ஆகஸ்ட் 2016 – ஆர்டிக் வட்டப் பிரதேசத்தினுள் இருக்கும் வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஒரு பையன் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறான். சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறான். அவனைப்போலவே தொன்னூருக்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர், அதில் ஐம்பதிற்கும் அதிகமானோர் சிறுவர்கள். இந்தப் பையன் இறக்க காரணமாக இருந்ததும், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட காரணமாக இருந்ததும் அந்திராக்ஸ் எனப்படும் ஒரு தொற்றுநோய், இதனை Bacillus anthracis எனும் பக்டீரியா தோற்றுவிக்கிறது. திடிரென வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஆந்திராக்ஸ் தொற்று உருவாகக் காரணமென்ன?
ஆய்வாளர்களின் கருத்துப்படி, 1941 இல் இந்தப் பிரதேசத்தில் ஆந்திராக்ஸ் தொற்று பரவியுள்ளது, அந்தக் காலப்பகுதியில் அந்திராக்ஸ் தொற்றுக்கு உள்ளாகி இறந்த கலைமானொன்று பனியில் உறைந்து நிரந்தரப்பனி எனப்படும் பனி மணலின் கீழே புதையுன்று இருந்துள்ளது. 2016 கோடைகால வெப்பநிலை அதிகரிப்பு இந்த நிரந்தரப் பனி மணலை உருக்கவே உறைந்திருந்த கலைமானின் உடல் வெளியே வந்து அந்த உடலில் உறைந்திருந்த ஆந்திராக்ஸ் மணலிலும் நீரிலும் கலந்துள்ளது. இது அப்பிரதேசத்தில் இருந்த 2000 இற்கும் அதிகமான கலைமான்களில் தொற்றி இறுதியாக சிறியளவு மக்களிலும் தொற்றியுள்ளது.
ஆய்வாளர்கள் இந்த நிகழ்வு தனிப்பட்ட நிகழ்வாக இருக்காது என்றும், இதுபோல பல நிகழ்வுகள் இனி நடைபெற வாய்ப்புக்கள் அதிகம் என்றும் கருதுகின்றனர். காரணம் உறைந்திருக்கும் நுண்ணுயிர் அரக்கர்கள் விழிக்கும் நேரமிது!
வரலாற்றை எடுத்துப் பார்த்தால், மனிதன் உருவான காலத்திற்கு முன்னிருந்தே பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இந்த உலகை ஆண்டுள்ளன, ஆகவே மனிதனும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்த பரிமாணவளர்ச்சி அடைந்துள்ளான்.
கொள்ளைநோய் (plague) தொடக்கம் பெரியம்மை (smallpox) வரை இவற்றில் இருந்து பாதுகாக்க எதிர்ப்புசக்தியை மனிதனின் உருவாக்கியுள்ளான். அதற்கு ஏற்றாப்போல இந்த நுண்ணுயிர்களும் புதிய வகையில் மனிதனை தாக்க பரிமாணித்துள்ளன.
அலக்சாண்டர் பிளெமிங் பென்சிலின் எனும் பக்டீரியகொல்லிகளை / ஆண்டிபயோடிக்ஸ்சை கண்டுபிடித்ததில் இருந்து இன்று நூற்றாண்டுக்கு மேலாக நாம் பல்வேறுபட்ட பாக்டீரிய தடுப்புகளை உருவாக்கியுள்ளோம். அதற்கு தகுந்தவாறு பக்டீரியாக்களும் இந்த ஆண்டிபயோடிக்ஸ்சை எதிர்க்கும் வல்லமையை உருவாக்கியுள்ளது.
ஆகவே தெரிந்த பாக்டீரியாக்களுக்கும் அவற்றுக்கான தடுப்புமுறைகளுக்குமான போட்டி நடந்தேறிக்கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் இன்னொரு ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக இல்லாதிருந்த அல்லது இதற்கு முன்னர் நாம் சந்திக்காத பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் திடிரென நம்முன் வந்தால் எம்மால் என்ன செய்யமுடியும்? சிக்கல் என்னவென்றால் இந்தப் பரிசோதனையை செய்துபார்க்க இயற்கை துணிந்துவிட்டது என்பதுதான் நிதர்சனம்.
இந்த காலநிலை மாற்றம் நிரந்தர உறைபனியை (permafrost) கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கின்றது. இந்த உறைபனிக்கு கீழே ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான வருடங்களாக உறைந்த நிலையில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் விழித்துக்கொள்ளும் நேரம் நெருங்குகிறது – இதற்கு எடுத்துக்காட்டுத்தான் அந்த சைபீரிய நிகழ்வு.
பூமியின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க மேலும் பல்வேறு இடங்களில் உள்ள நிரந்தர உறைபனி கரையத்தொடங்கும். சாதாரண கோடை காலங்களில் 50cm வரையான உறைபனி கரையும், ஆனால் காலைநிலை மாற்றத்தால் உருவான அதிகளவான வெப்பநிலை மாற்றம் இன்னும் அதிகளவு உறைபனியை உருக்குகிறது, அதாவது இது ஆதிகால நிரந்தர உறைபனியை உருக்குகிறது.
நிரந்தர உறைபனியால் பாக்டீரியாக்களை நீண்டகாலத்திற்கு பாதுகாத்து வைத்திருக்கமுடியும். சில பல ஆயிரம் வருடங்கள் அல்ல, மாறாக மில்லியன் வருடங்களுக்கும் அதிகமாக பாக்டீரியாக்களால் இந்த நிரந்தர உறைபனியில் அடங்கியிருக்கமுடியும்.
ஆகவே தற்போதைய நிலையில் உருகும் நிரந்தர உறைபனி எண்ணிலடங்கா நோய்களை தோற்றுவிக்கக்கூடிய பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் வெளியிடக்கூடும்!
ஆர்டிக் வட்டத்தின் வெப்பநிலை மிகவேகமாக அதிகரிக்கிறது, பூமியின் மற்றைய பாகங்களைவிட ஆர்டிக் வட்டத்தில் வெப்பநிலை மூன்று மடங்கு வேகத்தில் அதிகரிக்கிறது. இதற்கு முன்னர் உருகியே இருக்காத நிரந்தர உறைபனிப் பிரதேசங்கள் இங்கு தற்போது உருகத் தொடங்குகிறது.
இதற்கு முன்னர் ஆதிகாலத்தில் உயிரினப் பேரழிவுகளுக்கு காரணமான அரக்கர்கள் இங்கே உறங்கிக்கொண்டிருக்கலாம். பரிமாண உயிரியலாளர் Jean-Michel Claverie யின் கருத்துப்படி, நிரந்தர உறைபனி வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு நல்ல இடம், காரணம் இங்கு ஆக்ஸிஜன் இல்லை மற்றும் ஒளியும் இல்லை.
20ஆம் நூற்றாண்டில் மட்டுமே மில்லியனுக்கும் அதிகமான கலைமான்கள் ஆந்திராக்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளன. ஆழமான புதைகுழிகளை தோண்டுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்லாததால், இறந்த கலைமான்களில் பல ஆழமில்லாத குழிகளில் புதைக்கப்பட்டுள்ளன. அண்ணளவாக வடக்கு ரஸ்சியப பிரதேசங்களில் மட்டுமே 7000 இற்கும் அதிகமான இப்படிப்பட்ட புதைகுழிகள் உண்டு.
ஆந்திராக்ஸ் நோய்க்கு மருந்து உண்டு. ஆனால் ஆய்வாளர்களின் பயமே, வேறு என்ன நுண்ணங்கிகள் இந்த உறைபனியில் இருக்கும் என்பதே!
மனிதர்களும் விலங்குகளும் இந்த நிரந்தர உறைபனியில் நீண்ட காலமாக இறந்து புதைந்துள்ளனர். எனவே கரையும் உறைபனி தொற்றுநோய்க்கான காரணிகளை வெளிக்கொண்டுவரலாம். உதாரணமாக 1918 இல் பரவிய Spanish flu வைரஸின் RNA எச்சங்கள் அலாஸ்கா பகுதியில் புதைக்கப்பட்ட சடலங்களில் இன்னும் எஞ்சியிருப்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைப்போலவே கொள்ளைநோய், மற்றும் பெரியம்மை போன்ற நோய்களின் காரணகர்த்தாக்கள் இன்னும் சைபீரிய உறைபனிக்குள் புதைந்திருக்கலாம்.
ரஸ்சிய சயின்ஸ் அகடமியை சேர்ந்த போரிஸ் றேவிக் மற்றும் மரீனா போடோல்னியா 2011 இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் மனித இனத்தை பெரிதும் தாக்கிய தொற்றுநோய்கள் இந்த உருகும் பனியால் மீண்டும் வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது எனக் கூறியுள்ளனர்.
1890 இல் சைபீரியாவை பெருமளவில் தாக்கிய சின்னம்மை காரணமாக ஒரு ஊரில் 40% இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இவர்களை கொலிமா ஆற்றுப்பகுதியில் இருக்கும் உறைபனியின் கீழே அக்காலத்தில் புதைத்தனர். ஆனால் 120 வருடங்களின் பின்னர், அதாவது இன்று வெப்பநிலை அதிகரிப்பால் உறைபனி உருகி உருவான வெள்ளப்பெருக்கில் கொலிமா ஆற்றுப்பகுதியில் மண்ணரிப்பு வீதம் தற்போது அதிகரித்துள்ளது. உருகும் நிரந்தர உறைபனி இந்த செயன்முறையை முடுக்கிவிட்டுள்ளது.
2005 இல் நாசா விஞ்ஞானிகள் செய்த ஆய்வின் போது அலாஸ்கா நீர்நிலையில் 32,000 வருடங்களாக உறைந்திருந்த பாக்டீரியாவை வெற்றிகரமான முறையில் மீண்டும் அவர்களால் உயிர்பிக்கமுடிந்துள்ளது! Carnobacterium pleistocenium எனப்படும் இந்த பாக்டீரியா வூலிமமத் உலகில் நடமாடித்திரிந்த காலத்தில் உறைந்துள்ளது. மீண்டும் பனி கரைந்தவுடன் அவற்றால் மீண்டும் பழைய உயிர்ப்பான நிலைக்கு உடனடியாக வரமுடிந்துள்ளது.
மீண்டும் 2007 இல் விஞ்ஞானிகள் 8 மில்லியன் வருடங்களாக அண்டார்டிக்கா பிரதேசத்தில் உறைந்திருந்த பாக்டீரியாவை உயிர்பித்துள்ளனர். ஆனால் இதில் தெளிவான விடயம் ஒன்று, எல்லா பாக்டீரியாக்களும் உறைந்த நிலையில் இருந்து மீண்டும் உயிர்ப்படைவதில்லை. ஆந்திராக்ஸ் பாக்டீரியாவால் மீண்டும் உயிர்ப்படையக்கூடியவாறு இருக்கக்காரணம் அது தன்னைச் சுற்றி வித்துக்களை உருவாக்குகின்றது. இந்த வித்துக்கள் மிகவும் கடினமான சூழலையும் தாங்கக்கூடியான.
சில பங்கஸ் வகை உயிரினங்களும் மற்றும் சில வைரஸ்களும் பனியில் நீண்டகாலத்திற்கு உறைந்த நிலையில் இருந்து மீண்டும் பனி கரைந்தவுடன் உயிர்ப்படையக்கூடிய வல்லமையைக் கொண்டுள்ளன.
பாக்டீரியாக்களை மீண்டும் உயிர்பித்தது போலவே, விஞ்ஞானிகள் சைபீரிய நிரந்தர உறைபனிக்குள் நூறடி ஆழத்தில் 30,000 வருடங்களாக உறைந்திருந்த இரண்டு வைரஸ்களை மீண்டும் உயிர்பித்துள்ளனர். Pithovirus sibericum மற்றும் Mollivirus sibericum என்ற இந்த இருவகை வைரஸ்களும் பெரிய வைரஸ்களாகும். இவற்றை ஒளி நுணுக்குக்காட்டிகள் கொண்டே பார்க்கமுடியும்.
இந்த வைரஸ்கள் மீண்டும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவரப்பட்டவுடன் உடனடியாக தொற்றுதல் நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த வைரஸ்கள் ஒருகல அமீபாவையே தொற்றுகின்றன. ஆனாலும் இந்த ஆய்வில் இருந்து நமக்கு ஒரு விடயம் தெளிவாகிறது. அதாவது, பல வருடங்களாக நிரந்த உறைபனிக்குள் அடங்கியிருந்த வைரஸ்கள் உயிர்ப்படைந்தவுடன் தனது தொற்றுதல் வேலையை தொடங்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே மனிதனைத் தாக்கக்கூடிய வைரஸ்களும் இந்தப் பனிக்குள் புதைந்திருக்கலாம், அவை மீண்டும் வெளியே வந்தால் உடனடியாக தொற்றுதல் வேலையை ஆரம்பிக்கலாம்.
வெப்பநிலை அதிகரிப்பு நேரடியாக நிரந்தர உறைபனியை உருக்கித்தான் ஆபத்தை விளைவிக்கவேண்டும் என்று இல்லை; தற்போது உருகும் ஆர்டிக் வட்டப் பிரதேசத்தால் வடக்கு சைபீரிய பிரதேசத்தை கடல்வழி மார்க்கமாக அடையக்கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாக இங்கு தாதுப்பொருட்கள், தங்கம் மற்றும் பெற்றோலிய எண்ணெய் மற்றும் வாயு ஆகியவற்றை எடுப்பதற்காக ஆழமான துளைகள் இடப்படுகின்றன. இதில் பிரச்சினை என்னவென்றால் நாளை இந்த கணியங்களை எடுப்பதற்காக துளைகள் மூலம் ஆழமான பழைய நிரந்தர உறைபனிப் பிரதேசத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் வஸ்துக்களில் தப்பித்தவறி ஏதாவது ஒரு சில பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் மனிதனுக்கு ஆபத்தான தொற்றை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால் அந்த நிகழ்வு மிகப்பெரிய ஆபத்தில் சென்று முடியும்.
ஆர்டிக் பகுதியில் முதன் முதலில் வாழ்ந்து அழிந்த மனிதனில் வாழ்ந்த மற்றும் மனிதனை அழித்த வைரஸ்கள் மீண்டும் வெளிவரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் நியன்டதால், தேனிசோவேன் போன்ற முற்றாக அழிந்து போன மனித இனத்தில் இருந்த வைரஸ்களும் இன்னும் இந்தப்பகுதியில் இருக்கலாம். புதைபொருள் ஆல்வில் சைபீரிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 30,000 – 40,000 வருடங்கள் பழமையான நியன்டதால் எச்சங்களை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் பல்வேறுபட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு ஆளாகியிருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இனமழிந்துபோன நியன்டதாலில் இருந்து எம்மால் வைரஸ்களை எடுக்கக்கூடியவாறு இருப்பது நமக்கு சொல்லும் உண்மை பூமியில் இருந்து வைரஸ்களை முழுதாக அழிப்பது என்பது முடியாத காரியம், ஆகவே எப்போதும் வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாராக இருக்கவேண்டும் என்பது பரிமாண உயிரியலாளர் மைக்கல் கல்வேரியின் கருத்து. 30,000-பழமையான பெரிய வைரஸ்கள் இரண்டை மீண்டும் உயிர்பித்த ஆய்வுக்குழுவை வழிநடத்தியவர் இவர்.
2014 இல் இருந்து கல்வேரி நிரந்தப்பனியின் அடுக்குகளில் இருக்கும் DNA கட்டமைப்புகளை ஆய்வுசெய்துகொண்டு இருக்கிறார். மனிதனில் தொற்றக்கூடிய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இங்கு இருக்குமா என்பதே இவரது ஆய்வின் நோக்கம். இவரது ஆய்வின் முடிவுகள் ஒன்றும் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை; காரணம், நிறைய பாக்டீரியாக்கள் மனிதனைத் தொற்றக்கூடிய பண்புகளோடு காணப்படுகின்றன. ஆனால் இதில் எந்தவொரு பக்டீரியாக்களையோ அல்லது வைரஸ்க்களையோ மைக்கல் கல்வேரியின் குழு மீண்டும் உயிர்பிக்க முயற்சிக்கவில்லை. (எதுக்கு தேவையில்லாத வம்பு என்றுதான்!)
சரி இதிலிருந்து எப்படியான முடிவுக்கு வரலாம் என்பது அடுத்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியாத விடயம். சில உயிரியலாளர்கள் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக, வெப்பக் காலநிலையில் காணப்படும் கொலரா, மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் இனி வடக்குப் பிரதேசத்தில் இருக்கும் குளிரான நாடுகளுக்கும் வரலாம் என்று கருதுகின்றனர்.
கல்வேரியின் வார்த்தையில் கூறவேண்டும் என்றால், இந்த காலநிலை மாற்றம் காரணமாக உறங்கிக் கொண்டிருக்கும் அரக்கர்களை சுரண்டி எழுப்பும் வேலை தொடங்கிவிட்டது. எப்படியான வைரஸ்கள் / பாக்டீரியாக்கள் இதிலிருந்து வெளிவரலாம் என்று கூறமுடியாது. இதுவரை மனிதன் பார்க்காத தொற்றாக இருந்தால் மனிதனின் நோய் எதிர்ப்புசக்தி மூலம் அதனை தடுப்பது முடியாத காரியமாக இருக்கும்.
தகவல் மற்றும் படங்கள்: BBC Earth
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam