வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தை எதிர்நோக்கும் விதைக்கிடங்கு

2008 இல் இருந்து ஆர்டிக் வட்டப்பகுதியில் இருக்கும் Svalbard என்கிற தீவுக்கூட்டத்தில் உலக விதைக்கிடங்கு இருக்கிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய பேரழிவில் இருந்து உருவாகக்கூடிய உணவுத்தட்டுபாடு மற்றும் பஞ்சம் ஆகியவற்றில் பாதுகாக்க மில்லியன் கணக்கான பயிர்களின் விதைகள் இங்கே பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

உலகில் எங்காவது பாரிய பேரழிவு இடம்பெறும் போது, மீண்டும் அங்கே உணவுப் பயிர்களை பயிரிட இங்கிருந்து விதைகள் அனுப்பப்படும். அதுதான் Global Seed Vault இன் திட்டம்.

விதைக் கிடங்கின் வாசற்பகுதி. படவிஉதவி: John Mcconnico/AP

Svalbard இன் நிரந்த உறைபனிக்கு கீழே பாறையைக் குடைந்து இந்த விதைக் கிடங்கை உருவாக்கியுள்ளனர். இங்கு 4.5 மில்லியன் வகையான பயிர்களை சேமிக்க முடியும். ஒவ்வொரு பயிரினத்தில் இருந்தும் சராசரியாக 500 விதைகள் சேமிக்கப்படலாம். ஆக மொத்தமாக 2.5 பில்லியன் விதைகளை இங்கே பாதுகாப்பாக சேமிக்க முடியும்.

தற்போதைக்கு இந்தக் கிடங்கில் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து பெறப்பட்ட 864,309 வகையான விதைகள் சேமிக்கப்பட்டுள்ளன.

ஆர்டிக் வட்டத்தில் உள்ள பிரதேசத்தில் இந்த கிடங்கை உருவாக்கக் காரணம் இங்கு நிலவும் வெப்பநிலை -18 பாகை செல்சியஸ். இது பயிர் விதைகளை சிறந்த நிலையில் நீண்ட காலத்திற்கு சேமிக்க உதவுகிறது. தற்போது இங்கே தான் பிரச்சினை உருவாகியுள்ளது. உலக வெப்பநிலை மாற்றம் என்னும் அரக்கன் இந்த விதைக்கிடங்கிலும் கைவைக்க வந்துவிட்டான்.

5017
விதைக் கிடங்கினுள் விதைகள் சேமிக்கப்பட்டுள்ள விதம். படவுதவி: Jens Buttner/dpa/Alamy

ஆர்டிக் பகுதியில் அதிகரிக்கும் வெப்பநிலை அங்குள்ள நிரந்த உறைபனியை உருக்குகிறது. இந்த வருடத்தில் ஆர்டிக்கின் வெப்பநிலை இதுவரை நாம் அளந்த வெப்பநிலையில் இரண்டாவது அதிகமான வெப்பநிலையாகும். 2016 இன் குளிர்கால வெப்பநிலையே இதுவரை நாம் அளந்த ஆர்டிக் வெப்பநிலையில் மிகவும் அதிகமானது.

இன்னும் குறிப்பாக கூறவேண்டும் என்றால், 2013/2014 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, Svalbard பிரதேசத்தின் சராசரி வெப்பநிலை 4 பாகை செல்சியசிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பால் உருகிய பனி விதைக்கிடங்கிற்கு செல்லும் பாதையை மூடி மீண்டும் உருகிவிட, அதனை உடைத்துவிட்டே விதைக்கிடங்கினுள் செல்லவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. ஆனால் உருகிய நீர் கிடங்கினுள் செல்லவில்லை என்பது ஒரு நற்செய்தி.

நோர்வே அரசாங்கத்தின் கருத்துப் படி, தானியங்கியாக செயற்படுமாறு வடிவமைக்கப்பட்ட இந்த விதைக்கிடங்கை தற்போது 24 மணிநேரமும் கண்காணிப்பில் வைக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் மீண்டும் இப்படியான ஆபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க விதைக்கிடங்கின் வாசல் மற்றும் உட்புறப்பகுதிகளை நீர்புகாவண்ணம் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தகவல்: theguradian


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam