விண்மீன் பேரடைகளின் தூரத்திற்கு ஒரு அட்டவணை

இந்தப் பாரிய பிரபஞ்சத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று கண்டறிவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்ட காலம் முதலே விண்ணில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று அறிவதில் எமக்கு ஆர்வம் ஏற்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இன்று இந்தத் தேடலை இலகுபடுத்தியுள்ளது.

நமது பால்வீதியைச் சுற்றியிருக்கும் ஆயிரக்கணக்கான விண்மீன் பேரடைகளின் தூரங்களை துல்லியமான கணக்கிடுவதற்கான ஒரு அட்டவணையை ஆய்வாளர்கள் குழு ஒன்று தயாரித்துள்ளது.

pia21084
NED தகவல்நதளத்தில்ன்றி இருக்கும் அத்தனை ஒளி முதல்களும் காட்டப்பட்டுள்ளன. இதில் 100 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன் பேரடைகள் உள்ளன. நன்றி: NASA/JPL-Caltech

NED-D என அழைக்கப்படும் இந்த அட்டவணை, பால்வீதியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான விண்மீன் பேரடைகளைப் பற்றி மட்டும் அறிந்துகொள்ளப் பயன்படாமல், பிரபஞ்சத்தில் இருக்கும் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகளைப் பற்றியும் அவற்றின் தூரங்களைப் பற்றியும் அறிய உதவும். இந்த அட்டவணையைப் பயன்படுத்தி விண்ணியலாளர்கள் விண்மீன் பேரடைகளின் தொலைவைத் துல்லியமாக கண்டறிவது மட்டுமன்றி, பிரபஞ்சம் விரிவடையும் வேகத்தையும், அதன் அவையும் துல்லியமாக அறியமுடியும்.

NED-D என்பது NASA/IPAC Extragalactic Database (NED) இன் ஒரு பகுதியாகும். NED இல் 100 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன் பேரடைகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

விண்மீன் பேரடைகள் ஒவ்வொன்றும் மிக மிகத் தொலைவில் இருப்பதால் பூமியில் இருந்து நேரடியாக அவற்றின் தொலைவை அளக்கமுடியாது. ஆகவே விண்ணியலாளர்கள் மறைமுகமான முறையைக் கையாளுகின்றனர். பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பிரகாசமான பொருட்களான Ia வகை சுப்பர்நோவா, துடிப்பலை விண்மீன்கள், செபிட் மாறி வகை விண்மீன்கள் போன்றவை பிரபஞ்சத்தில் தூரம் சம்பந்தமான நியமங்களை உருவாக்கப்பயன்படும் குறிகாட்டிகளாக இருக்கின்றன.

ஒரு விண்மீன் பேரடை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனைக் கண்டறிய, தூரத்திற்கும், விண்மீன் பேரடைகளின் மற்றைய பண்புகளுக்கும் இடையிலான கணிதவியல் தொடர்புகளை வைத்து தூரம் கணக்கிடப்படுகிறது. அதாவது குறித்த விண்மீன் பேரடை வெளியிடும் மொத்த சக்தியின் அளவு, அதன் பிரகாசம் போன்ற பண்புகளுக்கும் குறித்த விண்மீன் பேரடையின் தூரத்திற்குமான தொடர்புகள்.

NED-D அட்டவணையால் தற்போது விண்ணியலாளர்கள் இன்னும் பல குறிகாட்டிகளை கண்டறிந்துள்ளனர். இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் ஆறு டஜன் குறிகாட்டிகளுக்கும் மேல்! இவற்றைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாக விண்மீன் பேரடைகளின் தூரங்களை கண்டறியலாம்.

2005 இல் மிகச் சிறிய தகவல்தளமாக தொடங்கப்பட்ட NED-D காலப்போக்கில் படிப்படியாக வளர்ச்சியடைந்துவந்துள்ளது. இன்று NED-D இல் 77,000 விண்மீன் பேரடைகளுக்குக்கிடையிலான 166,000 தூர அளவீடுகள் உள்ளன. இதோடு, மிகமிக தொலைவில் இருக்கும் காமாக்கதிர் வெடிப்புக்கள் (gamma ray bursts) மற்றும் சுப்பர்நோவாக்களின் தூர அளவீடுகளும் உண்டு. இன்று பல ஆய்வுகளில் இந்த NED-D அட்டவணை விண்மீன் பேரடைகளுக்கான தூரத்திற்கான சான்றாக பயன்படுத்தப்படுகிறது.

NED தகவல்தளத்தை அணுக – http://ned.ipac.caltech.edu

NED-D தகவல்தளத்தை அணுக – http://ned.ipac.caltech.edu/Library/Distances/

தகவல்: நாசா


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam