ஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை

நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
புள்ளிமானாய் உன்னையே வட்டமிட்டு
உனக்குள்  என்னையே புதைத்துக்கொள்வேன்
உன் வாழ்க்கையே என் உயிர் கண்மணியே

அழகான தென்றல் மெல்லிதாக வீச, அது ஒரு அழகிய காலைப் பொழுதாக விரிந்தது. ஆதவனுக்கு அதிகாலையிலேயே நித்திரையில் இருந்து எழும்பிவிட வேண்டும் என்று ஆசைகள் அடுக்கடுக்காக இருந்தாலும், ஏனோ அவனால் ஐந்து முப்பதுக்கு முன் எழுந்திருக்கவே முடிவதில்லை. இரவில் மனத்துடன் நடக்கும் போராட்டங்களும் சபதங்களும், விடியல் காலை குளிரின் அரவணைப்பில் மறந்தே போகும். நாளை எழும்பிவிடலாம்!

காலை வேளையில் மரங்களினூடே நடப்பது அவனுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இயற்கைதான் எவ்வளவு அழகாக தன் இருப்பை இந்த பிரபஞ்சத்தில் நிலைத்துவிட்டது. அன்பின் மிகுதியில் காதலனும் காதலியும் பின்னிப் பினைவதைப்போல என்று அவனுக்குள்ளே நினைத்துக் கொள்வான். இன்னும் நடக்கலாம், காலை வேளையின் பனிபடர்ந்த அந்தப் பொழுதைப் போல ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்களில் வேறு எப்போதும் இந்த இங்கிதம் இருந்ததில்லை. பனிபடர்ந்த அந்தப் பொழுதும், அது மனதுக்குள் ஏற்படுத்தும் அனுபவங்களும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று ஆதவனின் கருத்து.

அந்த பச்சை நிறம், அழகின் உச்சம், மரங்கள், இலைகள், இலைகளினூடே வழியும் கரைந்த பனித்துளிகள், காதலியின் கண்களைக் கண்ட காதலனின் மனம்போல உருகி வழிகிறதே. ஒருவேளை இலைகளும், பனித்துளிகளும் அளவில்லா அன்பின் எல்லையில் காதல் செய்கிறதோ? இயற்கையின் அதிசயத்தில் ஒன்று என்று நினைத்துக்கொள்வான் அவன். தினம் தினம் புதுப்பிக்கப்படும் காதல்கள், இலையை விட்டு பிரிந்துபோகும் போது அந்தப் பனித்துளிகள் எவ்வளவு வேதனைப்படுமோ? இல்லை, மீண்டும் நாளை வந்துவிடுவேன், உன்னை மீண்டும் முத்தமிடுவேன் என்று இலைகளுக்கு சொல்லிவிட்டு செல்லுமோ?

அழகிய காதல் கதையிலே கரடிபோல அல்லவா வந்துவிட்டான் அந்த ஆதவன். அந்த ஆதவனுக்கும் நம் பெயர்தானே! அவனுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று இலைகளையும், அதிலிருந்து கரைந்தொழுகும் பனித்துளிகளையும் பார்த்து நினைத்துக்கொள்வான் இவன். ஆனால்.. ஆனால்.. அந்த ஆதவன் வந்திருக்காவிட்டால் இந்த பனித்துளிகள் கரைந்திருக்குமா? கரைந்தால் தானே பனித்துளிகள் தன் காதலியை அளவற்ற்ற காதலுடன் தடவிக்கொள்ள முடியும். அந்த ஆதவன் இந்தக் காதலுக்கு நன்மைதான் செய்தானோ? இயற்கையின் விளையாட்டை பார்த்தாயா? எத்தனை எத்தனை விடயங்களை, அதுவும் விடை தெரியா விடயங்களை தனக்குள்ளே ஒழித்துவைத்து வேடிக்கை காட்டுகிறது.

ஆதவனின் சிந்தனைகள் இந்த மெல்லிய குளிருடன் கூடிய தென்றல் கலந்த காலைப் பொழுதில் எல்லையற்று பறந்து செல்லும். பொதுவாகவே இயற்கைதான் அவனது நினைவுகள் முழுதும். இலைகளையும் பனித்துளிகளையும் பார்த்தான், இப்போது மலர்கள். அந்த அழகான சிவந்த செம்பருத்திப்பூக்கள். ஏன் இவ்வளவு அழகு? அழகிருந்தால் ஆபத்து இருக்கும் என்பார்களே, ஆனால் இந்த அழகிய மலரில் அப்படி என்ன ஆபத்து இருந்துவிட முடியும். விவஸ்தையற்ற மனிதர்களின் வார்த்தைகளை நினைத்து தனக்குளே நொந்துகொள்வான். அழகிருந்தால் ஆபத்து இருக்குமாம்! எல்லாம் வெறும் பேச்சு!

ஆனாலும் அவன் மனதில் இந்தப் பூக்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கின்றன என்று சந்தேகம் ஒவ்வொரு நாளும் வலுப்பெற்றுக்கொண்டே வரும். இன்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான், இந்தப் பூக்களும் நிச்சயமாக காதலிக்கின்றன! தன் கதலனுக்காகவே தன்னை இவ்வளவு அழகுபடுத்திக் கொண்டுள்ளது இந்த மலர். காலையில் காதலன் வருவான் தானே, தேனெடுக்க! இயற்கையின் சூக்குமத்தை கண்டுபிடித்துவிட்ட குதுகலம் ஆதவன் மனதினுள் நிரம்பியது. ஆம் தேனிக்கள் தான் பூக்களின் காதலன்கள். ஏன், இலைகள் பனித்துளிகளை காதலிக்கும் போது, பூக்கள் தேனிக்களை காதலிக்கக் கூடாதா?

இயற்க்கை எதற்கும் முட்டுக்கட்டை போட்டதில்லையே! அது பூக்கள் தேனிக்களை காதலிப்பதற்கு தடை ஒன்றும் சொல்லாது. மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டான் ஆதவன். இயற்கையை நினைக்க நினைக்க அவனுக்குள் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி உருவெடுத்தது. சிந்தித்தவாறே நீண்ட தூரம் அந்த இயற்கையால் நிரம்பிய வெளியில் நடந்துவிட்டான். உண்மையிலேயே நீண்ட தூரம் தான்.

இப்போது எவ்வளவு நேரம் போயிருக்கும்? நீண்ட தூரம் நடந்துவிட்டேன், ஆனால் இன்னும் காலைவேளையில் பனி பொழிகிறதே, அதே மெல்லிய தென்றல், தன் அகத்தையே ஊடுருவி செல்வதுபோல அவனுக்கு இருந்தது. எவ்வளவு அழகு. நாளை நிச்சயம் சூரியன் உதிப்பதற்கு முதல் எழுந்திருக்க வேண்டும், எழுந்து சூரியனது வருகை இந்த இயற்கையில், இந்த இலைகளில், மலர்களில் எப்படியெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பார்க்கவேண்டும். ஆதவன் சபதமெடுத்துவிட்டான். நாளைய அதிகாலைக் குளிர்தான் இந்த சபதத்தின் வீரியத்தை பரீட்சிக்க வேண்டும்! அதையும் தனக்குள்ளே நினைத்துக்கொண்டான். அவன் புத்திசாலிதான். தன்னை தனக்குள்ளே எடை போட்டுக்கொள்கிறானே.

சரி, இன்னும் கொஞ்சத்தூரம் நடந்துவிடுவோம், வேண்டாம், எதோ செய்யவேண்டும் என்று அவனுக்குள் நினைவு வருகிறது, மீண்டும் வீடு திரும்பிவிடலாம். அவன் நிற்கும் இடத்தில் ஒரு மரம், அழகான மல்லிகை மரம், பெரிதாக வளர்ந்திருக்கிறது. நிறைய நிறைய பூக்கள். எவ்வளவு அழகான வெள்ளை வெள்ளை பூக்கள். பச்சை இலைகளும், வெள்ளை பூக்களும் என அந்த மரமே மிக அழகாக இருக்கிறதே. ஸ்வேதா என தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான்.

சரியாக இந்த மரம் வரும்போது ஸ்வேதாவின் நினைவுகள் வந்துவிடுகின்றன. எவ்வளவு அழகு, அவள் சிரித்தால் கண்களும் சேர்ந்தே சிரிக்குமே! அவனது மனத்தில் இயற்கையின் இங்கித்ததைப் பற்றிய நினைப்புக்கள் மெல்ல மெல்ல குறைந்து ஸ்வேதாவே நிறைந்துகொண்டிருந்தாள்.

ஸ்வேதாவை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டேனே, முட்டாள். உடனேயே போய் அவளைக் கட்டிக்கொள்ளவேண்டும் போல இருந்தது அவனுக்கு. அந்த இலைகளுக்கும், பனித்துளிகளுக்கும் உள்ள காதலைவிட, அந்த பூக்களுக்கும், தேனிக்களுக்கும் உள்ள காதலைவிட, அவனுக்கு அவள்மேல் அவ்வளவு காதல் என்று நினைத்துக்கொண்டான். ஆம், அதிகம் காதல்தான், வீட்டில் தான் இருப்பாள், போய் அவளிடமே சொல்லவேண்டும், அவளை எவ்வளவு காதலிக்கிறேன் என்று! நினைத்தவாறே வேகமாக நடக்கத்தொடங்கினான்.

திடீரென இரண்டு சொட்டு மழைத்துளிகள் அவன் கைகளில் விழுகிறது. ஆ, மழை வந்துவிடுமோ? வானத்தை அண்ணார்ந்து பார்க்கிறான், வானமும் இருட்டுகிறது. வேகமாக நடக்கிறான். நடக்க நடக்க இருளின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லுகிறது. என்ன இது அதிசயம்? என்னதான் காரிருள் மழை என்றாலும், இப்படியா இருட்டும்? முற்றும் இருள், கறுப்பு.

“ஸ்வேதா, ஐ ஆம் வெரி சாரி, ஆதவன் அந்த மல்லிகை மரத்தை கடந்து நடந்தால் தான் அவரது மூளையின் அடுத்தகட்ட தொகுதி செயல்படத்தொடங்கும். எங்களால் ஒரு கட்டம் வரையே அவரது மூளையை தூண்டி உருவகப்படுத்த முடியும், இத்தோடு இருபத்தி மூன்று முறையாக நாம் இப்படி மூளையை தூண்டிவிட்டோம், இருந்தும் இன்னுமொரு முறை ட்ரை பண்ணிப் பார்ப்போம். ப்ளீஸ் நீங்க கொஞ்சம் திடமா இருந்தாதான் அவரை நாம் மீட்க முடியும். ஆதவன் நிச்சயம் உங்களிடம் மீண்டும் வருவார் ஸ்வேதா”

கட்டிலில் பேச்சு மூச்சு இல்லாமல், தலையில் ஏதேதோ கருவிகளில் இணைக்ப்படிருந்த ஆதவனின் கரங்களை தன் கன்னங்களோடு அனைத்தவாறே கண்களில் நீரோடு இருந்த ஸ்வேதா, டாக்டர் டேவிட் சொல்லிய எதையும் காதில் வாங்கவில்லை, அவள் நினைப்பெல்லாம் அவளின் உயிரோடு கலந்துவிட்ட ஆதவனிடமே. அவளைப் பற்றி எத்தனை எத்தனை கவிதைகள் எழுதினான். அவள் நினைத்துக்கொண்டாள் அதில் ஒன்றை அவனுக்காக.

நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
புள்ளிமானாய் உன்னையே வட்டமிட்டு
உனக்குள் என்னையே புதைத்துக்கொள்வேன்
உன் வாழ்க்கையே என் உயிர் கண்மணியே

அழகான தென்றல் மெல்லிதாக வீச, அது ஒரு அழகிய காலைப் பொழுதாக விரிந்தது. ஆ! பொழுது புலப்பட முன்னமே நான் எழுந்துவிட்டேன். இன்று கதகதப்பாக இருக்கிறதே. அவ்வளவு குளிரில்லை என நினைத்துக்கொண்டான். காலையில் மரங்களினூடே நடப்பது அவனுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் எல்லாவற்றையும் விட அவனுக்கு இந்த உலகில் மிக மிகப் பிடித்தவிடயம் ஒன்று உண்டு. ஆம் ஸ்வேதா. இன்று என்ன ஆனாலும் சரி, இந்த மரங்களினூடே நடந்து அவளது வீட்டுக்கு சென்று அவளிடம் தன் காதலை சொல்லிவிடவேண்டும்! போகும் போது அந்த அடர்ந்த மல்லிகை மரத்தில் இருந்து சில பூக்களையும் பறித்துக் கொண்டு செல்லலாம், அவளுக்கு மல்லிகை என்றால் உயிர். ஆனாலும் இன்றைய நாளின் கதகதப்பு சற்று வித்தியாசமாக தான் இருந்தது. குளிரில்லை ஆனால் அழகான தென்றல் காற்று, சுகமாக வீச, ஆகா! நீபோகும் இடமெல்லாம் நானும் வருவேன் என்று பாடியவாறே மல்லிகை மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் ஆதவன்.

ஆதவனது தலையில் பொருத்தியிருந்த கருவியில் இருந்து ஒரு புது பச்சை ஒளியுடன் கூடிய பீப்.. பீப்.. என்று சத்தம் வர,

“மிஸ்ஸஸ் ஆதவன்! தேர் இஸ் ஆல்வேஸ் ஹோப்” என்றார் டாக்டர் டேவிட்.