை கண்டறியமுடியாது.

பட்டறிவைப் பயன்படுத்தி வைரஸ்களை கண்டறிதல் – இது malwareகளைக் கண்டறியப் பயன்படும் அடுத்த முறையாகும். மேலே கூறியது போல metamorphic, polymorphic நுட்பங்களை வைரஸ்கள் பயன்படுத்துவதால், வெறும் கையொப்பமுறை மூலம் வைரஸ்களை தடுத்துவிட முடியாது. மேலும், முதலில் ஒரு வகை வைரஸாக தொடங்குவது, பின்னர் பல தாக்குதல்தாரிகளால் மாற்றியமைக்கப்பட்டு பல்வேறு விதமாக விகாரமடையும். இப்படியான வைரஸ்களை எல்லாம் தனித்தனியாக கண்டறிய தனித்தனி ஒப்பங்கள் வேண்டும், ஆனால் அது பெரும்பாலும் சாத்தியமில்லை. ஆகவே பட்டறிவு ஆய்வு மூலம் இப்படியான விகாரமடைந்த வைரஸ்கள் கண்டறியப்படுகின்றன.

குறித்த வைரஸ் பரம்பரைக்கு பொதுமைப்பாடடைந்த ஒப்பங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அந்த ஒப்பங்கள் மூலம் வைரஸ்கள் ஆய்வு செய்யப்படும். பொதுமைப்பாடடைந்த ஒப்பங்கள் வைல்ட்கார்ட் முறையைப் பயன்படுத்துவதால், குறித்த வைரஸ் ஆன்டிவைரஸை ஏமாற்றுவதற்காக வேறு ப்ரோக்ராம் கோடுகளை கொண்டிருந்தாலும், பட்டறிவு முறை மூலம் பொதுமைப்பாடடைந்த ஒப்பங்கள் இந்த வைரஸ்களை காட்டிக்கொடுத்துவிடும்.

நிகழ்-நேரப் பாதுகாப்பு – தற்போதைய அநேகமான ஆன்டிவைரஸ்கள் நிகழ்-நேரப் பாதுகாப்பை வழங்குகின்றன. இதன் மூலம், தனியாக வைரஸ்களை ஸ்கேன் செய்யவேண்டியதில்லை. மாறாக, ஆன்டிவைரஸ் கணணி நினைவகம், மற்றும் ப்ரோக்ராம் ஒன்றை திறக்கும் போது, இணையத்தைப் பார்க்கும் போது, ஈமெயில் வாசிக்கும் போதும் தானாக பின்னணியில் கணனியில் நடைபெறும் மாற்றங்களை ஆய்வு செய்வதுடன், ஏதாவது முறையற்ற ஆபத்தான ப்ரோக்ராம் தொழிற்படுகிறதா என்றும் கண்காணிக்கும்.

மேலே கூறியது போல பல வழிகளில் ஆன்டிவைரஸ்கள் malwareகளிடம் இருந்து கணணிகளை பாதுகாக்க தொழிற்பட்டாலும், எல்லா ஆன்டிவைரஸ்களும் ஒரே மாதிரியாக தொழிற்படுவதில்லை. அதிலும் இலவச ஆன்டிவைரஸ்கள் பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்பாட்டைக்கொண்டிருக்கும். காரணம் பெரும்பாலான இலவச ஆன்டிவைரஸ் ப்ரோக்ராம்ககளை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் வணிகரீதியான ஆன்டிவைரஸ் ப்ரோக்ராம்களை விற்பதற்கு ஒரு முன்னோடியாகவே இந்த இலவச ஆன்டிவைரஸ் ப்ரோக்ராம்களை வழங்குகின்றன.

kaspersky-2017-beta
Kaspersky போன்ற ஆன்டிவைரஸ்கள், வைரஸ் பாதுகாப்பு மட்டும் இன்று, இணையத்தில் பாதுகாப்பாக உலாவுவதற்கான சில பல மேலதிக பாதுகாப்பு முறைகளையும் கொண்டுள்ளது.

எந்த ஆன்டிவைரஸ் ப்ரோக்ராம்களும் முழுமையான பாதுகாப்பை தந்துவிடமுடியாது. முன்னர் எல்லாம் ஒரு வைரஸ் உங்கள்; கணனிக்கு வந்துவிட்டால் உங்களுக்கே தெரிந்துவிடும். தேவையற்ற போப்அப் செய்திகள், கணணி வேகம் குறைதல் இப்படி பலவகையில் உங்களுக்கு வேறு பாடு தெரியலாம், இதற்குக் காரணம், அப்போது வைரஸ்களை உருவாக்கியவர்களின் நோக்கம் அப்படி இருந்தது. மேலும் அதனை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் புதியவர்கள். ஆனால் இன்று வைரஸ்கள் தொழில்ரீதியாக எழுதப்படுகின்றன. கணணி பாதுகாப்பு வல்லுனர்கள், ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இன்று வைரஸ்களை எழுதுகின்றனர். இவர்களை இப்படி மிகுந்த வினைத்திறனாக வைரஸ்களை உருவாக்கவைப்பது பின்னணியில் இருந்து தொழிற்படும் சக்திவாய்ந்த கும்பல், சிலவேளைகளில் அமெரிக்கா, ரஷ்சியா போன்ற நாடுகளின் அரசுகளே வைரஸ்களை உருவாக்குகின்றன – மற்றைய நாடுகளை உளவுபார்க்க.

இவர்கள் எழுதும் வைரஸ்கள் / malwareகள் மிகுந்த வினைத்திறனுடன் செயற்படுவதுடன், பெரும்பாலும் ஆன்டிவைரஸ்களால் கண்டறியாமலே சென்றுவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். காரணம், இப்படியான பெரும்பாலான வினைத்திறன் மிக்க வைரஸ்கள் கணணிகளில் zero-day தாக்குதல்களை நடாத்தி உள்நுழைகின்றன. Zero-day தாக்குதல் என்பது, குறித்த முறையில் தாக்கலாம் என்று இதுவரை தெரிந்திருக்காத முறையைப் பயன்படுத்தி தாக்குவதாகும். இப்படித் தாக்கலாம் என்று முன்கூட்டியே தெரிந்திருக்கவிடில், ஒருவராலும் இந்தத்தாக்குதகளை எதிர்பார்க்கமுடியாது. ஆகவே ஆன்டிவைரஸ்கள் கூட இந்த வகையான தாக்குதல்களை பெரும்பாலும் கண்டறிவதில்லை.

சரி, மீண்டும் கட்டுரையின் தலைப்பிற்கே வருவோம். ஆகவே இவ்வளவு விடையங்கள் இருக்கும் போது ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா என்று சிந்திக்கவேண்டும். ஆனால் ஒன்று ஆன்டிவைரஸ் வேண்டுமா என்று கேட்டால், நிச்சயம் வேண்டும். தெரிந்த வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு பெறவும், சாதாரண தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் நிச்சயம் ஆன்டிவைரஸ்கள் உதவும். ஆனால் அவற்றால் எல்லாத் தாக்குதல்களில் இருந்தும் எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

விண்டோஸ் இயங்குமுறையை பொறுத்தவரை, விண்டோஸ் 10 பதிப்பில் Windows Defender என்னும் ஆன்டிவைரஸ் வருகிறது, மேலும் விண்டோஸ் தன்னுடன் சிறந்த ஒரு firewall ஐயும் கொண்டுள்ளது. இலவசம் என்கிற முறையில் Windows Defender ஓகே என்கிற நிலைதான், ஆனால் இலவசமாக கிடைக்கும் Avira ஆன்டிவைரஸ் ஒரு சிறந்த மாற்று. ஆனாலும் இலவச ஆன்டிவைரஸ்கள் செயல்பாடுகளில் மட்டுப்பட்டு இருப்பதும் உண்மைதான். இன்றைய நிலைமையில், Kaspersky, ESET, Bitdefender போன்ற சிறந்த ஆன்டிவைரஸ்கள் கூட அவ்வளவு விலையில்லை. இலங்கையில் ஒரு வருட லைசன்ஸ் 1500.00 மட்டுமே, ஒரு வருடத்திற்கு என்று பார்க்கும் பாத்து அது ஒன்றும் அவ்வளவு பெரிய விலையில்லை. குறிப்பாக அது உங்களையும் உங்கள் கணனியையும் பாதுகாப்பதை என்னும் போது அந்த விலை பெரிதல்ல, மாறாக ஒவ்வொரு முறை வைரஸ் தாக்குதலின் போதும் கணணியையோ, லேப்டாப்பையோ நீங்கள் கொண்டுசென்று மீண்டும் மீண்டும் போர்மட் செய்யும் நிலையுடன் ஒப்பிடும் போது இது எவ்வளவோ மேல் அல்லவா?

2016-11-06_20-07-45
Malwarebytes இன் Anti-Malware சாப்ட்வேர். அநேக ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்உடன் சேர்ந்து தொழிற்படும் இது, rootkit, malware களிடம் இருந்து மேலதிக பாதுகாப்பை வழங்கும்.

மேலும் ஆன்டிவைரசுடன் இணைந்து மேலும் பல வகையான malwareகளை கண்டறியக்கூடிய Malwarebytes நிறுவனத்தின் Anti-Malware ஒரு நல்ல இலவச சாப்ட்வேர். இலவசமாகக் கிடைக்கும் இந்த Anti-Malware, நிகழ் நேரப் பாதுகாப்பை தருவதில்லை. ஆனால் கிழமைக்கு ஒரு முறை நீங்கள் சுயமாக ஸ்கேன் செய்துகொள்ளலாம். காசுக்கு வாங்ககூடிய Anti-Malware premium நிகழ்நேரப் பாதுகாப்பை வழங்கும். ஒரு நல்ல ஆன்டிவைரசுடன் இலவச Anti-Malware மட்டுமே போதும்.

அதிகளவாக தாக்குதல்கள் இன்று இணையம் மூலம் நடைபெறுவதால், இணையப் பாவனை இருக்கும் கணனிகள் நிச்சயம் ஏதாவது ஒரு பாதுகாப்பை கொண்டிருப்பது அவசியம்.

வடிவேலு சொல்வதைப் போல இன்று இங்கு பல நூதனத்திருட்டுக்கள் இடம்பெறுகின்றன. நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.