2015 இல் ஒரு விண்மீன் தனது வாழ்வுக் காலத்தை முடித்துக் கொண்டு உக்கிரமான சுப்பர்நோவாவாக வெடித்துச் சிதறியதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதுவரை அவதானித்த சுப்பர்நோவாக்களை விட மிகப்பிரகாசமான வெடிப்பு. நமது பால்வீதியை விட 20 மடங்கு பிரகாசமாக இருந்தது அந்த வெடிப்பு. 100 பில்லியன் விண்மீன்களை விடப் பிரகாசமாக ஒரே தடவையில் வெடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று; சுப்பர்நோவா ஒன்றால் உருவாக்கக் கூடிய சக்தியை விட இது பலமடங்கு அதிகம்.
ஆனால் இது உண்மையாக இருந்தால், நிச்சயம் விசித்திரமான ஒரு விடையம் தான்.
நல்ல விஞ்ஞான முறை என்பது பல புதிய விடயங்களை ஆய்வு செய்வதும், அதே நேரத்தில் பிழைகளை விடுவதும் தான். ஆனால் விட்ட பிழைகளில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வது இந்த பிரபஞ்சத்தைப் பற்றி எமது அறிவை மேம்படுத்த உதவுகிறது.
மேலே கூறப்பட்ட மிகப் பிரகாசமான சுப்பர்நோவா பெருவெடிப்பு உண்மையிலேயே சுப்பர்நோவா வெடிப்பல்ல என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மாறாக, சுழன்றுகொண்டிருக்கும் ஒரு கருந்துளை அதற்கு மிக அருகில் வந்த விண்மீன் ஒன்றை கபளீகரம் செய்த நிகழ்வே இந்தப் பிரகாசமான வெடிப்பாகும்.
இந்த நிகழ்வைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட இது ஒரு விசித்திரமான உண்மை (ஆச்சரியமளிப்பதும் கூட!). ஒரு சுழலும் கருந்துளை, அதனது மிக உக்கிரமான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அருகில் வரும் விண்மீனை சிதைப்பது என்பது மிக அரிதாக இடம்பெறும் நிகழ்வு. இதனை சில தடவைகள் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம்.
ஒவ்வொரு கருந்துளையும் அதனைச் சுற்றி ஒரு மாய வேலியைக்கொண்டுள்ளது. இதற்கு நிகழ்வு எல்லை (event horizon) என்று பெயர். இந்த எல்லையைக் கடந்து கருந்துளையினுள் நுழையும் எந்தப் பொருளும் மீண்டும் திரும்பி கருந்துளையை விட்டு தப்பிக்கவே முடியாது. ஆனாலும் சுழலும் கருந்துளைகளை பொறுத்தவரையில் அதன் அழிக்கும் சக்தி இந்த மாய வேலியைவிட பல மடங்கு வெளியே இருக்கும்.
இதுவரை சேகரித்த தகவல்கள் அனைத்தையும் கொண்டும் கூட எம்மால் 100% உறுதியாக மேலே கூறப்பட்ட வெடிப்பு நிகழ்வு கருந்துளைக்குள் நுழைந்த விண்மீனால் ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது. ஆனால் இதுவரை எமக்குத் தெரிந்த வகையில், சரியான விளக்கம் என்று கருதுகிறோம்.
மேலதிக தகவல்
கருந்துளை என்பது உண்மையிலேயே துளை அல்ல. அது அதற்கு எதிர்மாறானது. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருந்துளை நமது சூரியனை விட 100 மில்லியன் மடங்கு திணிவைக் கொண்டது. இந்த மொத்தத் திணிவும் மிக மிகச் சிறிய இடத்தினுள் அடக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.
http://www.unawe.org/kids/unawe1628/
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam