2009 இல் அமெரிக்காவில் ஒரு தாய் எட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து உலகசாதனை படைத்தார்.
விலங்கு இராச்சியத்தில் அதிகூடிய குழந்தைகளை சுமக்கும் உலக சாதனையைக் கொண்டிருப்பவர் கடல் குதிரை. இதனால் ஒரே தடவையில் 2000 வரையான குழந்தைகளை சுமக்க முடியும்! எப்படியிருப்பினும் ஆண்டின் சிறந்த தாய் என்கிற பெருமை நெபுலாக்களையே சாரும்.
நெபுலாக்கள் விண்வெளியில் காணப்படும் தூசு மற்றும் வாயுக்களால் உருவானவை. இவற்றில் இருந்து பில்லியன் கணக்கான விண்மீன்கள் பிறக்கும். கடல் குதிரையைப் போலவே, விண்மீன்களும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுடன் பிறக்கின்றன. இவை அனைத்துமே ஒரே வாயுத் திரளில் ஒரே நேரத்தில் பிறந்தவை.
இந்தப் புகைப்படம் பிரபஞ்சத்தில் காணப்படும் புகழ்மிக்க விண்மீன்கள் உருவாகும் வாயுத் திரள் பிரதேசமான ஓரையன் நெபுலாவாகும். படத்தில் ஒளிரும் வாயுத்திரளாக நெபுலாவையும் அதில் பிறந்துகொண்டிருக்கும் விண்மீன்களையும் உங்களால் பார்க்கமுடியும்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதர்கள் ஓரையன் நேபுலாவைப் பார்த்து வியந்துள்ளனர். ஆனாலும் இன்றுவரை இதிலிருந்து புதிய ரகசியங்களை நாம் கண்டரிந்துகொண்டே இருக்கின்றோம். இந்த நெபுலாவின் புகைப்படத்தைக் கொண்டு இந்த நெபுலாவின் பிரகாசத்தையும் அதிலுள்ள விண்மீன்களின் நிறங்களையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த விண்மீன்களின் வயதை மிகத் துல்லியமாக இவர்களால் கணக்கிடமுடிந்துள்ளது.
இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், இங்கிருக்கும் விண்மீன்கள் எல்லாமே ஒரே வாயுத் திரளில் இருந்து (ஓரையன் நெபுலா) பிறந்து இருந்தாலும், இவை மூன்று குழுக்களாக இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் வேறுபட்ட காலங்களில் பிறந்துள்ளன. ஆகவே இந்த விண்மீன்கள் எல்லாமே ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும், வேறுபட்ட வயதைக் கொண்ட உடன்பிறப்புகள். இந்தக் குழுக்களின் வயது வித்தியாசம் மூன்று மில்லியன் வருடங்களுக்கும் குறைவே!
வின்னியலைப் பொறுத்தவரை இந்த ஆய்வின் முடிவுகள் முக்கியமானவை, காரணம், விண்மீன் கொத்துக்களில் இருக்கும் விண்மீன்கள் அனைத்தும் ஒரே காலத்தில் பிறந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து எமக்கு புலப்படுகிறது அல்லவா?
மேலதிக தகவல்
இந்த மூன்று குழுக்களில் இருக்கும் விண்மீன்கள் வேறுபட்ட வேகங்களில் சுழல்கின்றன என்றும் இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இளமையான விண்மீன்கள் அதிகளவு சக்தியைக் கொண்டிருப்பதால் வேகமாக சுழல்கின்றன, அதேவேளை வயதான விண்மீன்கள் மெதுவாக சுழல்கின்றன.
இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.
http://www.unawe.org/kids/unawe1723/
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam