கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2.1 பில்லியன் வருடங்கள் பழமையான இந்தப் படிவமே, நாமறிந்து உலகில் முதல் தோன்றிய பலகல அங்கிக்கு உதாரணம். இவற்றைப் பற்றிய ஆய்வு எமக்கு எப்போது முதலாவது பலகல (multi-cell organism) அங்கிகள் தோன்றியது என்று மட்டுமல்லாது, ஏன் பலகல அங்கிகள் தோன்றின என்றும் கண்டறிய உதவும்.
தட்டையான விரிசங்கு போன்ற அமைப்பைக் கொண்ட இந்தப் புதைபடிவம் அண்ணளவாக ஐந்து இன்ச் நீளமானது மற்றும் சுற்றிவர வெட்டுக்களையும் கொண்டுள்ளது.

இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இவை ஒன்றில் ஒரு கல அங்கிகளின் குடியேற்றமாக இருக்கவேண்டும் அல்லது மிக ஆதிகாலத்தில் உருவாகிய பல கல அங்கியாக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். எப்படியிருப்பினும் இந்தப் புதை படிவங்களில் ஆக்ஸிஜன் செறிவாக காணப்படுவதுடன், பல கல தொழிற்பாடும் நடைபெற்றிருக்ககூடிய ஆதாரம் உள்ளது.
அண்ணளவாக 3.4 பில்லியன் வருடங்களுக்கு முன்னரே “பிரிமொர்டியல் சூப்” எனப்படும் ஆதிகால மூலக்கூற்று கலவையில் இருந்து ஒரு கல அங்கிகள் தோன்றிவிட்டன, ஆனால் 2 வருடங்களுக்கு முன்னர் வரையான காலப்பகுதியில் வாழ்ந்த பலகல அங்கியின் புதை படிவமே எமக்குக் கிடைத்த ஆதிகால பலகல அங்கிகளின் முதல் சான்றாகும். இந்த உயிரினத்தை Grypania spiralis என பெயரிட்டுள்ளனர்.
இதன் பின்னர் கிட்டத்தட்ட 550 மில்லியன் வருடங்களுக்கு பிறகே வேறு பல கல அங்கிகளின் புதை படிவம் எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே 2 பில்லியன் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த Grypania spiralis என்கிற உயிரினம் தனித்துவமானதாக இதுவரை இருந்தது, ஆனால் தற்போது கண்டறியப்பட்ட புதை படிவம், Grypania spiralis மட்டும் அக்காலகட்டத்தில் வாழவில்லை, மாறாக பல்வேறு பட்ட பலகல அங்கிகள் அக்காலகட்டத்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்று நமக்குச் சொல்கிறது. இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால், Grypania spiralis வை விட தற்போது கண்டறியப்பட்ட உயிரினம் சில நூறு மில்லியன் வருடங்கள் பழமையானது.
இன்னொரு முக்கிய விடையம் இந்த உயிரினங்கள் தோன்ற சில மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் “பெரும் ஆக்சிடேசன் நிகழ்வு” எனப்படும் பூமியின் வரலாற்றில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு ஆரம்பமாகியது. திடிரென பல்கிபெருகிய ஒளித்தொகுப்பு செய்யக்கூடிய சயானோபாக்டீரியாக்கள் பூமியின் வளிமண்டலத்தையே மாற்றிப்போட்ட நிகழ்வு இது. இக்காலகட்டத்திலேயே அல்மோஸ்ட் ஆக்ஸிஜன் இல்லாமலே இருந்த வளிமண்டலத்தில் புதிதாக ஆக்ஸிஜன் வாயு சேர்க்கப்பட்டு சுவாசிக்கக்கூடிய அளவிற்கு வளிமண்டல வாயுக்கூறு மாற்றம் பெற்றது எனலாம்.
எனவே, இந்த பலகல அங்கிகளின் சுவடுகளின் காலப்பகுதிக்கும், அதற்கு சில பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய பெரும் ஆக்சிடேசன் நிகழ்வுக்கும் இடையில் உள்ள கால இடைவெளி சரியாகப் பொருந்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஆக்சிஜன் தோன்றிய காலப்பகுதிக்குப் பின்னரான காலகட்டத்தில் பல் இடங்களில் இப்படியான பலகல அங்கிகள் தோன்றியிருக்கவேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் வேறு இடங்களில் இருந்து எமக்கு இதுவரை எந்தவொரு புதை படிவங்களும் கிடைக்கவில்லை.