ஒரு குளிர்ந்த குள்ளனும் ஏழு கோள்களும்

இன்றைய விஞ்ஞான உலகில் மிகவும் வியப்பூட்டக்கூடிய விடயங்களில் ஒன்றாக இருப்பது வேற்றுலக உயிரினங்களின் தேடலாகும். இந்தத் தேடல் தீவிரமடையும் காலப்பகுதியில் நாம் வாழ்வது உண்மையில் அதிர்ஷ்டவசமான விடயமாகும்.

25 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரபஞ்சத்திலேயே நமது சூரியத் தொகுதியில் இருக்கும் கோள்களைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருந்தோம். இன்று பொதுவாக எல்லா விண்மீன்களையும் கோள்கள் சுற்றிவருவதை நாமறிவோம்! அடுத்ததாக செய்யவேண்டிய வேலை பூமி போன்ற கோள்களை கண்டறிவதே.

இன்று அந்த தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது. ஏழு பாறைகளால் உருவான கோள்களை உள்ளடக்கிய புதிய சூரியத் தொகுதி ஒன்றைக் கண்டறிந்துள்ளோம். இந்தத் தொகுதி பூமியில் இருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இந்தப் புதிய சூரியத் தொகுதியில் இரண்டு முக்கிய விடயங்கள் உண்டு. ஒன்று, இதில் பூமியளவு உள்ள அதிகளவான கோள்கள் உள்ளன, இரண்டு, இவை உயிரினங்களை கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.

eso1706a
படவுதவி: ESO/N. Bartmann/spaceengine.org

குறித்த சூரியத் தொகுதியின் விண்மீனின் முன்னர் கோள்கள் குறுக்கறுக்கும் போது ஏற்பட்ட வெளிச்சமாறுபாட்டைக் கொண்டு இந்தக் கோள்களை விண்ணியலாளர்கள் கண்டறிந்தனர். மிகத் தொலைவில் இருக்கும் இந்தக் கோள்களைப் நேரடியாக எம்மால் பார்க்கமுடியாது, ஆனால் மறைமுகமாக அவற்றைப் பற்றி பல்வேறு தகவல்கள திரட்டமுடியும்.

இந்தக் கோள்கள் அனைத்தும் பாறைகளால் உருவானவை என்று நாம் கண்டறிந்துள்ளோம். மேலும் இவை நமது பூமியின் அளவே இருகின்றன மேலும் இவற்றில் மூன்று கோள்களில் சமுத்திரம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. ஆனாலும் இந்தக் கோள்கள் அதனது விண்மீனுக்கு மிக அருகில் சுற்றிவருகின்றன. அதாவது சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தைவிட மிகக் குறைவான தூரத்தில், இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளான புதனைவிட இந்தக் கோள்கள் அதனது தாய் விண்மீனை மிக அருகில் சுற்றிவருகின்றன.

Comparison of the TRAPPIST-1 system with the inner Solar System

ஆனாலும் இந்தக் கோள்களின் வெப்பநிலை நமது சூரியத் தொகுதியில் இருக்கும் பாறைக்கோள்களின் வெப்பநிலையை ஒத்துக்காணப்படுகின்றன! இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால், அங்கிருக்கும் முதல் மூன்று கோள்களும் (விண்மீனுக்கு அருகில்) நமது வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்கள் பெறும் வெப்பம் மற்றும் ஒளியின் அளவையே பெறுகின்றன.

இதற்குக் காரணம் அந்தச் சூரியத் தொகுதியின் மையத்தில் இருக்கும் விண்மீன் ஒரு “மிக வெப்பம்குறைந்த குள்ளன்” (ultracool dwarf) வகை விண்மீனாகும். இது நமது சூரியனைவிட பத்து மடங்கு திணிவு குறைந்ததும், சூரியனை விட நான்கு மடங்கு வெப்பம் குறைந்ததும் ஆகும். அதனால் இது வெளியிடும் வெப்பம் மற்றும் ஒளியின் அளவு மிகக்குறைவாகும்.

Comparison of the sizes of the TRAPPIST-1 planets with Solar Sys

விண்ணியலாளர்கள் இப்படியான குள்ளன் வகை விண்மீன்களை சுற்றி பூமி போன்ற கோள்களை கண்டறியமுடியும் எனக் கருதுகின்றனர். ஆனால் இவ்வளவு அருகில் அதிகளவில் பூமி போன்ற பாறையால் உருவான கோள்களைக் கொண்ட தொகுதி தற்போதுதான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்

இந்தச் சூரியத் தொகுதியில் இருக்கும் விண்மீன் சிறியதாக இருப்பினும், நாம் கண்டரிந்தவற்றில் இது ஒன்றும் அவ்வளவு சிறிதல்ல. மிகச் சிறிய விண்மீன் என்னும் புகழ் OGLE-TR-122b என்னும் விண்மீனையே சாரும். இது நமது வியாழனைவிட சற்றே பெரியது!


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1706/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam