பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

சுப்பர் நிலவு என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையைப் போலவே பூமியைச் சுற்றிவரும் நிலவின் பாதையும் நீள்வட்டமானதே. இப்படியாக பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, பூமிக்கு மிக அருகில் வரும் ஒரு சந்தர்ப்பமும், அதேபோல பூமியில் இருந்து தொலைவிற்கு செல்லக்கூடிய சந்தப்பமும் நிலவுக்கு ஏற்படும். பூமிக்கு மிக அருகில் வரும் போது வழமைக்கு மாறாக நிலவின் அளவு பெரிதாகவும் அதன் காரணமாக பிரகாசமாகவும் இருக்கும். இதுவே சுப்பர் நிலவு / பெருமுழுநிலவு (Supermoon) என அழைக்கப்படுகிறது. அதேபோல பூமியை விட்டு தொலைவில் இருக்கும் போது வழமைக்கு மாறாக சிறிதாக இருக்கும் நிலவு மைக்ரோ நிலவு எனப்படுகிறது.

supermicromoon_paduraru_960
2012 இல் வந்த சுப்பர் நிலவும், மைக்ரோ நிலவும் ஒப்பீட்டுக்காக காட்டப்பட்டுள்ளது. நன்றி: Catalin Paduraru

குறிப்பாக சில தகவல்களைப் பார்த்தால், நிலவின் நீள்வட்ட சுற்றுப் பாதையின் காரணமாக பூமிக்கு மிக அருகில் வரும் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் 363,400 கிமீ ஆகும், அதேபோல பூமிக்குத் தொலைவில் இருக்கும் போது பூமிக்கும் நிலவுக்குமான இடைவெளி 405,500 கிமீ ஆகும். இந்தக் குறைந்தளவு தூரத்தில் நிலவு இருக்கும் போது சுப்பர் நிலவாக அது இருக்கும். முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. நிலவின் நீள்வட்டப் பாதை ஒவ்வொரு முறையும் இந்தளவு தூரத்தில் இருக்கும் என்று கூற முடியாது, அதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசைபோல சூரியனது ஈர்புவிசையும் மேலும் வியாழன் போன்ற பெரிய கோள்களின் ஈர்ப்பு விசையும் நிலவின் சுற்றுப் பாதையில் சற்றே செல்வாக்கு செலுத்துகின்றன. ஆகவே ஒரு குறித்த சுற்றுப் பாதையில் நிலவு பூமிக்கு அருகில் வரும் சந்தர்பத்தை சுப்பர் நிலவு என்று அழைக்கிறோம், இதனைக் கூறக் காரணம் என்னவென்றால், எல்லா சுப்பர் நிலவும் ஒரே தொலைவில் ஒரே மாதிரி இருப்பதில்லை. அந்தந்த தடவையில் சுற்றுப் பாதையில் எவ்வளவு மிக அருகில் வர முடியுமோ அப்படி வரும் போதே அது சுப்பர் நிலவாகிவிடும்!

supermoon2

உங்களுக்குத் தெரியுமா? சுப்பர் நிலவு அதாவது Supermoon என்னும் சொல்லை 1979 இல் முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியது ஒரு ஜோதிடராம் (Richard Nolle), அந்தச் சொல்லே நன்றாக இருப்பதால் பின்னர் நாசாவும் அந்தச் சொல்லையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.

சரி ஏன் இப்போது சுப்பர் நிலவைப் பற்றிக் கதைக்கிறோம் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்தால், அதற்குக் காரணம் இந்த நவம்பர் 14 இல் ஒரு சுப்பர் நிலவு வருகிறது. அதிலும் 68 வருடங்களுக்கு பிறகு நிலவு மிக மிக அருகில் வரும் சந்தர்பம் இதுவாகும். அப்படியென்றால் 68 வருடங்களில் வந்த சுப்பர் நிலவை விட இது பெரிதாக இருக்கும். இதன் போது பூமிக்கு வெறும் 356,509 கிமீ தொலைவில் நிலவு இருக்கும்! கடைசியாக இவ்வளவு அருகில் நிலவு வந்தது ஜனவரி 26, 1948 இல். இனி அடுத்ததாக இப்படியொரு மிக அண்மிய நிகழ்வு நவம்பர் 25, 2034 இல் தான் இடம்பெறும். ஆகவே இது ஒரு அருமையான சந்தப்பம் அல்லவா?

சுப்பர் நிலவை அவதானிப்பது என்பது விண்ணில் நீங்கள் அவதானிக்கக்கூடிய மிக எளிமையான விடயம் – இன்றிரவு வானைப் பாருங்கள், நிலவைத் தேடுங்கள் உங்களுக்கு சுப்பர் நிலவு தெரியலாம். வழமைக்கு மாறாக நிலவு 14% பெரிதாகவும் 30% பிரகாசமாகவும் தெரியும். ஆனாலும் சிலருக்கு அதாவது போர்துவாக அடிக்கடி நிலவைப் பார்க்காதவர்களுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியாது. அவர்களுக்கு வழமையான நிலவு எந்தளவு இருக்கும் என்று தெரிந்திருக்காதல்லவா? எப்படியோ ஒருமுறை இன்று இரவு பார்த்துவிடுங்கள். அடுத்தமுறை பார்க்க 2034 வரை காத்திருக்கவேண்டும்.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள், நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும் : https://facebook.com/parimaanam