செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த கோள்!

சூரியத் தொகுதியில் இருக்கும் எட்டுக் கோள்களைப் போலவே எட்டு கோள்களைக் கொண்ட மற்றுமொரு விண்மீன் தொகுதி தான் கெப்லர்-90. சூரியனைப் போன்ற இந்த விண்மீன் 2,545 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

படத்தில் சூரியத் தொகுதியில் இருக்கும் கோள்களோடு ஒப்பிட்டு, கெப்லர்-90 இல் இருக்கும் கோள்களை ஓவியர் வடிவமைத்த படத்தை பார்க்கலாம்.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால், புதிதாக கண்டறியப்பட்ட எட்டாவது கோள் கெப்லர்-90i அதன தாய் விண்மீனை மிகமிக அருகில் சுற்றிவரும் கோள். இது வெறும் 14.4 நாட்களில் விண்மீனைச் சுற்றிவிடுகிறது. இந்தக் கோளை கூகிளின் செயற்கை அறிவுகொண்ட ப்ரோக்ராமை பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.

இயந்திரக் கற்கை (machine learning) என்பது செயற்கை நுண்ணறிவில் இருக்கும் ஒரு பிரிவாகும். இதில் கணணி அதனிடம் இருக்கும் தரவுகளைக் கொண்டு தன்னைத் தானே கற்பித்துக்கொள்ளும். இங்கே கெப்லர் தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு எப்படி புதிய கோள்களைக் கண்டறிவது என்று கற்பித்துக்கொண்ட கணணி கண்டறிந்த கோள் தான் இந்த கெப்லர்-90i.

படவுதவி: NASA Ames, Wendy Stenzel

மேலும் மேம்படுத்தப்பட்ட இயந்திரக் கற்கை முறைகளைக் கொண்டு பல புதிய விடையங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நாசாவின் கெப்லர் மற்றும் K2 செயற்திட்டங்கள், புறவிண்மீன் கோள்களைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டவை. நாம் இதுவரை 3,567 கோள்களையும் 2,657 சூரியத் தொகுதி போன்ற விண்மீன் தொகுதிகளையும் கண்டறிந்துள்ளோம்.

இதில் 882 கோள்கள் பூமியைப் போலவே பாறையால் ஆனவை!

புறவிண்மீன் கோள்கள் என்றால் என்ன? தெளிவாக அறிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்களேன்.

புறவிண்மீன் கோள்கள் ஒரு பார்வை

தகவல்: நாசா