ஆழ் விண்வெளியை நோக்கி ஒரு பயணம்: எக்ஸ்-கதிர் பிரபஞ்சத்தின் ஆழமான காட்சி

ஒளியில் பலவகை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகைப் பற்றி பல விடயங்களைச் சொல்லுகின்றன, ஆனால் இதில் ஒன்று மட்டுமே எம் கண்களுக்கு புலப்படும்.

அதிர்ஷ்டவசமாக, கண்களுக்கு ‘புலப்படாத’ ஒளியிலும் விண்வெளியை பார்க்கக்கூடிய தொலைநோக்கிகளை நாம் உருவாக்கியுள்ளோம். உதாரணமாக, சந்திரா எக்ஸ்-கதிர் அவதானிப்பகத்தில் இருக்கும் நண்பர்கள் எக்ஸ்-கதிர் எனப்படும் ஒருவகையான ஒளியில் இந்தப் பிரபஞ்சத்தை அவதானிக்கின்றனர்.

எக்ஸ்-கதிர் பிரபஞ்சத்தில் உள்ள சக்திவாய்ந்த மற்றும் விசித்திரமான பொருட்களான கருந்துளைகள், ஒன்றுடன் ஒன்று மோதும் விண்மீன்கள் போன்றவற்றை காட்டுகிறது. மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது, நமது நிலவின் அளவில் பாதியை விடச் சற்றுப் பெரிய அளவான வானத்தில் தெரியக்கூடிய பொருட்களையே – இவை எக்ஸ்-கதிர் முதல்களாகும்.

xray-deepfield

இதற்குமுன் நாம் எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகளை பயன்படுத்தி பார்த்ததை விட இந்தப் படத்தில் இருப்பது அவற்றை விடவும் மிகவும் தொலைதூரத்தில் இருக்கும் பொருட்களாகும். முன்னைய அவதானிப்புகளில் தெரியாத மங்கலான பொருட்களும் இந்தப் படத்தில் தெரிகின்றன.

இதில் அண்ணளவாக முக்கால் பங்கு ஒளிமுதல்கள் கருந்துளைகளாகும். அதாவது 700 இற்கும் அதிகமான கருந்துளைகள் இந்தச் சிறிய படத்தில் உள்ளன. வானம் முழுவதும் இதேபோல கருந்துளைகள் நெருக்கமான இருந்தால், 1000 மில்லியனுக்கும் அதிகமான ஆபத்தான கருந்துளைகள் வானை நிறைத்து இருக்கும்.

கருந்துளைகளை எப்படி எம்மால் பார்க்கலாம் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். கருந்துளைகள் என்று பெயர் வந்ததற்கு காரணமே அவை எந்தவொரு ஒளியையும் வெளியிடாததால் என்பதாலாகும். கருந்துளைகள் அவற்றை சுற்றியிருக்கும் தூசுகளையும் வாயுக்களையும் வேகமாக விழுங்குவதால், அங்கு வெப்பநிலை அதிகரித்து அவை பிரகாசமாக ஒளிரத் தொடங்கும்.இந்த ஒளிரும் பொருளையே நாம் பார்க்ககூடியதாக இருக்கிறது.

இந்தப் படத்தில் இருக்கும் கருந்துளைகள் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு புதிய தகவல்களை வழங்கியுள்ளன. குறிப்பாக, விஞ்ஞானிகள் ஏற்கனவே பல புதிய விடயங்களை அறிந்துள்ளனர். இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருந்தபோது, கருந்துளைகள் அவற்றுக்கு அருகில் இருக்கும் பொருட்களை விழுங்கி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகவில்லை, மாறாக வேகமான வெடிப்புகள் மூலம் உருவாகியிருகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆர்வக்குறிப்பு

படத்தில் இருக்கும் பொருட்களின் நிறம் குறித்த பொருளின் சக்தியின் அளவை குறிக்கிறது. குறைந்த சக்தியுள்ளவை சிவப்பாகவும், அதிக சக்திவாய்ந்தவை நீல நிறமாகவும் காட்டப்பட்டுள்ளன.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1701/