கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?

கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது உங்களுக்கு வைரஸ்களைப் பற்றி எந்தளவுக்கு தெளிவை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கே வெளிச்சம். வைரஸ்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

இந்த கட்டுரையில் நாம் கணணி வைரஸ்கள் என்றால் என்ன, மற்றும் அவற்றின் வகைகள், ஆண்டி-வைரஸ்கள் என்றால் என்ன அவை எப்படி வைரஸ்களில் இருந்து உங்கள் கணணிகளை பாதுகாக்கின்றன என்று பார்க்கலாம்.

கணணி வைரஸ்கள் – என்ன?

வைரஸ் என்ற சொல்லைக் கேட்டவுடன் நாம் உயிரியல் வைரஸ்களைப் போல இந்த கணணி வைரஸ்களை எண்ணிவிடக்கூடாது. கணணி வைரஸ்கள் ஒன்றும் இயற்கானவை அல்ல. இதை சொல்லவதற்கு காரணம் இதை தெரியாதவர்களும் இருக்கலாம் என்பதால் தான். சரி அப்படியென்றால் இந்த கணணி வைரஸ்கள் என்றால் என்ன?

கணணி வைரஸ்கள் என்பன நீங்கள் உங்கள் கணனியில் பயன்படுத்தும் வோர்ட், எக்ஸ்செல், கூகிள் குரோம் போன்ற சாப்ட்வேர்களைப் போல ஒரு சாப்ட்வேர் தான். அதுவும் ஒரு ப்ரோக்ராம் என்பதைத்தான் இப்படி சொன்னேன்.

ஆக கணணி வைரஸ்கள் என்பன, சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணனியின் செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணனியின் செயற்பாட்டையோ முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய கணணி ப்ரோக்ராம் ஆகும். இவற்றிக்கு இருக்கும் ஒரு முக்கிய பண்பு இவற்றால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணனிகளுக்கு பரவிச்செல்ல முடியும். இப்போது ஏன் இந்தப் ப்ரோக்ராம்களுக்கு வைரஸ் என்று பெயரிட்டார்கள் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

கணணி வைரஸ்கள் உருவாகுவதற்கு காரணமாக இருப்பன, கணனித் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஓட்டைகளே! ஆழமாக ஆராய வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயம் கணணி அறிவியல் (computer science) அடிப்படையில் இதனை பார்க்க வேண்டும். இங்கு என்னால் முடிந்தவரை இலகுவாக விளக்குகிறேன்.

எனக்கு கணனியின் மறுபக்கத்தை காட்டிய ஆசிரியர் அடிக்கடி சொல்லுவது, அவர் சொன்னதை தமிழுக்கு மொழிபெயர்த்தால் இப்படி வரும், “முறைமை (system) என்று ஒன்று இருக்கும் வரை அதில் ஓட்டை என்று ஒன்று இருந்துகொண்டே இருக்கும்”. அவர் சொல்லவந்தது முற்றுமுழுதாக பூரணப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்று ஒன்றும் கிடையாது அல்லது இதுவரை அப்படி ஒன்றை டிசைன் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்ற ஒன்றே. இப்படியான ஓட்டைகளே இந்த வைரஸ்கள் இயங்க வழிவகுக்கின்றன.

கணினி வைரஸ்கள் உருவகியதற்கும், இன்னும் உருவாகிக்கொண்டிருப்பதற்கும் பல்வேறு துணைக்காரணங்களை நாம் காணலாம். சுயலாபம் கருதி, அரசியல் காரணங்களுக்காக, போட்டி நிறுவனங்களை வீழ்த்த, மற்றும் ஆண்டி-வைரஸ்களை விற்பனை செய்ய(??!!) இப்படி பல காரணங்கள். சும்மா உள்ளலாயிக்கு வைரஸ் ப்ரோக்ராம்களை உருவாக்குபவர்களும் உண்டு!

சில தீவிரமான வைரஸ்கள், பல்வேறு பட்ட கணணி அறிவியல் ஆராய்ச்சியின் பக்கவிளைவாகவே உருவாகுகின்றன. இப்படியான ஆழமான ஆராய்சிகள், கணணி தொழில்நுட்பத்தில் உள்ள சில ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். இந்த ஓட்டைகளை கண்டதும் சில புண்ணியவான்களின் மண்டையில் லைட் எறிந்துவிடும். பிறகென்ன வெறும் வாயை மெல்வதற்கு அவல்பொரி மேல் தானே.

கணணி வைரஸ்களில் பலவகை உண்டு

நாம் பொதுவாக கணணி வைரஸ்கள் என்று பொதுப்படையாக அழைத்தாலும், வைரஸ்களில் பலவகை உண்டு. அவற்றில் செயல்முறைக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட பொதுவான வகைகளைப் பார்ப்போம்.

ஒன்றைமட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். வடிவேலு சொல்வதைப்போல “நமக்கு தேவையில்லாத இடைஞ்சல் செய்யும் அத்தனை ப்ரொக்ராம்களும் வைரஸ் தான்! ஆங்!!”

ஒவ்வொரு வகையாக பார்க்கலாம்.

வைரஸ்களின் வகைகள் - நன்றி விக்கிபீடியா
வைரஸ்களின் வகைகள் – நன்றி விக்கிபீடியா

மல்வேர் (Malware)

கணனியின் செயல்பாட்டை பாதிக்கும் அனைத்து ப்ரோக்ராம்களையும் மல்வேர் என்று அழைக்கலாம். இன்று கணனித் துறையில் பல்வேறு பட்ட தீங்கிழைக்கும் ப்ரோக்ராம்களை மல்வேர் என்று தான் அழைகின்றனர். கணினி வைரசும் மல்வேரில் ஒரு வகைதான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

மல்வேர்கள் ஒரு சாப்ட்வேர் போலவோ, அல்லது உங்களுக்கே தெரியாமல் மறைந்திருந்து இயங்கும் ஒரு ப்ரோக்ராம் ஆகவும் இருக்கலாம்.

வைரஸ்கள் (Virus)

இவை பொதுவாக கணனியில் உள்ள வேறு எதாவது ப்ரோக்ராம்கள் அல்லது கோப்புகளில் ஒட்டிக்கொள்ளும். தனித்து இயங்காத இந்த வைரஸ் ப்ரோக்ராம்கள், இவை ஒட்டிக்கொண்டுள்ள ப்ரோக்ராம்கள் அல்லது கோப்புக்கள் திறக்கப்படும்போது செயல்படத் தொடங்கும்.

இப்படி செயல்படும் போது இவை மேலும் வேறு ப்ரோக்ராம்கள், கோப்புகளில் தன்னையும் இணைத்துக்கொள்ளும், இப்படி வைரஸ் இணைந்துகொண்ட ப்ரோக்ராம்கள், கோப்புக்களை இன்னுமொரு கணனிக்கு எடுத்துச் செல்லும்போது அந்தக் கணணியிலும் உள்ள கோப்புக்களில் மீண்டும் மீண்டும் பதிந்துகொள்ளும்.

இவை கணனிக்கு வந்தபின், அதில் இருக்கும் கோப்புகளை அழிப்பது, செயல்முறைமையின் சில பகுதிகளை செயல்படாமல் தடுப்பது. ஹர்ட்டிஸ்க்களை செயலிழக்க, கணணிகளை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது என்று பல தலையிடிகளை உருவாகலாம்.

இப்படித்தான் நண்பர்களின் கணனியில் உள்ள வைரஸ்கள் பிளாஷ் டிரைவ் மூலமும் ஈமெயில் அட்டச்மெண்ட் மூலமும் உங்கள் கணனிக்கு வந்துசேருகின்றன.

ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan Horse)

இவ்வகையான ப்ரோக்ராம்கள், ஒழிந்துகொண்டு வேலை செய்வன. அதாவது உணமையிலேயே பயனுள்ள எதாவது சாப்ட்வேர்களில் ஒழிந்துகொண்டு, உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணனியில் இருக்கும் தகவல்களை களவெடுத்து அவற்றை தேவையான இடத்திற்கு அனுப்பிவிடும். அல்லது தகவல்களை அழிக்கலாம், உங்கள் கணணியை செயலிழக்கவும் செய்யலாம்.

ஆனால் பெரும்பாலும் தகவல்களை பயனருக்கு தெரியாமல் களவாடுவதற்கே இந்த ட்ரோஜன் ஹோர்ஸ்கள் பயன்படுகின்றன. அதேபோல இவை உங்கள் கணணியை ஒரு ஹேக்கர், தொலைநிலை அணுகல் மூலம் (Remote access) கட்டுப்படுத்தக் கூடியதாகவும் மாற்றிவிடுகின்றது.

இவை நம்பகமான, பயனுள்ள சாப்ட்வேர் போல நடிப்பதால், பெரும்பாலான பயனர்கள், குறிப்பாக இணையப் பயனர்கள் ஏமாந்து இதனை தங்கள் கணனியில் நிறுவிவிடுகின்றனர். இவை நல்லபிள்ளைகளைப் போல நடிப்பதால் இவற்றை கண்டறிந்து நிறுவல் நீக்கம் (uninstall) செய்வது கடினம்.

இவ்வளவு வேலைகளை செய்யும் இந்த ட்ரோஜான் ஹோர்ஸ் இல் உள்ள ஒரே ஒரு நன்மை. பொதுவாக இவை ஒரு கணனியில் இருந்து இன்னுமொரு கணனிக்கு சாதாரண வைரஸ்கள் போல பரவுவதில்லை. இப்படி பரவக்கூடாது என்று ஒரு சட்டமும் இல்லை. அப்படி பரவும் சில டோர்ஜன் ஹோர்ஸ்களும் உண்டு.

ரூட்கிட் (Rootkit)

இவையும் மறைந்திருந்து செயல்படும் ஒருவகையான ப்ரோக்ராம்கள், ஆனால் ட்ரோஜான் ஹோஸ் போல நன்மை செய்வதுபோல் உள்நுளைவதில்லை. அதுமட்டுமளது இவற்றின் அமைப்பே மிகவும் மறைமுகமானது என்பதால், சாதாரண தேடுதல் நடவடிக்கை மூலம் ரூட்கிட்டை கண்டறிய முடிவதில்லை. சிலவேளைகளில், இல்லை, இல்லை பெரும்பாலும் ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்களால் கூட ரூட்கிட்டை கண்டறிய முடிவதில்லை.

இவை கணனியில் நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் அந்தக்கணனியின் முழுக்கட்டுப்பாட்டையும் இந்த ரூட்கிட்கள் தன்வசப்படுத்திவிடும். இவை பெரும்பாலும் கணனியில் உள்ள தகவல்களை அதாவது பாஸ்வோர்ட், வங்கி அட்டை இலக்கங்கள், மற்றும் வேறு தகவல்களை, வேறு எந்த முறையிலும் கண்டரியாவண்ணம் தத்துருபமாக திருடக்கூடியன. இவ்வாறு இவை திருடுவது கணனியின் அடிப்படைக்கட்டமைப்பில் நடைபெறுவதால், ஆண்டிவைரஸ் ப்ரோக்ராம்களால் இந்த திருட்டையும் கண்டறிய முடிவதில்லை.

அதேபோல ஒரு இயங்கு முறைமையின் மிக அடிப்படித்தளத்தில் இவை இயங்குவதால், பெரும்பாலும் கண்டறிவதே கடினம் என்னும்போது அதனை அழிப்பது என்பது முடியதகாரியமாகவே இருக்கும். சில விசேட வகையான ரூட்கிட்கள் இயங்கு முறைமையின் கேர்னல் அமைப்பில் இயங்குவதால், இப்படியான ரூட்கிட்களை அளிக்க முதலிருந்து மீண்டும் இயங்கு முறைமையை நிறுவவேண்டிய தேவை ஏற்படலாம்.

ரூட்கிட்களை கண்டறிவதற்கு என்றே சில விசேட வகையான ப்ரோக்ராம்களை சில ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் தருகின்றன.

வோர்ம் (Worm)

இவை தனித்து இயங்கக்கூடியதும், தன்னைத் தானே பிரதிசெய்து, வலையமைப்பில் இணைந்துள்ள மற்றைய கணணிகளிலும் நிறுவக்கூடியது. இவை பெரும்பாலும் கணனியின் வலையமைப்பில் உள்ள பாதுகாப்புச் செயன்முறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியே தன்னைத் தானே பிரதி செய்து பரவுகின்றன.

இந்த வோர்ம் ப்ரோக்ராம்கள் பெரும்பாலும் கணனியின் வலையமைப்பில் பேரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. சில வோர்ம் ப்ரோக்ராம்கள் கணனியின் செயல்பாட்டை பாதிப்பதாக இருந்தாலும், பெரும்பாலான வோர்ம்கள், வைரசைப் போல கணனியில் உள்ள கோப்புகளையும் ப்ரோக்ராம்களையும் பாதிப்பதில்லை, மாறாக இவை கணனிகள் இணைந்துள்ள வலயமைப்பயே குறிவைகின்றன.

வலையமைப்பைத் தாக்குவதன் மூலம், வலையமைப்பை செயலிழக்க வைப்பதோ, அல்லது வலையமைப்பின் மூலம் இடம்பெறும் தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்பது மற்றும் மாற்றியமைப்பது போன்ற வேலைகளிலும் இது பயன்படும்.

ஸ்பைவேர் (Spyware)

பேர் சொல்ல்வதுபோல உங்கள் கணனியில் இருந்து தகவல்களை திருடுவதே இந்த ப்ரோக்ராம்களின் ஒரே இலக்கு. உங்கள் பாஸ்வோர்ட், உங்கள் வங்கித்தகவல்கள் போன்றவற்றையும் இவை திருடுகின்றன. இவை இப்படியான தகவல்களை மட்டும் திருடுவதில்லை.

நீகள் டைப்செய்வது, பார்க்கும் இணையதளங்களின் முகவரிகள், உங்கள் புகைப்படங்கள் இப்படி நீங்கள் கணனியில் செய்யும் எல்லா வேலைகளையும் இவை திருடக்கூடியன.

சில ப்ரோக்ராம்கள், லேப்டாப் கேமரா, வெப்காம் போன்றவற்றை சுயாதினமாக, உங்களுக்கு தெரியாமல் இயக்கி, அந்த வீடியோக்களையும் திருடுகின்றன! அகவே உசாராக இருப்பது முக்கியம்.

பெரும்பாலும் இவை இணையம் மூலமே உங்கள் கணனிக்கு வருகின்றது. நீங்கள் டவுன்லோட் செய்யும் சாப்ட்வேரில் உள்ள இணைய டூல்பார்கள், மிகச் சிறந்த ஸ்பைவேர்கள்.

ட்ரோஜன் ஹோர்ஸ் உம் ஒருவகையான ஸ்பைவேர் தான்.

ஸ்பைவேர்களை அழிப்பதற்கென்றே ஆண்டிஸ்பைவேர்கள் உண்டு. ஆனால் இப்போது வரும் ஆண்டிவைரஸ்கள் இந்த ஸ்பைவேர்களை கண்டு அழிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன.

இன்னும் பல

மேலே கூறிய வகையான வைரஸ்களை விடவும் மேலும் பலவகையான பயனருக்கும், கணனிக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய ப்ரோக்ராம்கள் உண்டு.

கீலொக்கர், பேக்டோர், அட்வேர், ஸ்கேர்வேர் இப்படி பல பல.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு எல்லையில் வேலை செய்கிறது. இவற்றில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்று அடுத்ததாக பார்க்கலாம்.

ஆண்டிவைரஸ்கள் – தீர்வாகுமா?

பொதுவாக ஆண்டிவைரஸ்கள் என்றவுடன் நாம் என்ன நினைப்போம்? நிச்சயமாக என்ன நினைப்போமோ அதுவல்ல இது! எனக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினை நண்பர்கள் அல்லது என் வாடிக்கையாளர்கள் எனக்கு போன் செய்து, “என்ன தம்பி ஆண்டிவைரஸ் போட்டிருந்தும் வைரஸ் வந்துவிட்டதே, கம்ப்யூட்டர் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகிறது, சேவ் செய்த கோப்பை காணவில்லை, டெஸ்க்டாப் படத்தை காணவில்லை” இப்படி பல பல.

ஆண்டிவைரஸ்களை அவர்களுக்கு நிறுவிக்கொடுக்கும் போதும் நான் சொல்லிக் கொடுத்துவிட்டுதான் வருகிறேன், ஆனால் ஏனோ பெரும்பாலானவர்களுக்கு புரிவதில்லை.

ஆண்டிவைரஸ்கள் என்பன வக்சீன் போல அல்ல. ஒரு தடவை நிறுவிவிட்டால் அதன்பின் மீண்டும் எந்தவொரு வைரசும் வராமல் இருப்பதற்கு.  சற்று விளக்கமாக ஆண்டிவைரஸ்கள் எவ்வாறு வேலைசெய்கின்றன என்று பாப்போம். அது உங்களுக்கு ஏன் ஆண்டிவைரஸ்களால் எல்லா வைரஸ்களையும் பிடிக்க முடிவதில்லை என்று விளங்க உதவும்.

வைரஸ்கள் எல்லாமே ப்ரோக்ராம்கள் தானே, ஆனால் ஒவ்வொன்றும் தொழில்படும் முறை வித்தியாசப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் ஒரே முறையை பயன்படுத்தி தொழிற்படலாம். இந்த முறைகளை அந்த அந்த வைரஸ்களின் ஒப்பம்(signature) என்று வேண்டுமென்றால் கூறலாம்.

ஆண்டிவைரஸ்களுக்கு இப்படி பல்வேறு வகையான ஒப்பங்களை இனம்கானக் கூடியதாக இருக்கும். உங்கள் கணனியில் உள்ள ஒவ்வொரு ப்ரொக்ராம்களும் இயங்கத்தொடங்கும் போது இந்த ஆண்டிவைரஸ்கள் அந்த ப்ரோக்ராம்களை தன்னிடம் உள்ள ஒப்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும். இப்படி ஒப்பிடும் போடு இயங்கப்போகும் ப்ரோக்ராமின் ஒப்பம் ஆண்டிவைரஸில் இருக்கும் ஒப்பத்தோடு பொருந்தினால் உங்கள் ஆண்டிவைரஸ், உங்களுக்கு “ஒரு வைரஸ்” அகப்பட்டுவிட்டதாக தகவல் தரும்.

இப்போதுள்ள சில ஆண்டிவைரஸ்கள், இப்படி ஒப்பங்களை மட்டும் சோதிக்காது, கூடவே சில பொதுவான கெட்டபண்புகளையும் சோதிக்கும். அதாவது திருடன் என்றால் திருடுவான், திருட்டு முழி முழிப்பான், போலிசுக்கு மாமூல் கொடுப்பன் என்பதுபோல(??!!) ப்ரோக்ராம்களின் நடத்தைகளையும் இந்த ஆண்டிவைரஸ்கள் சோதிக்கின்றன.

பெரும்பாலான வைரஸ்கள் இந்த வழியில் மாட்டுப்பட்டுவிடும். ஆனால் புதிதாக ஒரு முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வைரஸ் தொழிற்பட்டால், அதனது தொழில்படும் முறையின் ஒப்பமோ, அல்லது அதன் நடத்தயையோ பற்றிய அறிவற்ற ஆண்டிவைரஸ்களால் இந்த ப்ரோக்ராமை வைரஸ் என்று முத்திரை குத்தி அழிக்கமுடிவதில்லை.

இதனால் தான் ஆண்டிவைரஸ்கள் தினம் தினம், ஏன்? சிலவேளைகளில் மணிக்கொருமுறை கூட தன் ஒப்பங்களை (signatures) புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி புதுப்பிப்பதால் புதிதாக களமிறங்கும் வைரஸ்களை அவற்றால் பிடிக்க முடிகிறது. இருந்தும் சில வைரஸ்கள், இந்த ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் அந்த வைரசின் ஒப்பத்தை கண்டுபிடித்து அதற்கான ஒப்ப முறைமையை தரவேற்ற முதலே, மிகப்பெரிய பதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

அடுத்தது இணையத்தில் கணணி இணைக்கப்படிருந்தாலே, அக்கணணியில் இருக்கும் ஆண்டிவைரஸ் ப்ரோக்ராமால் புதிய வைரஸ் ஒப்பங்களை தரவிறக்கி சோதிக்க முடியும். ஆக இணையத்தில் அடிக்கடி மேம்படுத்தப்படாத ஆண்டிவைரஸ்கள் பெரும்பாலும் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு பாதுகாப்ப்பை வழங்குவதில்லை.

அதுபோக, சிலவகையான மல்வேர் மற்றும் ரூட்கிட்களை ஆண்டிவைரஸ்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. ஆக அவற்றை இந்த ஆண்டிவைரஸ்களால் கட்டுப் படுத்த முடிவதில்லை.

இணையத்தை பயன்படுத்துவதில் கவனம் தேவை

முன்னொரு காலத்தில் பலோப்பி, சீடீ போன்றவற்றில் பரவிய வைரஸ்கள் என்று பெரும்பாலும் இணையம் மூலமே பரவுகின்றன. சில இணையத்தளங்களை நீங்கள் பார்வையிடும் போதே அவை உங்கள் கணணியில் வைரஸ்களை நிறுவி விடுகின்றன.

புதிய இனைய உலாவிகள், அதாவது புதிய கூகிள்குரோம், பயர்பாக்ஸ் போன்றன இதை தடுக்க முயன்றாலும், அடோபி பிளாஷ், மற்றும் ஜாவா போன்ற சொருகிகளில் (plugins) உள்ள குறைபாடுகள் காரணமாக வைரஸ்கள் வருவதை தடுக்க முடிவதில்லை.

மேலும் நீங்கள் தரவிறக்கும் ப்ரோக்ராம்கள், பாடல்கள், கோப்புகள் என்பனவும் வைரஸ்களை கொண்டுவரலாம். கூகிள் என்பது வெறும் தேடல் பொறி மட்டுமே, அதில் வருவது எல்லாமே நல்லதும் உண்மையானதும் என்ற கருத்தை உடனே கைவிடுங்கள். நம்பிக்கயனவர்களிடம் இருந்து மட்டுமே கோப்புக்களை வாங்குங்கள் அல்லது நம்பிக்கையான இணையத்தலத்தில் இருந்து மட்டுமே தரவிறக்குங்கள்.

பெரும்பாலும் காசுகொடுத்து வாங்க வேண்டிய ப்ரோக்ராம்களை இலவசமாக தரவிரக்கியே பெரும்பாலும் நம்மவர் வைரஸ்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.

அதேபோல ஆன்லைன் கேம்ஸ் விளாயாடும் இணையத்தளங்கள், பாலியல் சார்ந்த தளங்களும் வைரஸ்களை கணனிக்கு பரப்புவதில் முன்னணியில் இருக்கின்றன.

பார்த்து நடக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. ஆண்டிவைரஸ்களால் ஒரு எல்லை மட்டுமே பாதுகாக்க முடியும். ஆண்டிவைரசை நிறுவியாச்சு என்று நீங்கள் இணையத்தில் கவனமின்றி உலாவந்தால், பின்விளைவுகளை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதே இந்த தொழில்நுட்ப உலகின் நிதர்சன உண்மை.

எனது ஆசிரியர் சொன்னது மீண்டும் எனக்கு ஞாபகம் வருகிறது.

“எங்கெங்கு முறைமைகள் உண்டோ, அங்கே நிச்சயம் ஓட்டைகளும் இருக்கும்”, சிலர் அந்த ஓட்டைகளை பாதகமான விளைவுகளுக்கும் பயன்படுத்துவர்.