400 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு புறவிண்மீன் கோளொன்றின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோள் அண்ணளவாக நமது நெப்டியூன் அளவாகும், மற்றும் அதனது தாய் விண்மீனை மிக அருகில் சுற்றிவருகிறது.
இந்தக் கோளின் வளிமண்டலம் பெரும்பாலும் ஹைட்ரோஜன் + ஹீலியம் சேர்ந்த கலவையால் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்டளவு நீரும் இந்த வளிமண்டலத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.
அண்ணளவாக நெப்டியுனின் திணிவைக்கொண்ட இந்தக் கோள், நெப்டியுனைவிட சற்றே பெரியது. இதன் ஆரை 40,000 கிமீ, நெப்டியுனின் ஆரை 25,000 கிமீ ஆகும். HAT-P-26b எனும் விண்மீனை வெறும் நான்கு பூமி நாட்களில் இந்தக் கோள் சுற்றிவந்துவிடுகிறது.
தனது தாய் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றிவருவதால் இதன் வளிமண்டலம் விரிவடைந்திருக்கலம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் வளிமண்டல வெப்பநிலை 1,000 கெல்வின்.
ஹபிள் தொலைநோக்கி மற்றும் ஸ்பிட்சர் தொலைநோக்கி ஆகியவற்றில் இருந்து சேகரித்த தகவல் மூலம், இந்தக் கோளில் மெதேன் அல்லது கார்பன் போன்ற சேதனப்பொருட்கள் இல்லை என்பது தெரிகிறது, ஆனால் நீர் போதியளவு இருக்கிறது. மேலும் எடுத்த புகைப்படங்களில் இருக்கும் ஒளித்தெறிப்பை பார்க்கும் போது இந்தக் கோளின் வளிமண்டலத்தில் முகில்கள் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்தக் கோளின் வளிமண்டல வெப்பநிலையைப் பார்க்கும் போது இந்த மேகங்கள் நீராவியால் ஆகியிருக்க வாய்ப்பில்லை, மாறாக சல்பர் சார்ந்த மூலக்கூறுகளால் (நாக சல்பேட் அல்லது சோடியம் சல்பேட்) ஆக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam