ஜனவரி 9, 1992 இல் முதலாவது புறவிண்மீன் கோள் ஒன்றை நாம் கண்டறிந்ததில் இருந்து, வெறும் கனவாய் இருந்த வேற்றுலக உயிரினங்களைப் பற்றிய தேடல் நனவாகியது. அன்றிலிருந்து இன்றுவரை நாம் 3500 இற்கும் அதிகமான வேறு விண்மீன்களை சுற்றிவரும் கோள்களைக் கண்டறிந்துள்ளோம்.
அரை டஜனுக்கும் அதிகமான தனிப்பட்டதும், கூட்டமைப்புமான திட்டங்கள் புறவிண்மீன் கோள்களை கண்டறிய தேடல் வேட்டையை நடாத்துகின்றன. அமெரிகாவின் நாசா மற்றும் ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகம் (ESO) என்பன அதிகளவு பொருட்செலவில் இந்த தேடுதலை நடாத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் நாசா மற்றும் ESO சேர்ந்து பூமி போன்ற பாறையால் உருவான சூரியத் தொகுதி ஒன்றைக் கண்டறிந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். புறவிண்மீன்களைப் பற்றிய தேடல் வெறுமனே வேறு விண்மீன்களை சுற்றிவரும் கோள்களை கண்டறிவதில் மட்டும் ஆர்வம் கொள்ளாமல், பூமி போன்ற உயிர்வாழக்கூடிய அல்லது வேறு உயிரினங்கள் இருக்கக்கூடிய கோள்களை கண்டறிவதில் இந்த தேடலை நடாத்தும் விஞ்ஞானிகள் ஆர்வமாக இருகின்றனர்.
இதுவரை நாம் கண்டறிந்த பல புறவிண்மீன் கோள்களில் சுவாரஸ்யமான சில கோள்களைப் பற்றிப் பார்க்கலாம்.
அதற்கு முன்னர், உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசம் (habitable zone) என்றால் என்ன என்று கூறிவிடுகிறேன், பின்னர் உங்களுக்கு அது உதவியாக இருக்கும். வாழ்தகமைப் பிரதேசம் என்பது ஒரு விண்மீனைச் சுற்றி உயிரினங்கள் உருவாகக்கூடியளவு காரணிகள் இருக்கக்கூடிய பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் குறித்த வின்மீணிற்கு மிக அருகில் இல்லாததால் நீர் ஆவியாகாமலும், விண்மீனை விட்டு மிகவும் தொலைவில் இருப்பதால் நீர் உறைந்து பனியாக மாறாமலும் காணப்படக் கூடிய பிரதேசம். ஆகவே ஒரு விண்மீனின் வாழ்தகமைப் பிரதேசத்தின் உள்ளே கோள்கள் காணப்பட்டால், அங்கே உயிரினகள் தோன்ற தேவையாக காரணிகள் இருப்பதற்காக சாத்தியக்கூறுகள் அதிகம் எண்டு புரிந்துகொள்ளவும். வாழ்தகமைப் பிரதேசத்தில் இருப்பதனால் அந்தக் கோளில் நிச்சயம் உயிரினம் உருவாகியிருக்கவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை.
இன்னொரு முக்கிய விடயம், இந்தக் கட்டுரையில் வரும் அனைத்துப் படங்களும் ஓவியரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவையே. இந்த புறவிண்மீன் கோள்கள் அனைத்தும் அழகாக புகைப்படம் எடுக்கும் எல்லைக்கு ரொம்ப தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றன. ஹபில் போன்ற பாரிய தொலைநோக்கியின் மூலம் பார்த்தாலும் புள்ளியாகவே தெரியும் இந்தக் கோள்களின் கட்டமைப்பு மற்றும் காரணிகளை வைத்துக்கொண்டு விஞ்ஞானிகள் கொடுத்த அறிவுரைக்கு ஏற்றவாறு ஓவியர்களால் உருவாக்கப்பட்ட படங்களே இவை. சாதாரண மக்களுக்கு இலகுவாக புரியவைப்பதே இந்தப் படங்களின் நோக்கம்.
Proxima Centauri b
பூமிக்கு மிக அருகில் இருக்கும் புறவிண்மீன் கோள் – வெறும் 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் அல்லது 40 ட்ரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. Proxima Centauri எனப்படும் சிவப்புக்குள்ளன் வகை விண்மீனைச் சுற்றிவரும் இந்த புறவிண்மீன் கோள் அந்த விண்மீனின் வாழ்தகமைப் பிரதேசத்தினுள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பூமியைப் போல 1.3 மடங்கு திணிவைக்கொண்ட இந்தக் கோள், பூமிக்கும் சூரியனுக்குமான இடைவெளியில் வெறும் 20 இல் 1 பங்கு தொலைவிலேயே சுற்றிவருகிறது. Proxima Centauri ஒரு சிவப்புக்குள்ளன் என்பதால் மிக அருகில் அதனைச் சுற்றிவந்தாலும் சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் சக்தியில் 2/3 பங்கு மட்டுமே அதனது விண்மீனில் இருந்து இந்தக் கோளிற்கு கிடைக்கிறது.
வாழ்தகமைப் பிரதேசத்தில் இந்தக் கோள் காணப்பட்டாலும், விண்மீனுக்கு மிக அருகில் இருப்பதால், விண்மீனில் இருந்துவரும் எக்ஸ்கதிர் மற்றும் புறவூதாக்கதிர்வீச்சு இந்தக் கோளில் உயிரினம் தோன்றுவதற்கான சாத்தியத்தை குறைக்கிறது.
2016 இல் ESO வினால் இந்தக் கோள் கண்டறியப்பட்டது அறிவிக்கப்பட்டது.
WISE 0855
பழுப்புக்குள்ளன் எனப்படும் ஒரு வகையான விண்பொருள் இது. நமது வியாழனை விட ஐந்து மடங்கு திணிவைக் கொண்டது. பழுப்புக்குள்ளன் வகையறாக்கள் கோள்களை விடப் பெரிதும் ஆனால் அணுக்கருப்பிணைவை நிகழ்த்தக்கூடியளவு திணிவு இல்லாததால் விண்மீன்கள் ஆகமுடியாமலும் இருக்கும் இடப்பட்ட ஒரு வஸ்துக்கள்!
WISE 0855 பூமியில் இருந்து அண்ணளவாக 7.2 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இதில் என்ன சிறப்பம்சம் என்றால், இதனது வளிமண்டலத்தில் நீரால் / பனியால் ஆன முகில்கள் காணப்படுகின்றன.
நாசாவின் WISE (Wide-field Infrared Survey Explorer) விண்கலத்தால் 2014 இல் கண்டறியப்பட்டது.
இதனது மேற்பரப்பு வெப்பநிலை -23 பாகை செல்சியஸ் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ஒரு ஒப்பீட்டிற்கு – வியாழனின் மேற்பரப்பு மேகங்களின் வெப்பநிலை -143 பாகை செல்சியஸ்)
Sweeps-04
பூமியில் இருந்து 27,710 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கோள் தான் நாம் இதுவரை கண்டறிந்த புறவிண்மீன் கோள்களில் மிகத் தொலைவில் இருக்கும் கோளாகும்.
தனுசு விண்மீன் தொகுதியில் இருக்கும் விண்மீனான SWEEPS J175853.92−291120.6 ஐ இந்தக் கோள் வெறும் 4.2 நாட்களில் சுற்றிவருகிறது.
வியாழனை விட 3.8 மடங்கு திணிவு அதிகமானதாக இந்தக் கோள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Kapteyn b
நாம் கண்டறிந்ததில் மிக மிகப் பழமையான வாழத்தகுந்த கோள் – 11.5 பில்லியன் வருடங்கள் வயதைக்கொண்டது. பூமியின் வயது 4.6 பில்லியன் வருடங்கள் மட்டுமே. பூமியில் இருந்து வெறும் 13 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கோளில் உயரினங்கள் தோன்றியிருந்தால் இவ்வளவு காலத்தில் எப்படியான கூர்பிற்கு அவை ஆளாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.
Kapteyn எனும் சிவப்புக்குள்ளன் வகை விண்மீனை இந்த கோள் வாழ்தகமைப் பிரதேசத்தினுள் சுற்றிவருவதால் இங்கே நீர் திரவநிலையில் இருப்பதற்காக சாத்தியக்கூறுகள் அதிகம்.
பூமியை போல 5 மடங்கு திணிவு கொண்ட இந்தக் கோள் “சுப்பர் பூமி” வகை கோளாக கருதப்படுகிறது. இது தனது விண்மீனை 48 நாட்களில் சுற்றிவருகிறது.
Kepler-444
11.2 பில்லியன் வருடம் பழமையான விண்மீனும் அதனைச் சுற்றிவரும் கோள்களும். நமது பால்வீதிக்கு இரண்டு பில்லியன் வருடங்கள் வயதாக இருக்கும் போதே Kepler-444 தொகுதி உருவாகிவிட்டது. சூரியனைப் போன்ற விண்மீனான Kepler-444 ஐ ஐந்து பாறைக்கோள்கள் மிக மிக அருகில் சுற்றி வருகின்றன. சூரியனை புதன் சுற்றி வருவதை விட இவை மிக மிக அருகில் சுற்றிவருவதால் இவற்றில் உயிர்வாழ தேவையான காரணிகள் இருக்காது என்பது நாசாவின் கருத்து.
பூமியில் இருந்து 117 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த தொகுதியை Kepler விண்கலம் 2015 இல் கண்டறிந்தது. இந்த தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களும், பாறைக் கோள்கள் என்பதுடன், பூமியின் அளவிற்கு அருகில் இருப்பவை. குறிப்பாக கூறவேண்டும் என்றால் புதனின் அளவில் இருந்து வெள்ளியின் அளவு வரை இந்தக் கோள்களின் அளவுகள் காணப்படுகின்றன.
இந்த ஐந்து கோள்களும் அதனது விண்மீனை 10 நாட்களுக்கும் குறைவான காலப்பகுதியில் சுற்றிவருவது இவை அந்த விண்மீனுக்கு எவ்வளவு அருகில் இருகின்றன என்பதை உங்களுக்கு உணர்த்தலாம். நமது சூரியனை மிக அருகில் இருக்கும் புதன் சுற்றிவர 88 நாட்கள் எடுக்கிறது!
V830 Tauri b
பூமியில் இருந்து 427 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோள் வயதில் மிகக் குறைந்தது. வெறும் 2 மில்லியன் வருடங்களே வயதான இந்தக் கோள் வியாழனைப் போல பெரிய வாயு அரக்கனாகும்.
இதனது விண்மீன் 2 மில்லயன் வயதைக் கொண்ட நமது சூரியனது திணிவையுடைய ஒரு விண்மீனாகும். ஆனால் சூரியனை போல இரு மடங்கு பெரியது.
புதன் சூரியனை சுற்றிவருவதை விய ஏழு மடங்கு அருகில் இந்தக் கோள் விண்மீனை சுற்றிவருகிறது. இதனால் வெறும் 4.93 நாட்களில் குறித்த விண்மீனை சுற்றிவந்துவிடுகிறது.
விண்மீனுக்கு மிக அருகில் இருக்கும் வாயு அரக்கனான இதனை Hot Jupiter வகை கோள் என்று அழைக்கின்றனர்.
WASP 12b
ஏப்ரல் 1, 2008 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட WASP 12b என்னும் கோள் WASP 12 என்னும் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவருகிறது. அண்ணளவாக ஒரே நாளில் தனது விண்மீனை சுற்றிவந்துவிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! (சோம்பேறியான பூமி 356 நாட்களை எடுத்துக்கொள்கிறது!!)
2013 இல் ஹபிள் தொலைநோக்கியின் மூலம் இந்தக் கோளை ஆய்வு செய்த விண்ணியலாளர்கள் இந்தக் கோளின் மேற்பரப்பில் நீர் இருப்பதகான வாய்ப்புக்கள் இருப்பதாக அறிவித்த போதும், மீண்டும் 2014 இல் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் மிகவும் உலர்ந்த மேற்பரப்பை இந்தக் கோள் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
பூமியில் இருந்து 871 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கோள் தனது விண்மீனுக்கு மிக அருகில் இருப்பதால் விண்மீனால் உறுஞ்சப்பட்டு வருகிறது! நாசா இன்னும் இந்தக் கோள் 10 மில்லியன் வருடங்களில் முற்றாக அழிந்துவிடும் என்று கணக்கிட்டுள்ளது.
OGLE-2005-BLG-390Lb (Hoth)
பால்வீதியின் மையத்தை நோக்கி பூமியில் இருந்து அண்ணளவாக 22000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கோள் நாமறிந்த மிகத் தொலைவில் இருக்கும் கோள்களில் ஒன்று.
ஜனவரி 2006 இல் கண்டறியப்பட்ட இந்தக் கோள் வாழ்தகமைப் பிரதேசத்துக்கப்பால் தனது விண்மீனை சுற்றி வருகிறது. இதனால் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
பூமியைப் போல ஐந்து மடங்கு திணிவு கொண்ட இந்தக் கோள், பூமியைப் போலவே தின்ம அகப்பகுதியை கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தக் கோளின் மிக முக்கிய பண்பு தனது தாய் விண்மீனை மிக தொலைவில் சுற்றிவருவதால், இதனது மேற்பரப்பு வெப்பநிலை -220 பாகை செல்சியசாக காணப்படுகிறது. இது நாமறிந்த புறவிண்மீன் கோள்களில் மிகக் குளிரான ஒரு கோளாகும்.
Gliese 667 Cc
பூமியில் இருந்து 23.62 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் Gliese 667 C என்னும் சிவப்புக்குள்ளன் வகை விண்மீனை சுற்றிவரும் இந்தக் கோள் வாழ்தகமை எல்லைக்குள் இருக்கும் ஒரு கோளாகும்.
இந்தக் கோள் ஒரு Super Earth வகைக் கோள். இது பூமியைப் போல குறைந்தது 3.7 மடங்கு திணிவைக் கொண்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மேலும் பூமியைப் போல 1.5 மடங்கு பெரியது.
28 நாட்களில் தனது விண்மீனை சுற்றிவரும் இந்தக் கோள், பூமிக்கு சூரியனிடம் இருந்து கிடைக்கும் ஒளியின் அளவில் 90% மட்டுமே அதனது விண்மீனில் இருந்து இதற்குக் கிடைக்கிறது.
இந்தக் கோளின் சுழற்சிக் காலமும் தனது விண்மீனை சுற்றிவர எடுக்கும் காலமும் ஒன்றாக காணப்படுவதால், எப்போதும் ஒரே பக்கம் விண்மீனில் இருந்து ஒளியைப் பெறுவதும், மாற்றிய பக்கம் எப்போதும் இரவாகவும் காணப்படும்.
இந்த இரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் நீர் திரவநிலையில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Gliese 667 C-யில் இன்னொரு கோளும் உண்டு. Gliese 667 Cb எனும் அந்தக் கோள் தனது விண்மீனுக்கு மிக மிக அருகில் சுற்றிவரும் கோளாகும். இது ஒரு பாறையால் ஆக்கப்பட்ட கோள் இல்லை என்பது ஆய்வு முடிவு.
சில பல புறவிண்மீன் கோள்களைப் பற்றி பார்த்தோம், இன்னும் பல கோள்கள் இருக்கின்றன, ஆச்சரியமிக்கதும் வியப்பூட்டக்கூடியதுமான இந்தக் கோள்கள் எல்லாமே இயற்கையின் அற்புத படைப்புக்களில் ஒன்று. இதில் பூமி போன்ற உயிர்கள் வாழக்கூடிய கோள்ஒன்றை கண்டறிந்துவிட்டால்? அங்கு நம்மைப் போலவே உயிரினங்களும் இருந்துவிட்டால்? நம்மைவிட தொழில்நுட்ப வளர்ச்சியில் விருத்தியடைந்த வேற்றுலக நாகரீகம் காணப்பட்டால்? பல் கேள்விகள்… விரைவில் விடை கிடைக்கலாம்…
வேற்றுலக நாகரீகங்கள் எப்படியா வளர்ச்சியடைந்திருக்கலாம் என்று ஒரு அறிவியல் ரீதியான பார்வைக்கு வேற்றுலக நாகரீகங்கள் என்னும் பரிமாண தொடரை வாசியுங்கள்.
படங்கள்: நாசா, விக்கிபீடியா மற்றும் இணையம்
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam