பிரபஞ்ச நிழல் பொம்மலாட்டம்

கடந்த 20 ஆண்டுகளில், சூரியத் தொகுதிக்கு வெளியே கோள்கள் எதுவும் இருக்கின்றனவா என்று தெரியாத நிலையில் இருந்து, சூரியத் தொகுதிக்கு அப்பால் இருக்கும் 3500 ‘பிறவிண்மீன் கோள்’களைக் (exo-planets) கண்டறிந்துள்ளோம்.

பிறவிண்மீன் கோள்களைக் கண்டறிய பல உத்திகள் உள்ளன, அவற்றில் மிகவும் வெற்றிகரமான ஒரு உத்தி ‘transit method’ எனப்படுகிறது. ஒரு கோள் அதனது விண்மீனுக்கு முன்னால் வரும் போது, குறித்த விண்மீனின் ஒளியில் சிறிதளவை அந்தக் கோள் மறைக்கிறது. விண்ணியலாளர்கள் இப்படியாக ஒளி குறைவடைவதை ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சிபோல அவதானிக்கின்றனர். இப்படியாக ஒளி குறைவடைவது தொடர்ந்து நடக்குமாயின் அந்த விண்மீனை ஒரு கோள் சுற்றிவருகிறது என்று கருதமுடியும்.

செவ்வாய் தொடக்கம் வியாழனைவிடப் பெரிய அளவுகளில் ஆயிரக்கணக்கான பிறவிண்மீன் கோள்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் எமக்கு உண்மையில் என்ன தெரியவேண்டும் என்றால், இந்தக் கோள்களில் எந்தக் கோள்களில் உயிரினம் இருக்கிறது என்பதே.

பொதுவாக நாம் பூமி போன்ற கோள்கள் இருகின்றனவா கண்டறிய ஆவலாக உள்ளோம், காரணம் பூமி போன்ற கோளில் உயிரினம் உருவாக வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கிறது. விண்மீனில் இருந்து சரியான தொலைவில் சுற்றிவரும் பூமியின் அளவுள்ள கோள்களை நாம் தேடுகின்றோம். இந்தக் கோள்களின் மேற்பரப்பில் நீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாதியக்கூறு கொண்ட வெப்பநிலை காணப்படும். நாமறிந்தவகையில் உயிர் தோன்ற அவை தேவையான காரணிகளாகும்.

eso1035a
நன்றி: ESO/L. Calçada

அடுத்ததாக குறித்த கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யவேண்டும். அங்கே உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். இன்னும் சில வருடங்களில், எமது தொலைநோக்கிகள் இப்படிப்பட்ட துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ளும். அப்படி அளவீடு செய்ய ஒவ்வொரு கோளின் அசைவையும் மிக மிகத் துல்லியமான முறையில் அளக்கவேண்டும். அதன் மூலம், எங்கே எப்போது எமது தொலைநோக்கிகளை திருப்பவேண்டும் என்று எம்மால் கணிக்கமுடியும்.

சமீபத்தில் இந்த இலக்கை நோக்கி நாம் முக்கிய அடியொன்றை எடுத்துவைத்துள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று ஒரு கோளின் சுற்றுகைக் காலத்தை மிகத் துல்லியமான முறையில், அதனது நிழலை அவதானித்ததன் மூலம் அளந்துள்ளனர். இந்த குறித்த கோள், அதனது விண்மீனை ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிவருகிறது. 18 செக்கன்கள் கூடவோ குறையவோ செய்யலாம். அவ்வளவு துல்லியமாக அளந்துள்ளனர்.

மேலதிக தகவல்

எமது சூரியத் தொகுதியிலும் நாம் சூரியனைக் கடக்கும் கோள்களை பார்க்கலாம். வெள்ளி மற்றும் புதன் ஆகிய கோள்கள் அவ்வப்போது சூரியனைக் கடந்து செல்வதை பூமியில் இருந்து அவதானிக்க முடியும். 11 ம் திகதி நவம்பர் மாதம் 2019 இல் புதன் சூரியனைக் கடப்பதை உங்களால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1627/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam