நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்

ஜூலை 10: தலை சிறந்த விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லாவின் (1856 – 1943) பிறந்த நாள். சைபீரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா என்கிற கனவு தேசத்திற்கு வந்து, நாமெல்லாம் நன்றாக இன்று தெரிந்துவைத்திருக்கும் தாமஸ் எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்த இந்த மனிதனை அறிந்தவர் சிலரே.

நாமின்று உலகெங்கும் பயன்படுத்தும் AC மின்சாரத்தின் தந்தை. முதலாவது AC மோட்டரை உருவாகியது மட்டுமல்லாது, AC மின்சாரத்தை நீண்ட தொலைவிற்கு விநியோகிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியவர்.

72053.jpg

எடிசனிடம் வேலை செய்யும் போது, ஒரு முறை எடிசனின் DC மோட்டரின் திறனை அதிகரிக்கும் படி மாற்றம் செய்தால் எடிசன் 50,000 அமெரிக்க டாலர்களை தருவதாக டெஸ்லாவிற்கு வாக்களித்தார். பல மாதங்களின் கடின உழைப்பிற்கு பின்னர் டெஸ்லா திறன் வாய்ந்த புதிய மோட்டரின் அமைப்பைக் காட்டி எடிசனிடம் பணத்தை கேட்டதற்கு, எடிசன் “காமடியா சொன்னதெல்லாம் சீரியஸா எடுக்ககூடாது தம்பி” என்று கூற, எடிசனின்வேலையில் இருந்து டெஸ்லா நின்றுவிட்டார்.

மீயுயர் மின்னழுத்த மின்மாற்றி, எக்ஸ் கதிர் போன்ற பல தொழில்நுட்பங்களில் தனது கண்டுபிடிப்புக்களை நிலைநாட்டியவர். ரேடியோவைக் கண்டு பிடித்த மார்க்கோனி, ரேடியோவைக் “கண்டு பிடிக்க” இரண்டு வருடங்களுக்கு முன்னரே, குறுந்தூர ரேடியோ தொழில்நுட்பத்தில் சிறிய படகை ரிமோட் மூலம் செலுத்திக்காட்டியவர்.

மார்க்கோனிக்கு ரேடியோவைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு 1911 இல் வழங்கப்பட முன்னரே, “மார்கோனி நல்ல மனிதர், அவரது வெற்றிப்பாதையில் அவர் தொடரட்டும், என்னுடைய 17 காப்புரிமைகளை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார்” என்று பெரியமனதாக விட்டுக்கொடுத்த மாமனிதர் என்றும் சொல்லலாம்.

Tesla_colorado
டெஸ்லா அவரது ஆய்வுகூடத்தில் டெஸ்லா சுருள் மூலம் உருவாக்கிய செயற்கை மின்னலுக்கு அருகில் இருந்து புத்தகம் படிக்கும் போது.

டெஸ்லா இறந்து ஆறு மாதங்களின் பின்னரே, அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மார்கோனியின் ரேடியோ காப்புரிமையை செல்லுபடியாகாது என்று ரத்து செய்து, மீண்டும் டெஸ்லாவிற்கே காப்புரிமையை வழங்கியது.

நோபல் புகழால் மார்கோனியை ரேடியோவின் கண்டுபிடிப்பாளராகஇன்று பலருக்கும் தெரியும், ஆனால் வெகு சிலருக்கே டெஸ்லாவையும் ரடியோவின் ஆரம்பமும் தெரியும்!

ரேடார் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். 1935 இல் Robert A. Watson கண்டறிந்ததாக இன்று நமக்குத் தெரியும். ஆனால் ரேடார் என்ற ஒன்றை உருவாக்கலாம் என்று 1917 லேயே ஐடியாவை உருவாக்கியவர். அந்த ஐடியாவில் மண்ணை அள்ளிப்போட்ட பெருமை நம்ம சார் எடிசனையே சாரும்!

எக்ஸ் கதிர்? நோ ப்ரோபளம் டெஸ்லா!

முதலாவது நீர் மின்சார நிலையம்? நிகோலா டெஸ்லா!

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து மின்னணு சாதனங்களும், உங்கள் ஸ்மார்ட்போன் லேப்டாப் மற்றும் கணனிகள் உட்பட, அனைத்திற்கும் வித்திட்டது திரான்சிஸ்டர் (transistor) அதற்கான மூல வித்திற்கான காப்புரிமையை 1989 லேயே வைத்திருந்தவர் நம்ம தல டெஸ்லா!

screen shot 2013-08-08 at 2.59.40 pm
ஐன்ஸ்டீன் பின்னால் டெஸ்லா

நியோன் மின்குமிழ், ரெமொர்ட் கண்ட்ரோல், நவீன மின் மோட்டார், வயர்லஸ் தொழில்நுட்பம் என்று எல்லாவற்றையும் தொட்டுவிட்டு, மிகப்பெரும் பணக்காரராக உலா வந்தார் என்று நீங்கள் கருதினால் அங்கேதான் விதி தனது வேலையை செவ்வனே செய்து முடித்தது.

தனது காலத்திற்கு மிஞ்சிய தொழில்நுட்பங்களை அவர் உருவாக்கியதாலோ என்னவோ அன்று மக்களுக்கு அவர் ஒரு பைத்தியக்காரராக தெரிந்தார். மின்குமிழ் தேவைப்பட்ட காலத்தில் யார் WI-FI வேண்டும் என்று எதிர்பாத்திருப்பர்கள்? காலத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்களை இந்த உலகம் என்றுமே விட்டுவைத்தில்லை; அதற்கு நிகோலா டெஸ்லாவும் விதிவிலக்கல்ல.

nikola_tesla_last_image
டெஸ்லா: இறுதிக்காலத்தில் (1943)

இறுதியில் கடனாளியாக வெறும் பாலும், பிஸ்கட்டும் மட்டுமே உண்டு நியூயார்க் நகரத்தில் ஒரு ஓட்டல் அறையில் தனிமையில் 87 ஆவது வயதில் தனது உயிரை விட்டவர்.

டெஸ்லா பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

புதுப்பிக்ககூடிய சக்தி முதல்களை உருவாக்க ஆர்வம் காட்டியவர். பூமியில் இருந்தும் வானில் இருந்தும் இயற்கையாக முடிவில்லா சக்தியை பெறமுடியும் என்று நம்பி பல ஆய்வுகளை செய்தவர்.

ஒரு பேட்டியில், நாளுக்கு 2 மணிநேரங்கள் மட்டுமே உறங்குவதாக டெஸ்லா கூறினார், அப்பப்போது சில நிமிட குட்டித் தூக்கம் போடுவது வழக்கம்!

இலக்கம் மூன்று மீது அலாதி பிரியம் கொண்டவர், நகைகள் அல்லது அலங்காரப் பொருட்களை அறவே தொடமாட்டார்.

டெஸ்லா இறந்தபோது (1943) அமெரிக்க அரசு இவரது ஆய்வுப் பொருட்கள் மற்றும் தகவல்களை கைவசப்படுத்தியது. பல வருடங்களின் பின்னர் இவரது பொருட்கள் மீண்டும் அவரது குடும்ப அங்கத்தவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவற்றில் பல இன்று டெஸ்லா நூதனசாலையில் இருக்கின்றன.

தன்மேல் நம்பிக்கை கொண்டால் எதுவும் சத்தியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நம்ம நிகோலா டெஸ்லா. ஜூலை 10 அவரது பிறந்த தினம்.

தகவல்கள்:
http://theoatmeal.com/comics/tesla
https://www.history.com/topics/inventions/nikola-tesla
http://news.nationalgeographic.com/news/2013/10/131003-nikola-tesla-surprising-facts-statue-museum-science/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam