தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஏலியன் இனம் ஒன்று நமது சிறிய பூமியைக் கண்டறிந்து ஒரு நாள் முழுதும் எம்மை ஆய்வு செய்ய கருவிகளை அனுப்பினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். ஒரு பெரிய ஸ்கேனரைக் கொண்டு மொத்த பூமியையும் அவர்களால் படம்பிடிக்க முடியும். ஒரே நாளில் அவர்களால் பல தகவல்களைத் திரட்டமுடியும். அதில் அதிகமான தகவல்கள் மனிதர்களைப் பற்றியும் அவர்களது நாளாந்த நடவடிக்கைகள் சார்ந்ததாகவும் இருக்கும்.
ஒரு நாளில் எம்மைப் பற்றி அவர்கள் சேகரித்த தகவல்கள் நம்மைப் பற்றி அப்படியென்ன சொல்லிவிட முடியும்? ஒரு நாள் என்பது ஒரு மனிதன் பிறந்து, வளர்ந்து பின்னர் இறப்பதை காட்டிவிடக்கூடிய காலம் இல்லையே. ஆனால் இந்த ஏலியன்ஸ் சிறுவர்கள், வயது வந்தவர்கள், முதியோர்கள் என பலரையும் பார்க்கக் கூடும். இப்படி வேறுபட்ட மனிதர்களின் வேறுபட்ட வாழ்க்கைக்காலம் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஒரு மனிதனின் முழுமையான வாழ்க்கைக்காலத்தை அந்த ஏலியன்ஸ்களால் இலகுவாக அறிந்து கொள்ளமுடியும்.
விண்ணியலாளர்கள் கூட இப்படியான குறுகியகால படங்கள் (snapshot) பல்வேறு தகவல்களை எமக்குத் தரும் என்று தெரிந்துவைத்துள்ளனர். அவர்கள் விண்மீன்களின் குறுகிய கால படங்களை எடுத்து ஆய்வுசெய்கின்றனர்.
விண்மீன்களின் வாழ்க்கைக்காலத்தோடு ஒப்பிட்டால், மனிதனின் வாழ்வுக் காலம் வெறும் கண்சிமிட்டும் நேரம் மட்டுமே! விண்மீன்கள், பல்லாயிரம் ஆண்டுகள், பல மில்லியன், அல்லது பல பில்லியன் ஆண்டுகள் வரை வாழ்வுக்காலத்தை கொண்டவை. அதனால் ஒரு விண்மீனின் பிறப்பு, அதன் வாழ்க்கை மற்றும் அதன் இறப்பு போன்ற எல்லாவற்றையும் எம்மால் பார்த்துவிட முடியாது. ஆனால் நாம் பல்வேறு விண்மீன்களை அதன் வேறுபட்ட வாழ்வுக் காலத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
மேலே உள்ள படம் எக்ஸ்கதிர் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் ஒன்றும் அப்படி சிறப்பு மிக்க படமாக இல்லாமல் இருந்தாலும், இந்தப் படம் ஒரு விண்மீனின் பிறப்பு, அதன் வாழ்வு மற்றும் இறப்பு ஆகிய எல்லா வாழ்வுக் கால நிலையையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது குடும்பப் புகைப்படம் போல!
படத்தின் மத்தியில் இருக்கும் பிரகாசமான புள்ளி சிக்னஸ் X-3 (Cygnus X-3). இது இரண்டு தனிப்பட்ட விண்பொருட்களால் ஆனது. ஒன்று மத்திம வயதைக் கொண்ட ஒரு விண்மீன், அடுத்தது இறந்துவிட்ட பெரிய ஒரு விண்மீனின் எச்சம். இப்படியான இரட்டை தொகுதிகளை ‘எக்ஸ்-கதிர் இரட்டைத் தொகுதி’ என்று நாம் அழைக்கிறோம். அதற்குக் காரணம் இவை எக்ஸ்-கதிர்வீச்சை அதிகளவு பிரகாசமாக வெளியிடுவதால் ஆகும்.
படத்தில் இடப்பக்கத்தில் வாயுக்கள் மேகம் போல தெரிகிறது. அங்கே புதிய விண்மீன்கள் உருவாகிக்கொண்டிருகின்றன. இந்தப் படத்தால் விண்ணியலாளர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர். காரணம் இப்படியான விண்மீன்களை உருவாகும் முகில்கள் எக்ஸ்-கதிர்களை வெளியிடுவதை நாம் இதற்கு முன்னர் அவதானிக்கவில்லை.
ஆனால் உண்மையில் இந்த மேகங்கள் எக்ஸ்கதிர்களை வெளியிடவில்லை. மாறாக, ஆடி போல தொழிற்பட்டு சிக்னஸ் X-3 இல் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்வீச்சை தெறிப்படையச் செய்கின்றன.
மேலதிகத் தகவல்
பெரிய விண்மீன்களின் வாழ்வுக் காலம் குறைவு. காரணம், பெரிய விண்மீன்கள் சிறிய விண்மீன்களை விட அதிகமாக தங்கள் எரிபொருளை பயன்படுத்துவதால் ஆகும்.
இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.
http://www.unawe.org/kids/unawe1626/
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam